அரசியல்
அலசல்
Published:Updated:

70-வது வயதில் கேப்டன்... கரைசேருமா தே.மு.தி.க கப்பல்?

குடும்பத்துடன் விஜயகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் விஜயகாந்த்

முதலில் தைராய்டு பிரச்னை ஏற்பட்டு பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டது. அடுத்து, நினைவு மழுங்கியது. அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டும் குணமடையவில்லை

‘கேப்டன்’, ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று தே.மு.தி.க தொண்டர்களால் அழைக்கப்படும் விஜயகாந்த், ஆகஸ்ட் 25-ம் தேதி 70-வது வயதை நிறைவுசெய்கிறார். அடுத்த செப்டம்பர் 14-ம் தேதி அவரது கட்சி, 17 வருடங்களை நிறைவுசெய்கிறது. இந்தப் பின்னணியில் விஜயகாந்த்தின் உடல்நிலை, அவரது கட்சியின் நிலை எப்படியிருக்கிறது என்று விசாரித்தோம்.

உடல்நிலை குறித்து விஜயகாந்த் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். “சட்டமன்றத்தில் ஏற்பட்ட பிரச்னைக்குப் பிறகு, விஜயகாந்தை நிலைகுலைய வைப்பதற்காக அவரின் பால்ய நண்பரான சுந்தரராஜன் முதல் மாஃபா பாண்டியராஜன் வரை 10 எம்.எல்.ஏ-க்களைத் தனி அணியாகப் பிரித்தார் ஜெயலலிதா. அ.தி.மு.க-வினரும் வழக்கு மேல் வழக்கு போட்டு அவரை ஊர் ஊராக அலையவிட்டனர். மனவேதனையும் அலைச்சலும் அவரது உடலை மேலும் மோசமாக்கின.

முதலில் தைராய்டு பிரச்னை ஏற்பட்டு பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டது. அடுத்து, நினைவு மழுங்கியது. அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டும் குணமடையவில்லை. நீரிழிவு பிரச்னையால், மருத்துவர்களின் ஆலோசனைக் கிணங்க அவரது வலது காலிலிருந்து மூன்று விரல்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். விரல்கள் அகற்றப்படுவதற்கு முன்பாக வீட்டில் தினமும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். தற்போது நடப்பதற்கே சிரமப்படுகிறார். ஞாபகமறதி கொஞ்சம் குணமாகி, அவரைச் சந்திக்க வருபவர்களை அடையாளம் கண்டுகொள்கிறார். மனைவி பிரேமலதாவும் குடும்பத்தினரும் குழந்தையைப்போல அவரைப் பாதுகாத்துவருகிறார்கள். வருகிற ஆகஸ்ட் 25-ம் தேதி 70-வது பிறந்தநாளுக்குக் கண்டிப்பாக கட்சித் தலைமை அலுவலகம் வந்து தொண்டர்களுக்குத் தரிசனம் கொடுப்பார்” என்றனர்.

70-வது வயதில் கேப்டன்... கரைசேருமா தே.மு.தி.க கப்பல்?

பொறுப்புகளுக்கு ஆளில்லை...

தே.மு.தி.க-வின் தற்போதைய நிலை குறித்து அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “2006 தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வெற்றிபெற்றாலும், அடுத்த முதல்வர் கேப்டன்தான் என்று தமிழ்நாடே பேசியது. 2011 தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தது பெரிய சறுக்கல். அப்போது 29 எம்.எல்.ஏ-க்கள் கிடைத்து, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானாலும், 10 எம்.எல்.ஏ-க்கள் விலகல் உள்ளிட்ட காரணங்களால் கட்சி நலிவடைந்தது. அவரது உடல்நிலை மோசமான பிறகு, வாக்காளர்கள் மட்டு மின்றி தொண்டர்களுமே சோர்வடைந்து விட்டார்கள். தற்சமயம் உட்கட்சித் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க-வில் பொறுப்புகளுக்குச் சண்டை ஏற்பட்டுக்கொண்டிருக்க, தே.மு.தி.க-விலோ பொறுப்புகளைப் பெறுவதற்கே ஆளில்லாத நிலை உருவாகியிருக்கிறது.

விரைவில் உட்கட்சித் தேர்தலை முடித்து, பொதுக்குழுவைக் கூட்ட பிரேமலதா முடிவுசெய்திருக்கிறார். அப்போது, பொருளாளர் பதவியிலிருக் கும் பிரேமலதா செயல் தலைவராகப் பொறுப்பேற்பார் என்றும், சுதீஷ் பொருளாளர் ஆவார் என்றும் சொல்கிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பியிடம் இருக்கும் இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவியில் விஜய பிரபாகரன் அமர்த்தப்படுவார் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு அவர்கள் மாநிலம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்து, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்களில் தீவிரம் காட்டுவார்கள். அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணியில் நீண்டகாலம் இருந்தும்கூட, ராஜ்ய சபா எம்.பி உள்ளிட்ட அங்கீகாரம் தரப்படாததால், 2024 எம்.பி தேர்தலின்போது தி.மு.க-வுடன் கூட்டணிவைக்க வாய்ப்பிருக்கிறது” என்றார்.

பிரியன்
பிரியன்

பிறந்தநாள் முடிந்து பொதுக்குழு!

மூத்த பத்திரிகையாளர் கல்கி பிரியனிடம் பேசியபோது, “தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்றாகத்தான் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். அதற்கேற்ப மக்கள் வரவேற்பும் கிடைத்தது. அதனைக் காப்பாற்றத் தெரியாமல் அ.தி.மு.க., பா.ஜ.க என மாறி மாறி கூட்டணி அமைத்ததுதான் கட்சியின் சரிவுக்குக் காரணம். எதிர்பாராத வகையில், அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டதும் கட்சியின் சறுக்கலுக்குக் காரணமாகிவிட்டது. தி.மு.க - அ.தி.மு.க போல கட்டமைப்பு உள்ள கட்சியல்ல தே.மு.தி.க. முழுக்க முழுக்க விஜயகாந்த் என்கிற ஒரு நபரை மையமாக வைத்தே இயங்கும் கட்சி அது. விஜயகாந்த் என்கிற நல்ல மனிதரைப் பாராட்டலாம். ஆனால், அதற்காக ஒரு சதவிகிதம்கூட வாக்கு வங்கி இல்லாத தே.மு.தி.க-வை தி.மு.க ஒருபோதும் தனது கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ளாது. மக்கள் மத்தியில் இணக்கத்தை இழந்ததால், இனி தே.மு.தி.க-வின் எதிர்காலம் கேள்விக்குறி தான்!” என்றார்.

பார்த்தசாரதி
பார்த்தசாரதி

தே.மு.தி.க மாநிலச் செயலாளர் பார்த்தசாரதியிடம் பேசினோம். “பிறந்த நாள் விழாவை எப்படிக் கொண்டாடு வது என்பது குறித்து இன்னும் முடி வெடுக்கவில்லை. அன்றைய தினம் கேப்டன் கண்டிப்பாக தொண்டர் களுக்குக் காட்சி தருவார் என்று நம்பிக்கையிருக்கிறது. பேசுவதற்கும் நடப்பதற்கும் சிரமப்படுகிறார். வீட்டிலேயே பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 நாள்களுக்கு ஒரு முறை மருத்துவமனை அழைத்துச் சென்று, பரிசோதனை செய்து வருகிறார்கள். அசைவப் பிரியர் என்றபோதும், உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக இப்போது சைவம்தான் கொடுக்கப் படுகிறது. தற்போது உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. கிளைக்கழகம் முடிந்ததும் மற்ற பொறுப்புகளுக்கான தேர்தலையும் சீக்கிரம் முடித்துவிட்டு, பிறந்தநாளுக்குப் பின்னர் பொதுக்குழு கூட்டப்படும். தி.மு.க-வில் ஸ்டாலின் செயல் தலைவரானதுபோல, அண்ணியாரும் ஆக வேண்டும் என்று மா.செ-க்கள் ஆசைப்படுகிறார்கள். பொதுக்குழுவில் முடிவுகள் தெரியும்” என்று முடித்தார்.

எழுந்து வாருங்கள் விஜயகாந்த்!