Published:Updated:

`கோட் சூட் யாருக்கு பொருத்தமாக இருக்கிறது?'- மதுரையில் கலகலத்த திண்டுக்கல் சீனிவாசன்

நாங்களெல்லாம் நிறம் மாறாத பூக்கள். இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அமித் ஷா பேசியதில் என்ன தவறு?

admk meetting
admk meetting ( e.j.nanthakumar )

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, பொதுக்கூட்டங்களை தமிழகம் முழுதும் அ.தி.மு.க-வினர் நடத்தி வருகிறார்கள். இதில், அண்ணாவின் புகழைப் பேசுகிறார்களோ இல்லையோ, எட்டப்படியைப் புகழ்ந்தும், தி.மு.க-வை வசைபாடுவதையும் தவறாமல் செய்கிறார்கள் என கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசிக்கொள்கிறார்கள். இதற்கிடையே, மதுரை மூன்று மாவடியில், அண்ணா பிறந்தநாள் விழா நடந்தது.

Dindigul Srinivasan
Dindigul Srinivasan

விழாவில் பேசிய ராஜன் செல்லப்பா, "வெளிநாட்டுக்கு எவ்வளவோ தலைவர்கள் போயிருக்கிறார்கள். கலைஞர், ஸ்டாலின் எல்லாம் கோட் சூட் போட்டிருக்கிறார்கள். ஆனால், எடப்பாடியார் கோட் போட்டதுதான் சூட்டாக இருந்தது. அதைத்தான் மக்கள் பேசுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து பொறுக்க முடியாமல், ஸ்டாலின் புலம்பிக்கொண்டே இருப்பார்'' என்றார்.

அமைச்சர் செல்லூர் ராஜு, ''அண்ணாவை தி.மு.க-வினர் மறந்து விட்டார்கள். மேடைகளில் ஸ்டாலின், உதயநிதி படத்தை மட்டும் வைக்கிறார்கள். அ.தி.மு.க மட்டும்தான் அண்ணாவைக் கொண்டாடுகிறது. நாங்களெல்லாம் நிறம் மாறாத பூக்கள். இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அமித் ஷா பேசியதில் என்ன தவறு? இந்தி விழாவில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அப்படிப் பேசினார். அவர் இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என சொன்னதில் என்ன தவறு?

Dindigul Srinivasan
Dindigul Srinivasan

மோடி, தமிழைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். என்றாவது காங்கிரஸ் தலைவர்கள் தமிழைப் புகழ்ந்து பேசியதுண்டா? டி.ஆர். பாலு அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலையில் இந்தியை அழிக்கவில்லை. அன்றைக்கு உங்களுக்கு தமிழ் உணர்வு இல்லையா? இப்போது போராட்டம் என்று இளைஞர்களுக்கு தமிழ் வெறியை ஊட்டுகிறார்கள்'' என்றார்.

திண்டுக்கல் சீனிவாசன், ''தினகரனும் ஸ்டாலினும் இணைந்து அ.தி.மு.க அரசை கவிழ்க்க முயற்சி செய்தார்கள். ஸ்டாலின் முதல்வர், தினகரன் துணைமுதல்வர் என்று திட்டமிட்டிருந்தார்கள். அது நடைபெறவில்லை. 5 எம்.எல்.ஏ-க்கள் இங்கிருந்து போனால், தி.மு.க-வினர் 10 பேர் இங்கே வர தயாராக இருந்தார்கள். அதனால்தான் ஆஃப் ஆனார்கள்.

sellur raju
sellur raju

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல்மூலம் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை. துரைமுருகனின் சொந்த ஊரில் அ.தி.மு.க அதிக ஓட்டுகள் வாங்கியது. கோட் சூட், எடப்பாடிக்கு சூட்டாக இருக்கிறது என்று ராஜன் செல்லப்பா பேசினார். அது உண்மைதான், எடப்படியார் சாமுத்ரிகா லட்சனம் பொருந்தியவர்'' என்று பேசி கட்சியினரை அதிர வைத்தார்.