Published:Updated:

ஒன் பை டூ

சிவசங்கரி
பிரீமியம் ஸ்டோரி
சிவசங்கரி

“விரைவில் தமிழ்நாடு, கருணாநிதி நாடு என்றுகூட மாற்றப்படலாம்!” - எனும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து?

ஒன் பை டூ

“விரைவில் தமிழ்நாடு, கருணாநிதி நாடு என்றுகூட மாற்றப்படலாம்!” - எனும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து?

Published:Updated:
சிவசங்கரி
பிரீமியம் ஸ்டோரி
சிவசங்கரி

சிவசங்கரி, செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க.

“மிகச்சரியானது. காரணம், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஓராண்டில், ஆக்கபூர்வமான எந்தவொரு விஷயத்தையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதிலேயே கவனம் செலுத்திவருகின்றனர். சட்டம்-ஒழுங்கு சீரழிவு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களில் மக்கள் அல்லல்பட்டுவரும் நிலையில், கலைஞர் உணவகம், கலைஞருக்குச் சிலை, கலைஞர் சாலை, அவர் பெயரில் நூலகம் எனத் தன் அப்பாவின் பெயரை பிராண்ட் செய்வதிலேயே ஸ்டாலின் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். கருணாநிதி இதற்குத் தகுதியானவரா, இல்லையா என்கிற விவாதத்துக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. அவர் மிகப்பெரிய தலைவர் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதை விட்டுவிட்டு இதிலேயே கவனம் செலுத்திவருகிறார்களே என்கிற ஆதங்கம் எங்களுக்கு இருக்கிறது. நல்ல தலைவராக இருப்பவர்களுக்குக் காலம் கடந்தும் மரியாதைகள் வந்துசேரும். ஆனால், ஸ்டாலின் கருணாநிதிக்குச் செய்யும்போது அப்பா என்பதால்தான் செய்கிறார் என்கிற விமர்சனங்கள் நிச்சயமாக வரத்தான் செய்யும். ஏற்கெனவே அவர்கள் மீதிருக்கும் வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு வலுசேர்க்கும் வேலைகளை அவர்களே செய்கிறார்கள்!’’

ஒன் பை டூ
ஒன் பை டூ

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க.

``கற்பனையானது. தலைவர் கலைஞரின் பெயரில் மூன்று திட்டங்கள்தான் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று மதுரையில் கட்டப்படும் நூலகம். அவர் புத்தகம் வாசிக்காத நாள்களே இல்லை எனும் அளவுக்கு மிகப்பெரிய படிப்பாளி. அவர் பெயரை நூலகத்துக்கு வைப்பதில் என்ன தவறு... அடுத்ததாக ஈ.சி.ஆருக்கு கலைஞர் பெயர் என்கிற அறிவிப்பு. நெடுஞ்சாலைத்துறை என்கிற துறையை உருவாக்கி வளர்த்தெடுத்த தலைவனின் பெயரை ஒரு சாலைக்கு, அதுவும் பவளவிழா ஆண்டில் வைப்பதில் என்ன தவறு இருக்கிறது... கலைஞர் பெயரில் உணவகம் உள்ளிட்ட விஷயங்கள் நாங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள். மக்கள் அவற்றை ஏற்றுக் கொண்டுதான் வாக்களித்தனர். இப்போதும் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆனால், எந்தச் சம்பந்தமும் இல்லாமல், எல்லாத் திட்டங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் `அம்மா’ என்றோ, `ஜெயலலிதா’ என்றோ பெயர் சூட்டியவர்கள் இன்று எங்களை விமர்சனம் செய்வதுதான் வேடிக்கை. ராஜாஜி, ராஜீவ் காந்தி, பெருந்தலைவர் காமராஜர் எனப் பல்வேறு தலைவர்களின் பெயர்களைச் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சூட்டி கௌரவப்படுத்தியவர் கலைஞர். அவ்வளவு ஏன், திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர் பெயரை வைத்ததும் தலைவர் கலைஞர்தான். எல்லாவற்றையும் மறந்து விட்டு அ.தி.மு.க-வினர் பேசிக்கொண்டிருக்கின்றனர்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism