Published:Updated:

ஆறுமுகசாமி ஆணையம்... அரங்கேறும் அரசியல் காட்சிகள்!

ஆறுமுகசாமி ஆணையம்
பிரீமியம் ஸ்டோரி
ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதாவுக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரைக் காண வந்தவர்கள், வீட்டு வேலையாட்கள் எனப் பலரிடம் விசாரணை நடத்தியது ஆணையம்

ஆறுமுகசாமி ஆணையம்... அரங்கேறும் அரசியல் காட்சிகள்!

ஜெயலலிதாவுக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரைக் காண வந்தவர்கள், வீட்டு வேலையாட்கள் எனப் பலரிடம் விசாரணை நடத்தியது ஆணையம்

Published:Updated:
ஆறுமுகசாமி ஆணையம்
பிரீமியம் ஸ்டோரி
ஆறுமுகசாமி ஆணையம்

சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், 11 எம்.எல்.ஏ-க்களுடன் தனியாக நீண்ட காலம் வலம்வந்தார். அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவரையும் எடப்பாடி பழனிசாமியையும் கைகோக்கவைத்து இணைத்தபோது பன்னீர் வைத்த கோரிக்கை, ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பது. அதனால் உருவான ஆறுமுகசாமி ஆணையம் இப்போது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது, எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து பன்னீர் தர்மயுத்தம் 2.0 நடத்திக்கொண்டிருக்கிறார். ஆறுமுகசாமி அறிக்கையை வைத்து தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் அனைவரின் முன்நிற்கும் கேள்வி.

ஆறுமுகசாமி ஆணையம்... அரங்கேறும் அரசியல் காட்சிகள்!

ஏன்... எப்போது ஆறுமுகசாமி ஆணையம்?

தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக 2016-ம் ஆண்டு பதவியேற்ற ஜெயலலிதா, முழுமையாக ஆறுமாதம்கூட அந்தப் பதவியில் இல்லை. 2016 செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, அங்கேயே உடல்நலன் குன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் அப்போது எழுந்தன. மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க ஆளுநர் பொறுப்பில் இருந்த வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதோடு, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரின் எந்தவொரு புகைப்படமும் வெளியிடப்படவில்லை. அ.தி.மு.க அமைச்சர்களும் முன்னுக்குப் பின் முரணான பல தகவல்களைத் தெரிவித்துவந்ததால், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே குமுறல் எழுந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

அப்போது சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்றார். அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் ஒன்று சேர அதையே நிபந்தனையாகவும் வைத்தார். அதன் விளைவே, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம். ‘அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் ஜெயலலிதா அட்மிட் ஆகியிருந்த காலகட்டத்தில் என்ன நடந்தது?’ என்பதை அறிவதுதான் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான அடிப்படை. ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், சசிகலா, அவரின் உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்பல்லோ நிர்வாகம், மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையம்... அரங்கேறும் அரசியல் காட்சிகள்!

தடைக்குப் பின் மீண்டும் விசாரணை!

ஜெயலலிதாவுக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரைக் காண வந்தவர்கள், வீட்டு வேலையாட்கள் எனப் பலரிடம் விசாரணை நடத்தியது ஆணையம். கூடுதலாக, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். 2017-ம் ஆண்டு, நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட விசாரணையின் காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டு விசாரணை நடந்துவந்தது. 154 சாட்சிகளிடம் விசாரணையை முடித்திருந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தது. மருத்துவர்களின் கண்காணிப்பு இல்லாமல் ஆணையத்தின் விசாரணை நடந்துவருவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க, நீதிமன்றம் அதை ஏற்று 2019 ஏப்ரல் 26 அன்று விசாரணைக்குத் தடைவிதித்தது.

தமிழக அரசின் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் 7-ம் தேதி தடை விலகியது. ஆறு மருத்துவர்கள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு ஒன்றை உருவாக்கிய உச்ச நீதிமன்றம், அந்தக் குழுவின் உதவியோடு மீண்டும் விசாரணையை நடத்த உத்தரவிட்டது. தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்கள் விசாரிக்கப்பட்டனர். எய்ம்ஸ் மருத்துவர்களும் ஆஜராகி தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் உறவினரான இளவரசி உள்ளிட்டோரும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, விசாரணை நிறைவுபெற்றதாக கடந்த ஏப்ரல் மாதம் ஆணையம் அறிவித்தது. அறிக்கைத் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

இதற்கிடையே ஆகஸ்ட் 20-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவக் குழு தனது விசாரணை அறிக்கையை ஆணையத்தில் தாக்கல் செய்தது. ‘அப்பல்லோ மருத்துவமனையில் முறையான சிகிச்சையே ஜெயலலிதாவுக்குத் தரப்பட்டது. அதில் தவறுகள் எதுவும் இல்லை' என்றது அந்த அறிக்கை.

இதற்கிடையே 14-வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்தின் காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, கடந்த 27-ம் தேதி, ஆங்கிலத்தில் 500 பக்கமும் தமிழில் 608 பக்கமும் கொண்ட ஆணையத்தின் அறிக்கை தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின்போது எழுந்த சர்ச்சைகள்!

ஆணையத்தின் விசாரணை காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆணையத்தின் காலதாமதம், அதற்கு செலவிடப்படும் தொகை குறித்தும் தொடர்ச்சியாக விவாதங்கள் எழுந்தன. அதேபோல, இந்த ஆணையம் உருவாக முதன்மையான காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜர் ஆகாதது குறித்தும் அரசியல் அரங்கில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒன்பதாவது சம்மனுக்கு அவர் ஆஜரானபோது அவர் தெரிவித்த கருத்துகளும் விவாதத்துக்கு உள்ளாகின. சசிகலாவின் வழக்கறிஞர் நடத்திய குறுக்கு விசாரணையில், `ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சையளித்தார்கள் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதில், சசிகலா எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை. சசிகலா மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு' என ஓ.பி.எஸ் பல்டியடித்தார்.

அதேபோல, ‘அப்போதைய அ.தி.மு.க அரசு சொல்லித்தான் மருத்துவமனையிலிருந்த சி.சி.டி.வி கேமராக்களை அகற்றினோம்' என அப்பல்லோ நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது அ.தி.மு.கவினரிடையே மிகுந்த கொந்தளிப்பை உண்டாக்கியது. ‘தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாகக் கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார்' என்பது உள்ளிட்ட அப்பல்லோ மருத்துவர்கள் ஆணையத்தில் அளித்த பல வாக்குமூலங்களும் பரபரப்பை உண்டாக்கின.

ஆறுமுகசாமி ஆணையம்... அரங்கேறும் அரசியல் காட்சிகள்!

ஆறுமுகசாமி சொல்வது என்ன?

அறிக்கையை சமர்பித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆறுமுகசாமி, ‘‘ஜெயலலிதாவின் உடல்நிலை, அவரது பழக்கங்கள், அவர் தன்னை எப்படி கவனித்துக்கொண்டார், யார் யார் அவருக்கு சிகிச்சை அளித்தனர் ஆகியவற்றையே விசாரித்தோம்'' என்றார். சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்தப்படாதது குறித்துக் கேட்க, ``சம்மன் அனுப்பி, நான் வரவில்லை என ஒருவர் கடிதம் கொடுக்கும்போது அவரைக் கட்டாயப்படுத்த முடியாது. அது நீதிமன்றத்துக்குச் சரி இருக்காது'' என்றார். ஜெயலலிதாவின் வீட்டுக்குச் சென்று பார்வையிடாதது குறித்துக் கேட்டபோது, ``வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்ததில் சந்தேகம் ஒன்றுமில்லை'' என்றார். ஆனால், சசிகலா, அவரின் உறவினரும் மருத்துவருமான சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு அவர் பரிந்துரை செய்திருக்கிறார். அதற்கான சட்ட ஆலோசனைகளைத் தமிழக அரசு உடனே செய்திருக்கிறது.

அரசியல் ரீதியாக என்ன தாக்கம்?

``பொதுமக்களின் கருத்தாக சந்தேகம் இருக்கிறது என்று கூறித்தான் முதன்முதலாக நான் பேட்டி கொடுத்தேன். இந்த சந்தேகத்தைப் போக்குவதற்கு சின்னம்மா அவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் நிரூபித்திருந்தால், அவர்கள் மேல் இருக்கிற குற்றச்சாட்டு நீக்கப்படும் என்ற கருத்தையும் நான் சொல்லியிருக்கிறேன்'' என ஆணையத்தில் ஆஜரானபோதே அந்தர்பல்டி அடித்துவிட்டார் ஓ.பி.எஸ். அதை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதேபோல, ஜெயலலிதாவின் மரணம் குறித்து முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க தேர்தல் காலங்களில் மிகப்பெரிய பிரசாரமாக முன்னெடுத்தது. அரசியல்ரீதியாக அ.தி.மு.கவைப் பலவீனப்படுத்த ஒரு யுக்தியாக இதைப் பயன்படுத்தியது. தற்போது அறிக்கையை தி.மு.க அரசு என்ன செய்யப்போகிறது என்கிற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது. இந்த அறிக்கையை வெளியிடும் காலத்தைப் பொறுத்து, அரசியல் அரங்கில் பல காட்சிகள் அரங்கேறும் என்பது மட்டும் தெரிகிறது.