Published:Updated:

கவர்னர் பதவிக்கு தேவையில்லையா கண்ணியம்?

அரசியல் சட்டப் பிரிவு 156(1), ‘குடியரசுத் தலைவரின் விருப்பத்தின்பேரில் கவர்னர் தன் பதவியில் நீடிப்பார்’ என்று குறிப்பிடுகிறது

பிரீமியம் ஸ்டோரி

இந்த முழுநாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருந்த நேரத்தில், புதுச்சேரி லெப்டினென்ட் கவர்னர் கிரண் பேடியுடன் போராடிக்கொண்டிருந்தார் முதல்வர் நாராயணசாமி. கொரோனா அச்சம் தீர்ந்திருக்கும் இந்த நேரத்தில் கிரண் பேடி கவலையும் நாராயணசாமிக்குத் தீர்ந்திருக்கிறது.

அரசியல் சட்டப் பிரிவு 156(1), ‘குடியரசுத் தலைவரின் விருப்பத்தின்பேரில் கவர்னர் தன் பதவியில் நீடிப்பார்’ என்று குறிப்பிடுகிறது. ஒரு கவர்னரின் பதவிக்காலம், நியமிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள். இடையில் ராஜினாமா செய்தாலோ, பதவிநீக்கம் செய்யப்பட்டாலோ பதவி முடிவுக்கு வந்துவிடும். மத்திய அரசு யாருக்கேனும் நியமன, அலங்காரப் பதவிகள் தர வேண்டும் என்று நினைத்தால், அவரை கவர்னர் ஆக்கிவிடும். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும்போது, முந்தைய ஆட்சியால் நியமிக்கப்பட்டவர்கள் தாமாகவே பதவி விலகுவார்கள் அல்லது ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அந்தவகையில், நரேந்திர மோடி பிரதமர் ஆன கடந்த ஏழு ஆண்டுகளில் அருணாசலப் பிரதேச கவர்னர் ஜோதி பிரசாத் ராஜ்கோவாவுக்கு அடுத்து பதவிநீக்கம் செய்யப்படும் இரண்டாவது கவர்னர் கிரண் பேடி.

கிரண் பேடி, நாராயணசாமி
கிரண் பேடி, நாராயணசாமி

‘ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னர் பதவியும் அவசியமில்லாதவை’ என்றார் அண்ணா. ‘மத்திய அமைச்சரவையின் கூட்டு முடிவுக்கு ஒப்புதல் கொடுக்கும் ரப்பர் ஸ்டாம்ப்பே குடியரசுத் தலைவர்’ என்பார்கள். அதேபோல மாநில அமைச்சரவையின் கூட்டு முடிவுக்கு ஒப்புதல் தரும் ஒருவராகவே கவர்னர் இருக்கிறார். ஆனால், சில சமயங்களில் முரண்படும் உரிமையும் அவருக்கு இருக்கிறது. இதனாலேயே, ‘கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட பெருந்தகைகளையே கவர்னராக நியமிக்க வேண்டும்’ என நம் அரசியல் சட்டத்தை உருவாக்கிய முன்னோடிகள் குறிப்பிட்டார்கள். ஆனால், ஆளுங்கட்சியில் ஓய்வுபெறும் அரசியல்வாதிகளுக்கு மறுவாழ்வு தரும் இடமாகவே கவர்னர் மாளிகைகள் இருக்கின்றன. அவர்கள் எப்படி அரசியல் சார்பற்றவர்களாக இருக்க முடியும்?

சில சமயங்களில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுக்குக் குடைச்சல் கொடுப்பதற்காகவே சிலர் கவர்னராக நியமிக்கப்படுகிறார்கள். புதுச்சேரி அதன் உச்சம் என்றால், வேறு சில மாநிலங்களிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை.

தமிழகத்துடன் சேர்த்து மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் இருக்கிறது பா.ஜ.க. “அதற்கான ஸ்லீப்பர் செல்போலச் செயல்படுகிறார் மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர்’’ என்று குற்றம்சாட்டி, மூன்று ஆண்டுகளாக அவருடன் ஓயாமல் யுத்தம் செய்துகொண்டிருக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. வந்த முதல் வாரத்திலிருந்தே “சட்டம் ஒழுங்கு சரியில்லை” என்று வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்த கவர்னர், “பயங்கரவாதிகள், கிரிமினல்கள், வெடிகுண்டு செய்பவர்களின் புகலிடமாக மேற்கு வங்காளம் மாறிவிட்டது. மாநிலத்தை ஒட்டுமொத்தமாகச் சுத்தம் செய்ய வேண்டும்” என்று சொல்லும் அளவுக்கு இப்போது முன்னேறியிருக்கிறார்.

“ஒரு முதலாளி தனது எஸ்டேட்டை நிர்வாகம் செய்வது போன்ற மனநிலையில் மம்தா ஆட்சி செய்கிறார். எமர்ஜென்ஸி காலத்தில் நாடு இருந்ததுபோல, இப்போது மேற்கு வங்காளம் இருக்கிறது’’ என்று தன்கர் சொல்ல, “கவர்னர் தன்னை பிரிட்டிஷ் மன்னர்போல நினைத்துக்கொண்டிருக்கிறார்’’ என்று வெடித்தார் மம்தா.

மாநிலம் முழுக்கச் சுற்றுப்பயணம் செல்வதற்கு அரசு ஹெலிகாப்டரைக் கேட்டார் கவர்னர். “முடியாது” என்று மறுத்துவிட்டார் மம்தா. ஒருநாள் சபாநாயகரிடம் சொல்லிவிட்டு சட்டப்பேரவையைப் பார்க்க போனார் கவர்னர். கவர்னர் உள்ளே செல்வதற்குத் தனியாக ஒரு நுழைவாயில் இருக்கிறது. அந்த கேட்டை பூட்டச் சொல்லிவிட்டார் மம்தா. பரிதாபமாக அந்த கேட்டுக்கு வெளியே காத்திருந்துவிட்டு, வேறு வழியாக உள்ளே போனார் கவர்னர்.

மம்தா பானர்ஜி, ஜக்தீப் தன்கர்
மம்தா பானர்ஜி, ஜக்தீப் தன்கர்

இருவரும் மாறி மாறிக் குற்றச்சாட்டுக் கடிதங்கள் எழுதி, அதை வெளிப்படையாக ஊடகங்களுக்குக் கொடுத்தார்கள். ஒருகட்டத்தில், ‘நீங்கள் வெளியில் வந்தால் பாதுகாப்பு தர முடியாது. ராஜ்பவனில் இருங்கள்’ என்று மாநில அரசு கேட்டுக்கொள்ளும் அளவுக்கு கவர்னரின் நிலை ஆனது. ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவது மரபு. அந்த மரபையும் உடைத்து, சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு கவர்னரை அழைக்கவில்லை மம்தா. கவர்னர் ஒரு பக்கம் முரட்டுப் பிடிவாதம் காட்ட, இன்னொரு பக்கம் முதல்வர் முரண்டு பிடிக்க... அதிகாரிகள்தான் சிக்கித் தவிக்கிறார்கள்!

மகாராஷ்டிராவிலும் இதே நிலைதான். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்த கூட்டணி அங்கு ஆள்கிறது. அங்கு சட்ட மேலவையில்

எம்.எல்.சி-க்களாக நியமிக்க 12 பேரின் பெயர்களைப் பரிந்துரை செய்தது மாநில அரசு. ஒன்று, இதற்கு ஒப்புதல் தர வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் மூன்று மாதங்களாக அப்படியே வைத்திருக்கிறார் கவர்னர் பகத் சிங் கோஷியாரி. சிவசேனா கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’ அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தது. ‘டெல்லியிலிருந்து வரும் உத்தரவுகளையே கவர்னர் பின்பற்றுகிறார்’ என்று கண்டித்தது. “அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஏஜென்ட்டாக நடந்துகொள்ளக் கூடாது’’ என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கண்டித்தார்.

இந்த இடைவெளியில் ஒருநாள், உத்தரப்பிரதேச மாநிலம் முசௌரிக்குச் செல்லவிருந்தார் கவர்னர். இதற்காக மாநில அரசின் விமானம் வேண்டும் என கவர்னர் மாளிகையிலிருந்து கடிதமும் போனது. வழக்கமாக இதுபோல விமானத்தை கவர்னர் பயன்படுத்துவது மரபுதான். ஆனால், இந்த முறை நடந்ததோ விநோதம். விமான நிலையத்துக்குச் சென்று, விமானத்திலும் ஏறி உட்கார்ந்துவிட்டார் கவர்னர். அதிகாரிகள் அவரிடம் வந்து, “விமானத்தை இயக்குவதற்கு மாநில அரசு அனுமதி தரவில்லை’’ என்று தயக்கத்துடன் சொன்னார்கள். வேறு வழியின்றி அவர் அவசரமாக டிக்கெட் வாங்கி, பயணிகள் விமானத்தில் கிளம்பிப் போனார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் கவர்னருக்கும் நடக்கும் சண்டைகள் தேசிய அளவில் புகழ்பெற்றவை. ஒருகட்டத்தில் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கே போனது. ‘மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் உண்டு. மாநில அரசின் பரிந்துரைகளை கவர்னர் மதிக்க வேண்டும்’ என நீதிமன்றமே குட்டு வைத்தது.

இப்போது, ‘தேசியத் தலைநகரம் டெல்லி பிரதேச சட்டம்’ என்ற பெயரில் மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவர முயல்கிறது. “இந்தச் சட்டம் வந்தால், பல விஷயங்களில் கவர்னருக்கே முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கும். அவரைவைத்து மாநிலத்தை மறைமுகமாக மத்திய அரசு ஆளும். இப்போது இலவச தண்ணீர், மின்சாரம், இலவச சிகிச்சை, பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவசப் பயணம் என மாநில அரசு தந்திருக்கும் பல சலுகைகள் பறிபோய்விடும்’’ எனக் கொந்தளிக்கிறார், டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா.

சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்குச் சிக்கல் வந்தது. ‘பெரும்பான்மையை நிரூபிக்கிறேன். சட்டப்பேரவையைக் கூட்டுங்கள்’ என்று மாநில முதல்வர் அசோக் கெலாட் இரண்டு முறை கடிதம் எழுதியபோதும், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா அதைச் செய்யவில்லை. ‘காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறும் தருணத்துக்காக அவர் காத்திருந்தார்’ என்று குற்றச்சாட்டு எழுந்தது.

உத்தவ் தாக்கரே, பகத் சிங் கோஷியாரி
உத்தவ் தாக்கரே, பகத் சிங் கோஷியாரி

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்த சூழலில், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடத்த விரும்பினார் கேரள முதல்வர் பினராயி விஜயன். ஆனால், கவர்னர் ஆரிஃப் முகமது கான் அதற்கு அனுமதி மறுத்தார். பா.ஜ.க எங்கெல்லாம் எதிர்க்கட்சியாகத் தீவிரம் காட்டுகிறதோ, அங்கெல்லாம் கவர்னர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஒரே விதிவிலக்கு, தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போகும் ஒருவர், அந்தப் பதவியின் கண்ணியம் காரணமாக அரசியல் சார்பற்ற நபராக மாறிவிடுகிறார். கவர்னர்கள் அப்படி மாறுவதில்லை என்பதே பிரச்னை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு