Published:Updated:

ஒன் பை டூ

கோவை செல்வராஜ், தமிழன் பிரசன்னா
பிரீமியம் ஸ்டோரி
கோவை செல்வராஜ், தமிழன் பிரசன்னா

“கடந்த ஓராண்டில் குற்றச்செயல்கள் குறைந்திருக்கின்றன” என்கிற காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபுவின் கருத்து?

ஒன் பை டூ

“கடந்த ஓராண்டில் குற்றச்செயல்கள் குறைந்திருக்கின்றன” என்கிற காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபுவின் கருத்து?

Published:Updated:
கோவை செல்வராஜ், தமிழன் பிரசன்னா
பிரீமியம் ஸ்டோரி
கோவை செல்வராஜ், தமிழன் பிரசன்னா

கோவை செல்வராஜ், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

“டி.ஜி.பி சொல்வதை நான் முற்றிலும் மறுக்கிறேன். டி.ஜி.பி வெறுமனே சமாளிக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் கெட்டுக்கிடப்பது ஊரறிந்த உண்மை. தி.மு.க ஆட்சிக்குவந்த இந்த ஓராண்டில், தமிழ்நாடு முழுவதும் பாலியல் தொல்லைகள், நகைக்கான கொலைகள், சங்கிலிப் பறிப்புகள், மாமூல் வேட்டைகள், லாக்கப் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 50 ஆண்டுக்கால தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தினமும் டன் கணக்கில் பறிமுதலாகின்றன. தலைமைச் செயலகத்திலேயே ஒருவரை அடித்துக் கொன்ற வரலாறு இந்த ஆட்சியில்தான் நடந்தது. ரௌடிகள் அட்டகாசமும் அதிகமாகிவிட்டது. பணம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு, அப்பாவிகளை மட்டுமே போலீஸார் தண்டிக்கிறார்கள். அரசியல் ஆதாயத்துக்காக நடக்கிற தவறுகளைச் சுட்டிக்காட்ட, கூட்டணிக் கட்சியினர் அஞ்சுகிறார்கள். இந்த ஓராண்டில் மட்டும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. முதல்வர் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுத்தால் ஒழிய, குற்றச்சாட்டுகள் குறைய வாய்ப்பில்லை!”

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்
தமிழன் பிரசன்னா
தமிழன் பிரசன்னா

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“டி.ஜி.பி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. கடந்த ஏழு ஆண்டுக்காலக் குற்றங்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டோமானால், இந்திய தேசிய குற்றவியல் காப்பகத் தரவுகளின் அடிப்படையில், குற்றச்சம்பவங்கள் நிறைந்திருந்த மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. லாக்கப் மரணங்கள், படுகொலைகள், கொள்ளைகள், செயின் பறிப்புகள் போன்ற குற்றச்செயல்கள் அ.தி.மு.க ஆட்சியில் அதிகமாக நடந்திருக்கின்றன. ஒன்றிரண்டு சம்பவங்கள் எல்லை மீறிச்செல்லும்போது, அதற்கு அரசுத் தரப்பு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளைத்தான் பார்க்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில் நீதிமன்றம் சென்றுதான் எஃப்.ஐ.ஆரே பெற முடிந்தது. ஆனால், தவறு என்று தெரிந்துவிட்டால், அதை யார் செய்திருந்தாலும் நேர்கொண்ட பார்வையோடு நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழ்நிலையை தி.மு.க அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அரசே சில வழக்குகளை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியிருக்கிறது. தவறுகளைக் கண்டும் காணாமல் இருப்பது, அதற்குத் தீர்வு காண்பது என்ற இருவகைச் செயல்பாடுகளில், தீர்வை நோக்கியே டி.ஜி.பி-யும், முதல்வரும் நகர்கிறார்கள். அதனால்தான் கடந்த ஓராண்டில் குற்றச்செயல்கள் குறைந்திருக்கின்றன!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism