Published:Updated:

அண்ணாமலை அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்! - இயக்குநர் பேரரசு பளிச்

இயக்குநர் பேரரசு
பிரீமியம் ஸ்டோரி
இயக்குநர் பேரரசு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்குத் தலைமை என்றே யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

அண்ணாமலை அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்! - இயக்குநர் பேரரசு பளிச்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்குத் தலைமை என்றே யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

Published:Updated:
இயக்குநர் பேரரசு
பிரீமியம் ஸ்டோரி
இயக்குநர் பேரரசு

விஜய், அஜித், விஜயகாந்த் போன்ற முன்னணி கதாநாயகர்களைவைத்து மாஸ் ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பேரரசு. 2020-ல் பா.ஜ.க-வில் இணைந்து அரசியல் என்ட்ரி கொடுத்தவர், தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதிலிருந்து ஆக்டிவ் ஆகியிருக்கிறார். கட்சி நிகழ்ச்சிகள், பட வேலைகள், ட்விட்டர் பதிவுகள் என பிஸியாக இருக்கும் பேரரசைச் சந்தித்தோம்...

“முதல்வராக ஸ்டாலினின் ஓராண்டுக்கால செயல்பாடு எப்படி?”

“முதல்வரைப் பாராட்டியே ஆக வேண்டும். சவாலான கொரோனா காலத்தில் பொறுப்பேற்றவர் வயது, உடல்நிலையை மீறி உழைத்துக்கொண்டி ருக்கிறார். அவரின் செயல்பாடுகள் சிறப்பு.”

“ஆனால், உங்கள் கட்சித் தலைவர் அண்ணாமலை தினமும் ஸ்டாலினை விமர்சிக்கிறாரே?”

“எல்லாவற்றையும் முழுவதுமாக முதல்வரால் கவனிக்க முடியாது. சில விஷயங்கள் அவருக்குத் தெரியாமல் அவரை மீறியேகூட நடக்கலாம். அது தெரியவரும்போது அவர் நடவடிக்கை எடுப்பார்.”

“இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் பற்றி..?”

“அமைச்சர் சேகர் பாபுவின் நடவடிக்கைகளில் குறைசொல்வதற்கு எதுவுமில்லை. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிறைய கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. அதை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். அதேசமயம் கோயில் விவகாரங்களைப் பொறுத்தவரை தி.மு.க நல்லதே செய்தாலும் அது தவறாகத்தான் தெரியும். இதே பட்டினப்பிரவேசத்துக்கு ஜெயலலிதா இருந்து தடைவிதித்திருந்தால் பெரிய அளவில் பிரச்னை வெடித்திருக்காது; அதேபோல காஞ்சி சங்கராச்சார்யரை ஜெயலலிதாவுக்கு பதில் கருணாநிதி கைதுசெய்திருந்தால் விஷயம் வேறுவிதமாகப் போயிருக்கும். ஆக, கோயில், ஆன்மிக விஷயங்களில் தி.மு.க கவனத்துடன் செயல்பட வேண்டும்.”

அண்ணாமலை அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்! - இயக்குநர் பேரரசு பளிச்

`திரைப்படத்துறையில ஆளுங்கட்சியின் தலையீடு இருக்கிறது’ என உங்கள் கட்சியைச் சேர்ந்த ராதாரவி கூறியிருக்கிறாரே?”

“அப்படியெல்லாம் இல்லை. கொரோனா காலத்தில் படத்தை வாங்குவதற்கே ஆளில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தை வாங்குதற்குப் பெரிய போட்டி இருக்கும். இப்போது படத்தை வாங்கி ரிலீஸ் செய்வதே பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த நெருக்கடியான சூழலில் ‘சன் பிக்சர்ஸ்’, ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் படங்களை வாங்குவதைக் குறை சொல்லக் கூடாது. இந்தப் பெரிய நிறுவனங்களின் பேனர்களில் படம் ரிலீஸாகும்போது மக்களிடம் நல்ல ரீச் இருக்கிறது, நல்ல வசூலும் இருக்கிறது. சினிமாதுறைக்கு இரண்டு நிறுவனங்களும் நல்லதுதான் செய்கின்றன.”

“அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்திருக்கிறது. யார் தலைமைப் பொறுப்புக்குச் சரியானவர்?”

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்குத் தலைமை என்றே யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சசிகலா மூவரும் தலைமைப் பொறுப்புக்கு வந்தது ஒரு விபத்து. இவர்களுக்கும் மக்களுக்கும் சம்பந்தமே இல்லை; மூன்று பேருமே அ.தி.மு.க தலைமைப் பொறுப்புக்கு தகுதியற்றவர்கள்தான். அதேசமயம், இரட்டை இலைச் சின்னத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் மூன்று பேரும் ஒன்றாக வேண்டும்.”

“கடந்த எட்டு ஆண்டுகளில், மகாராஷ்டிராவைப்போல 10 மாநிலங்களில் எம்.எ.ல்.ஏ-க்களை இழுத்து ஆட்சிப்பறிப்பில் ஈடுபட்டிருக்கிறது பா.ஜ.க. இது துரோகமல்லவா?”

“யாரும் இங்கு தியாகிகள் அல்ல, இது அரசியல். ஆட்சியமைக்க சந்தர்ப்பம் வரும்போது, எதிர்த் தரப்பினர் அதற்கு இடம் கொடுக்கும்போது அந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை. குதிரைப் பேரம் நடத்துவதைத் தவறு என்று சொல்லலாம். துரோகம் என்று சொல்ல முடியாது.”

“பத்திரிகையாளர் முகமது சுபைர் கைது, சமூகச் செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் கைது என பா.ஜ.க ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“பிரதமர் ரொம்ப ‘அசால்ட்டாக’ இருக்கிறார். மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது. இன்னும் நடவடிக்கையை ‘ஸ்ட்ராங்’ செய்ய வேண்டும் என்பதே என் கருத்து. இந்தியாவுக்கு எதிராக, இந்திய இறையாண்மைக்கு எதிராக பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்து சொல்பவர்களையெல்லாம் உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என மோடி மீதே நான் குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.”

“உங்கள் ஃபேவரைட் ஹீரோவான விஜய் கட்சி ஆரம்பித்தால், போவீர்களா?”

“விஜய் `மக்கள் இயக்கம்’ எனத் தொடங்கியபோதே அவருக்கான அரசியலும் தொடங்கிவிட்டது. அவர் நேரடி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வரவேற்பேன். வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பேன், ஆனால் கட்சியில் சேர மாட்டேன். சினிமா வேறு அரசியல் வேறு. சினிமாவில் எனக்கு விஜய் சார்தான் முக்கியம். அவர் இல்லையென்றால் பேரரசு இல்லை. அதேசமயம் கொள்கைரீதியில் எனக்கு பா.ஜ.க-தான். அதைவிட்டு எங்கும் போக மாட்டேன்!”

“காமராஜருடன் அண்ணாமலையை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறீர்கள்... அவரை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்களே..?”

“அண்ணாவை பெர்னாட்ஷாவுடன் ஒப்பிட்டார்கள், எம்.ஜி.ஆரை `பாரி வள்ளல்’ என்றார்கள், காமராஜரை `தென்னாட்டு காந்தி’ என்றார்கள்... அதைப்போல மோடியை அம்பேத்கருடனும், அண்ணாமலையை காமராஜருடனும் ஒப்பிடுவதில் என்ன தவறு... அண்ணாமலை முதல்வராக வேண்டுமென்பது என் ஆசை. எடப்பாடி முதல்வராகவில்லையா... பன்னீர் முதல்வராகவில்லையா... அதைப்போல ஒரு சூழல் வரும். தி.மு.க., அ.தி.மு.க மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள், அப்போது அண்ணாமலை முதல்வராவார்.”

“சமீபத்தில் `அரபி’ படத்தில் அண்ணாமலை நடித்திருக்கிறார். அண்ணாமலையைவைத்து ஓர் அரசியல் படம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா?”

“ஹா... ஹா... அதற்கெல்லாம் அவர் சரிப்பட்டு வர மாட்டார். அரசியலுக்குத்தான் ஓ.கே. என்னுடைய படங்களில் சமூக அக்கறைதான் இருக்குமே தவிர, அரசியல் இருக்காது!”