சமூகம்
Published:Updated:

காஷ்மீர்... அமைதிக்கு இதுதான் ஒற்றைத் தீர்வா?

காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
News
காஷ்மீர்

தகவல்களும் உண்மைகளும்...

நம் தேசத்தின் வரைபடத்தில், உச்சியில் இரண்டு கொண்டைகளுடன் கம்பீரமாக இருக்கிறது காஷ்மீர். அந்த இரண்டு கொண்டைகளையும் ஆளுக்கு ஒன்றாக பாகிஸ்தானும் சீனாவும் ஆக்கிரமித்துள்ளன. நம்வசம் இருக்கும் காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, அந்த மாநிலத்துக்கு இதுவரை இருந்த சிறப்பு அந்தஸ்து, மாநில அந்தஸ்து இரண்டையும் ஒருசேர நீக்கியிருக்கிறது மத்திய அரசு. `‘இப்படிப் பிரிப்பதுதான் காஷ்மீரை தேசிய நீரோட்டத்துடன் இணைப்பதற்கான ஒரே தீர்வு’’ என்று சொல்லியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பி.ஜே.பி அரசின் பல அதிரடிகளை எதிர்த்த கட்சிகள்கூட இந்த முடிவை ஆதரித்துள்ளன. எதிர்க்கும் கட்சிகளிலிருந்துகூட இந்த முடிவுக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை, இந்த முடிவு குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. காஷ்மீரைப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கும் இந்த முடிவை எதிர்ப்பதே, இங்கு தேசபக்தியற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது.

இந்த முடிவு சரியா, தவறா என்ற விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இது, காஷ்மீர் அமைதிப் பாதைக்குத் திரும்பவும் வளர்ச்சி பெறவும் உதவுமா? காஷ்மீர் குறித்துப் பரவும் பல்வேறு தகவல்களில் எவை எவை உண்மை? பார்க்கலாம்...

தகவல்: அப்படி என்ன காஷ்மீர் மட்டும் ஸ்பெஷல்? காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் ‘ஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம்’ என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

உண்மை: இந்தியாவில் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக காஷ்மீர் மட்டுமே இல்லை. அரசியல் சட்டத்தின் 371-வது பிரிவில் வரும் எட்டுச் சட்டங்களின் அடிப்படையில் 11 மாநிலங்களுக்கு சிறப்பு உரிமைகள் தரப்பட்டுள்ளன. உதாரணமாக 371ஏ, ‘நில உரிமைகள், சமூக மற்றும் மத வழக்கங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் இயற்றும் எந்தச் சட்டமும், நாகாலாந்து மாநில மக்களுக்குப் பொருந்தாது’ என விதிவிலக்கு அளிக்கிறது. இதேபோல மணிப்பூர், மேகாலயா, அஸ்ஸாம், அருணாசலப்பிரதேசம், சிக்கிம், மிஸோரம் போன்ற மாநிலங்களுக்கு சில சிறப்பு அந்தஸ்துகள் அளிக்கப்பட்டுள்ளன (மகாராஷ்டிரா, குஜராத், கோவா, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்களின் சில பகுதிகள் தொடர்பாகவும் இப்படி சட்டங்கள் உள்ளன). இவை, ஆங்காங்கே வாழும் பூர்வகுடிகளின் நம்பிக்கை மற்றும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படும் அந்தஸ்துகள்.

காஷ்மீர்... அமைதிக்கு இதுதான் ஒற்றைத் தீர்வா?

‘எல்லோருக்கும் ஒரே சட்டம்’ எனப் பேசுகிற அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில்கூட இதுபோன்ற விதிகள் உண்டு. ‘காஷ்மீருக்கு இதுவரை இருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதுபோல, வடகிழக்கு மாநிலங்களுக்கும் நேருமா?’ என்ற அச்சம் அந்த மாநிலங்களில் எழுந்திருக்கிறது. ஆனால், ‘அரசியல் சட்டத்தின் 371-வது பிரிவுகளை நீக்கப் போவதில்லை’ என அமித் ஷா அறிவித்திருக்கிறார்.

தகவல்: இந்தியாவின் எந்தச் சட்டத்தையும் காஷ்மீர் இதுவரை ஏற்றதில்லை.

உண்மை: ‘இந்தியா முழுமைக்கும் பொருந்துகிற 106 சட்டங்கள், காஷ்மீரில் இல்லை’ என அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். குறிப்பாக, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் போன்றவை அங்கு அமலில் இல்லை. இப்படி இந்தச் சட்டங்களை ஏற்காததால் அவை சார்ந்த நிதியுதவிகளை அந்த மாநிலம் பெறவில்லை. மக்களுக்கு அவற்றின் பயன்கள் போய்ச் சேரவில்லை. குறிப்பாக, பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு அமலில் இல்லாததால், குஜ்ஜார், பக்கர்வால் போன்ற பழங்குடிகளால் வளர்ச்சி பெற முடியவில்லை. காஷ்மீர் மக்கள்தொகையில் 11.91 சதவிகிதம் பேர் பழங்குடிகள். அவர்கள் முன்னேற, இனி வாய்ப்புகள் உள்ளன.

தகவல்: சிறப்பு அந்தஸ்து பெற்றதால்தான் காஷ்மீர் வளரவில்லை. நாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் காஷ்மீர் 18-ம் நூற்றாண்டிலேயே இருக்கிறது.

உண்மை: ‘அதிக செல்லம்கொடுத்து வளர்த்ததால், பையன் கெட்டுப் போயிட்டான்’ என்று சில குடும்பங்களில் சொல்வார்களே... அதுபோன்ற வாதமாகவே இது இருக்கிறது. பலரும், பீகாரைவிட மோசமான மாநிலமாக காஷ்மீரைக் கற்பனை செய்துகொள்கிறார்கள். ஆனால், உண்மை வேறு! காஷ்மீரிகளின் சராசரி ஆயுள்காலம் 73.5 ஆண்டுகள். இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் காஷ்மீர் உள்ளது. டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகம். 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 3,060 பேருக்கு ஒரு டாக்டர் உள்ளார். இதில் இந்திய அளவில் காஷ்மீருக்கு ஆறாவது இடம். அங்கு வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் 10.35 சதவிகிதம் பேர். வறுமை குறைவான மாநிலங்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது காஷ்மீர். கல்வியறிவிலும் தனிநபர் வருமானத்திலும்கூட இந்தியாவின் தேசிய சராசரியைவிட காஷ்மீர் மேலாகவே இருக்கிறது. உண்மையில் பல வட இந்திய மாநிலங்களைவிட காஷ்மீர் வளர்ச்சி பெற்றிருக்கிறது.

தகவல்: காஷ்மீரில் நிலம் அடிமாட்டு விலைக்குக் கிடைக்கிறது. இனி வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க முடியும் என்பதால், அங்கு தொழில் வளர்ச்சி அதிகமாகும்.

உண்மை: இதேபோல கார்ப்பரேட்களுக்கு காஷ்மீரை விற்கவே மத்திய அரசு இப்படி ஒரு முடிவு எடுத்ததாகவும் சிலர் சொல்கிறார்கள். உண்மையில், காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க தடையிருந்தாலும், தொழில் நிறுவனங்களுக்கு 99 ஆண்டு குத்தகையில் ஏராளமான நிலங்கள் பல ஆண்டுகளாக வழங்கப் பட்டிருக்கின்றன. கார்ப்பரேட்களுக்கு எந்தச் சட்டமும் ஒரு பொருட்டே அல்ல. ஆனால், அங்கு நிலம் அடிமாட்டு விலைக்குக் கிடைக்கிறது என்பதெல்லாம் பொய். நகரிலும் ஜம்மு நகரிலும் வீடுகளின் விலை கிட்டத்தட்ட புனே மற்றும் பெங்களூரில் விற்கும் விலைதான். இந்த முடிவால், ஜம்மு பகுதியில் நிலம் வாங்க இப்போதுகூட சிலர் ஆசைப்படலாம். அடிப்படை வசதிகளே இல்லாத லடாக்கிலோ, ஆபத்தான காஷ்மீரிலோ முதலீடுகள் குவியாது.

தொழில் முதலீடுகள் வர வேண்டுமென்றால், அமைதியான சூழ்நிலை வேண்டும்; திறமையான மனிதவளம் இருக்க வேண்டும்; துறைமுகம், ரயில் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் வேண்டும்; தட்பவெப்பநிலை இயல்பாக இருக்க வேண்டும். இவற்றில் எதுவுமே இல்லாத காஷ்மீருக்கு, தொழில் முதலீடுகள் வராது என்பதே யதார்த்தம். அமைதியற்ற காஷ்மீரை பக்கத்தில் வைத்துக்கொண்டு, ஜம்முவிலும் லடாக்கிலும் தொழில் செய்வதைக்கூட பெரிய நிறுவனங்கள் விரும்பாது. துப்பாக்கிமுனையில் யாரும் தொழில் செய்ய முடியாது. காஷ்மீரிகள் எல்லோரையும் தீவிரவாதிகளாகப் பார்க்கும் மனநிலையைத் தவிர்த்துவிட்டு, அவர்களிலிருந்து தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும். இதன்மூலமே தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

தகவல்: காஷ்மீரிகளுக்கு இருந்த இரட்டைக் குடியுரிமை ஒழிக்கப்பட்டது.

உண்மை: இந்தியாவில் யாருக்குமே இரட்டைக் குடியுரிமை கிடையாது. காஷ்மீரிகளுக்கும் கிடையாது. இதேபோல, ‘காஷ்மீர் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் பாகிஸ்தானியர்கள், இந்தியக் குடியுரிமை பெற்று தீவிரவாதிகளாக உருமாறினார்கள்’ என்றும் சிலர் தகவல் பரப்புகிறார்கள். ‘‘அழகான காஷ்மீர் பெண்களை, நம் இளைஞர்கள் இனி திருமணம் செய்துகொள்ளலாம்’’ என்று உ.பி மாநில பி.ஜே.பி எம்.எல்.ஏ விக்ரம் சிங் சைனி சொல்கிறார்.

நிறைய பேர், மீம்ஸ் போடுகிறார்கள்; டிக்டாக் வீடியோ வெளியிடுகிறார்கள். அருவருப்பான இந்த மனநிலையை `தேசபக்தி’ எனக் கருத வேண்டாம். உண்மை என்னவென்றால், ஒரு காஷ்மீரி அல்லாதவரை காஷ்மீர் பெண் திருமணம் செய்துகொண்டால், அந்தப் பெண் காஷ்மீரில் வசிக்கும் உரிமையை இழந்துவிடுவார். இப்படி, பெண்களுக்கு எதிராகத்தான் சட்டமிருந்தது. 2002-ம் ஆண்டு காஷ்மீர் உயர் நீதிமன்றம் இதை ரத்துசெய்தது. எல்லா மாநிலப் பெண்களைப்போலவும் காஷ்மீர் பெண்களும் தங்களுக்கு விருப்பமிருந்தால் வெளிமாநில இளைஞர்களை மணக்கிறார்கள். அது, மனம் சார்ந்த விஷயம்; அரசியல் சட்டம் சார்ந்ததல்ல!

தகவல்: காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறியதால், இனி அங்கு தீவிரவாதம் ஒழிந்துவிடும்.

உண்மை: ஜம்மு காஷ்மீரில் இருந்த காஷ்மீர், ஜம்மு மற்றும் லடாக் ஆகிய மூன்று பகுதிகளுமே தனித்துவமான அடையாளங்கள்கொண்டவை. முஸ்லிம்களும், இந்துக்களும், பௌத்தர்களும் இணக்கமாகவே வாழ்ந்தனர். சீக்கிய மற்றும் இந்து மன்னர்களின் ஆட்சியில் அமைதியாகவே இருந்தது இந்தப் பகுதி. இந்த இணக்கத்தைக் குலைத்தது பாகிஸ்தான் என்பதில், மாற்றுக் கருத்தில்லை. அதேபோல, காஷ்மீரில் நிலையான ஆட்சி அமையவிடாமல் தடுத்தும், தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டும் மத்திய காங்கிரஸ் அரசு பெரும் தவறைச் செய்தது. ராஜீவ் காந்தி ஆட்சியில் நிகழ்ந்த இந்த அரசியல் கேலிக்கூத்து, இளைஞர்களை தீவிரவாதம் பக்கம் திருப்பியது. ‘தாங்கள் அலட்சியம் செய்யப்படுகிறோம்’ என காஷ்மீரிகளுக்கு டெல்லி மீதான கோபம் அதிகரித்தது. குறிப்பாக, ஜக்மோகன் கவர்னராக இருந்த காலத்தில் தீவிரவாதம் பெருகியது.

‘அதிகாரம் பொருந்திய மாநில அரசை, கைப்பாவையாக மாற்றுகிறது மத்திய அரசு’ என்ற கோபமே தீவிரவாதமாக மாறியது என்றால், அதிகாரமே இல்லாத யூனியன் பிரதேச ஆட்சிக்கு டெல்லியிலிருந்து உத்தரவுகள் போய்க் கொண்டிருந்தால் மட்டும் தீவிரவாதம் எப்படி ஒழியும்? தீவிரவாதத் தாக்குதல்களை வேரறுக்க ‘ஹ்யூமன் இன்டெலிஜென்ஸ்’ முக்கியம். ‘தீவிரவாதிகள் இப்படி வருகிறார்கள், இங்கே தங்குகிறார்கள்’ போன்ற தகவல்களை மக்கள் தர வேண்டும். அதற்கான நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக காஷ்மீரில் நம் ராணுவத்துக்கு அது அமையவில்லை.

வளர்ச்சியும் முன்னேற்றமும்தான் தீவிரவாதத்தை ஒழிக்க உதவும் உண்மையான ஆயுதங்கள். ஆனால், இதைச் செய்வதற்கு அதிகாரம் பொருந்திய மாநில அரசு அமைய வேண்டும். டெல்லியிலும் புதுச்சேரியிலும் நடப்பதுபோல முதல்வரும் கவர்னரும் மோதிக்கொண்டே இருக்கும் சூழல் அமைந்தால், நிலைமை இன்னும் மோசமாகும். அரசியல் சட்டப் பாதுகாப்பு மூலம் தங்களுக்குக் கிடைத்திருந்த சிறப்பு அந்தஸ்தை இழந்த மக்களை, இன்னும் கோபத்தில் ஆழ்த்த பாகிஸ்தான் முயற்சி செய்தால், அது இடியாப்பச் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

காஷ்மீரில் அமைதி ஏற்படுவது என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் நலன் சார்ந்ததுதான். இந்திய ராணுவத்தின் பெரும்பகுதியினர் அங்கு இருக்கிறார்கள். மன அழுத்தத்திலும் தீவிரவாத தாக்குதல்களிலும் பாதிக்கப்படுவது எல்லா மாநிலங்களிலிருந்தும் அங்கு போயிருக்கும் வீரர்கள்தான். ‘‘காஷ்மீர் என்பது, முன்பு சொர்க்க பூமியாக இருந்தது. எதிர்காலத்திலும் அப்படி ஆகும்’’ என்கிறார் அமித் ஷா. ஆனால், அதிகாரங்களைப் பறிப்பதன் மூலம் ஒரு சமூகத்தை அமைதிப் பாதைக்குத் திருப்ப முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் பாடம்.