Published:Updated:

கொத்துக் கொத்தாக மக்கள் மடியும்போது சென்ட்ரல் விஸ்டா தேவையா?

கொத்துக் கொத்தாக மக்கள் மடியும்போது சென்ட்ரல் விஸ்டா தேவையா?
பிரீமியம் ஸ்டோரி
கொத்துக் கொத்தாக மக்கள் மடியும்போது சென்ட்ரல் விஸ்டா தேவையா?

கொரோனா பெருந்தொற்று தேசம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், 20,000 கோடி ரூபாயை இதற்குச் செலவழிக்க வேண்டுமா?’

கொத்துக் கொத்தாக மக்கள் மடியும்போது சென்ட்ரல் விஸ்டா தேவையா?

கொரோனா பெருந்தொற்று தேசம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், 20,000 கோடி ரூபாயை இதற்குச் செலவழிக்க வேண்டுமா?’

Published:Updated:
கொத்துக் கொத்தாக மக்கள் மடியும்போது சென்ட்ரல் விஸ்டா தேவையா?
பிரீமியம் ஸ்டோரி
கொத்துக் கொத்தாக மக்கள் மடியும்போது சென்ட்ரல் விஸ்டா தேவையா?
‘ரோம் நகரம் பற்றியெரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தான்’ என்று படித்திருக்கிறோம். அப்படித்தான் பிரதமர் மோடியும் நாட்டில் கொத்துக் கொத்தாக மக்கள் கொரோனாவில் செத்து மடியும்போது, அதைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்காமல், 20,000 கோடி ரூபாயில் புதிய நாடாளுமன்றம், பிரதமருக்கு மாட மாளிகை கட்டும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் பேரார்வம் காட்டிவருகிறார்.
மோடி
மோடி

டெல்லியில் இருக்கும் நாடாளுமன்றக் கட்டடம் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டு, 1927-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. சகல வசதிகளுடன் கூடிய இந்தக் கட்டடம், இந்தியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. சுதந்திர இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த பல அரசியல் நிகழ்வுகளுக்குச் சாட்சியும்கூட. இந்தநிலையில், கடந்த 2020, டிசம்பரில் 20,000 கோடி ரூபாய் மதிப்பில் ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின்கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டடம், புதிய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் ஆகியவற்றைக் கட்டுவதற்கான நடவடிக்கை களை மத்திய பா.ஜ.க அரசு தொடங்கியது.

இந்தத் திட்டத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்தத் திட்டத்துக்கு எதிராகப் பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்குத் தடைவிதிக்க முடியாது’ என்று சொல்லி, கடந்த ஜனவரி மாதம் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி அளித்தது.

கொத்துக் கொத்தாக மக்கள் மடியும்போது சென்ட்ரல் விஸ்டா தேவையா?

இதையடுத்து, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் அதை நிறுத்துவதற்கு இடைக்கால உத்தரவு கோரி மொழிபெயர்ப்பாளர் அன்யா மல்ஹோல்ரா மற்றும் வரலாற்று ஆய்வாளர் சொஹைல் ஹாஸ்மி ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், ‘கட்டுமானத் தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவார்கள்’ என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு, ‘சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணியில் 400 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி அரசின் கொரோனா வழிகாட்டல் விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் அங்கு தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்துப் பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு நேரத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதி ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்தது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்குத் தற்போது சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை. ஆனால், ‘கொரோனா பெருந்தொற்று தேசம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், 20,000 கோடி ரூபாயை இதற்குச் செலவழிக்க வேண்டுமா?’ என்ற தார்மிகக் கேள்விக்கு மத்திய அரசிடம் நியாயமான பதில் இல்லை.

மாறாக, “நாடாளுமன்றக் கட்டடத்தை நவீனமயமாக்குவதன் மூலமாக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மிச்சமாகும். மேலும், புதிய கட்ட டங்கள் மிகவும் வலுவானதாகவும் பூகம்பத்தைச் சமாளிக்கும் வகையிலும் இருக்கும். எனவே, இந்தத் திட்டம் தேசிய நலன்கொண்டது” என்கிற தனது கருத்தில் மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக இருக்கிறது.

vikatan
vikatan

இந்தநிலையில்தான், ‘சென்ட்ரல் விஸ்டா திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்; அதற்கு ஒதுக்கப்பட்ட 20,000 கோடி ரூபாயை ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசிகளை வாங்குவதற்குப் பயன்படுத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடா உட்பட 12 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்குக் கூட்டாகக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசோ இந்தக் கடிதத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

‘புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் 2022, நவம்பர் மாதத்துக்குள் நிறைவடையும்; பிரதமரின் புதிய இல்லத்தின் கட்டுமானப் பணிகள் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும்’ என்று மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவிடம் மத்திய பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. மேலும், கட்டுமானப் பணிகளைப் புகைப்படம் எடுக்க முடியாத அளவுக்குத் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து 14 மாதங்கள் கடந்துவிட்டன. இரண்டு ஆண்டுகளில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தையும், பிரதமருக்கான புதிய இல்லத்தையும் கட்டி முடித்துவிட முடியுமென்றால், இந்த 14 மாத காலத்தில் இந்தியாவில் பல பன்னோக்கு மருத்துவமனைகளைப் புதிதாக உருவாக்கியிருக்க முடியும். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையும் பிரமாண்டமாக உருவாக்கியிருக்க முடியும். இவற்றில் எதையும் செய்யவில்லை மத்திய அரசு. மக்கள்நலன் மற்றும் தேசநலன் அடிப்படையில் எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதுகூட இந்த ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் அவலம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism