சினிமா
Published:Updated:

‘ஆண்மை’யை நம்பியா அரசியல்?

‘ஆண்மை’யை நம்பியா அரசியல்?
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஆண்மை’யை நம்பியா அரசியல்?

“நீதிமன்றத்தில் கூனிக்குறுகி மன்னிப்பு கேட்டவர் ஆண்மையுள்ளவரா? டிவிட்டரில் ஒரு கருத்தைப் போட்டுவிட்டு அட்மின் போட்டார் என பல்டி அடிக்கும் ஹெச்.ராஜா ஆண்மையுள்ளவரா?

‘கர்நாடகாவில் விநாயக சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு.’- இப்படி ஹெச்.ராஜா ட்வீட் இடவும் அரசியல் வட்டாரமே பரபரப்பானது.

‘தமிழக அரசு ஆண்மையில்லாத அரசு’ என்ற விமர்சனத்துக்கு, ‘நீதிமன்றத்தைப் பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கியபோதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு. மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை. சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில், உங்கள் அரசியல் ஆண்மையை நிரூபியுங்களேன்’ என்று அதே ட்விட்டரில் பதிலளித்தார் அ.தி.மு.க ஐ.டி விங் பொறுப்பாளர் ராஜ் சத்யன்.

‘ஆண்மை’யை நம்பியா அரசியல்?

ஹெச்.ராஜாவின் விமர்சனத்தால் கொதித்தெழுந்த அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார், “நீதிமன்றத்தில் கூனிக்குறுகி மன்னிப்பு கேட்டவர் ஆண்மையுள்ளவரா? டிவிட்டரில் ஒரு கருத்தைப் போட்டுவிட்டு அட்மின் போட்டார் என பல்டி அடிக்கும் ஹெச்.ராஜா ஆண்மையுள்ளவரா? அ.தி.மு.க-வில் இருப்பவர்கள் காங்கேயம் காளைகள்” என்றார். விடவில்லை ஹெச்.ராஜா. ‘தினம் ஒரு குறள்’ என்று ‘பிறன்மனை நோக்காப் பேராண்மை’ என்று பதிவிட்டார். ‘என் தோட்டத்தில் நான் வளர்க்கும் காங்கேயம் காளை’ என்று புகைப்படத்துடன் பதிவிட்டார். அதென்னவோ தெரியவில்லை, அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையில் ‘ஆண்மை’ப் பிரச்னை நீண்டகாலமாக உள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தாமதமாக நீக்கப்பட்டதாகக் கூறி அ.தி.முக தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் ‘ஆண்மையற்றவர்கள்’ என்று சாடினார் பா.ஜ.க-வின் ஆலோசகர் ஆடிட்டர் குருமூர்த்தி. அப்போதும் கடும் கண்டனத்தைத் தெரித்தவர் இதே டி.ஜெயக்குமார்தான். அதுமட்டுமல்ல, ஓ.பன்னீர்செல்வத்தை நேரடியாகப் பெயர் குறிப்பிட்டே இந்த வசையை எறிந்தார் குருமூர்த்தி.

‘ஆண்மை’யை நம்பியா அரசியல்?

திருச்சியில் நடைபெற்ற துக்ளக் பொன்விழாக் கூட்டத்தில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, “சசிகலாவை முதலமைச்சராகப் பதவியேற்க வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். சென்னைப் பல்கலைக் கழக அரங்கத்தில் ஏற்பாடுகள் நடந்துவந்தன. அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்திடம், அந்தப் பணிகள் சரியாக வந்து கொண்டி ருக்கிறதா என்று மேற்பார்வையிடச் சொல்லி யிருக்கிறார்கள். அதை என்னிடம் வந்து முறையிட்டார் ஓ.பி.எஸ். நான், ’நீங்களெல்லாம் ஆம்பளையா’ என்று அவரிடம் கேட்டேன். பிறகு, ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அமருங்கள். வழி பிறக்கும் என்றேன்” என்றார்.

மூன்றுமுறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் என்ற எந்த நாகரிகமும் இல்லாமல் குருமூர்த்தி இதைப் பொதுமேடையில் குறிப்பிட்டார். அ.தி.மு.க-வுடன் மட்டுமே இந்த ‘ஆண்மை-பெண்மை’ சர்ச்சையைக் குருமூர்த்தி நிறுத்தவில்லை. எப்படி கணக்கெடுத்தாரோ தெரியவில்லை, ‘இந்தியப் பெண்களில் 30 சதவிகிதப் பெண்களுக்குத்தான் பெண்மை இருக்கிறது’ என்று குருமூர்த்தி பேசி அதுவும் சர்ச்சையானது.

ராதாரவி
ராதாரவி

பொதுவாக அரசியல் கட்சிகளில் நாகரிகமான விமர்சனங்களை முன்வைக்க முன்னணித் தலைவர்கள், நாராசமான நடையில் விமர்சிக்க மூன்றாந்தரப் பேச்சாளர்கள் என்று இரு மட்டங்கள் இருக்கும். ஆனால் ‘ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாடா’ என்று தெருச்சண்டையில் பேசப்படும் வார்த்தைகளை ‘அரசியல் விமர்சனம்’ என்ற பெயரில் முன்வைப்பவர்கள் இரு பெரும் கட்சிகளின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் என்பதுதான் அவமானகரமானது.

‘ஆண்மை’ என்ற சொல்லுக்கு வீரம் என்பது மட்டும் பொருள் அல்ல, ‘ஆண்மை’ என்றால் உயர்ந்த பண்பு என்னும் அர்த்தம் தமிழில் உண்டு. அதை அடிப்படையாகக் கொண்டே வேளாண்மை, பேராண்மை, தாளாண்மை, சான்றாண்மை போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படு கின்றன. ஆனால் ஹெச்.ராஜாவும் டி.ஜெயக்குமாரும் ‘ஆண்மை’ என்பதை ‘வீரம்’ என்னும் பொருளில் அரசியல் குழாயடிச் சண்டையாக மாற்றியுள்ளனர்.

அதே சமயம், ‘ஆண்மை என்பதுதான் உயர்ந்த பண்பு’ என்னும் அர்த்தமே பெண்ணி யவாதிகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது. இதுகுறித்த விமர்சனக்குரல்கள் தமிழில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே எழுந்துள்ளன. ‘பெண்மை வெல்க என்று கூத்திடுவோமோடா’ என்றார் பாரதியார். ‘பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் ‘ஆண்மை’ ஒழிய வேண்டும்’ என்றார் பெரியார்.

ஆண்களை அடிப்படையாகக் கொண்டு மொழியிலும் அதிகாரம் செயற்படுவது குறித்து உலகமெங்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. Chairman என்னும் பதவியை ஒருகாலத்தில் ஆண்கள் மட்டுமே வகித்துவந்தனர். ஆனால் ஆண்களைப்போலவே பெண்களும் முன்னேறிவந்து எல்லாத் துறைகளிலும் சரிசமமாகப் பணிபுரியும் காலத்தில் Chairman என்பதும் ஆண்களை மையப்படுத்திய வார்த்தை என்று உணரப்பட்டு Chairperson என்று இருபாலாருக்கும் பொதுவான சொல் உருவாக்கப்பட்டது. இப்படி உலகம் முன்னோக்கி முற்போக்காகச் சிந்திக்கிறது. ஆனால் ஹெச்.ராஜாவும் ஜெயக்குமாரும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிப்போய் ‘யாருக்கு ஆண்மை இருக்கிறது?’ என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

‘ஆண்மை என்றால் வீரம்’ என்ற பொருளில் எடுத்துக்கொண்டாலும், இரண்டு கட்சிகளும் மக்கள் பிரச்னைளைத் தீர்ப்பதற்கு ‘ஆண்மை’யுடன் - துணிச்சலுடன் போராடியிருக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இப்போது ‘ஆண்மை, காங்கேயம் காளைகள்’ என்று பேசும் அ.தி.மு.க-வினர் ஜெயலலிதா கோலோச்சிய காலம் முழுவதும், நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து எழுந்தவர்கள்தான். அப்போது ஜெயலலிதாவிடம் இருந்தது ‘ஆண்மை’யா, ‘பெண்மை’யா? ஜெயலலிதா மறைந்ததும் மேசைக்கு அடியில் தவழ்ந்துபோய் சசிகலா காலைத்தொட்டுக் கும்பிட்டவர்களும் அவர்களே.

ஹெச்.ராஜா அரசியல் நாகரிகம் இல்லாமல் அவதூறுகளைக் கிளப்புவதும் பிறகு பல்டி அடித்து மன்னிப்புகேட்பதும் வாடிக்கை. அவர் கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் இப்படித்தான் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு களைக் கிளப்பி, பிறகு ‘செல்வாக்கின்’ மூலம் வழக்கில் இருந்து தப்பினார். இதெல்லாம்தான் ‘ஆண்மை’யா?

குருமூர்த்தி
குருமூர்த்தி

முன்பைப்போல விருப்பத்துக்கு விமர்சனங்கள் என்ற பெயரில் ஆணாதிக்க ஆபாச அவதூறுகளை முன்வைத்துவிட முடியாது. உலகம் இப்போது உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஒரு திரைப்பட விழாவில் நயன்தாரா குறித்துத் தரக்குறைவாக ராதாரவி பேச, கடும் கண்டனங்கள் குவிந்தன. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கிய பின்னரே, சர்ச்சை அடங்கியது. எனவே இனி எந்த மோசமான கருத்தும் விமர்சனத்துக்குத் தப்ப முடியாது என்பதை அரசியல்வாதிகள் உணரவேண்டும்.

யார் நல்ல அரசியல்வாதி, யார் மக்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்கள் என்பதில்தான் மக்கள் கவனம் செலுத்துவார்களே தவிர, யாருக்கு ஆண்மை இருக்கிறது என்பதில் அல்ல. எனவே ஹெச்.ராஜாக்களே, ஜெயக்குமார்களே, அநாகரிகமான ‘ஆண்மை’ சர்ச்சையில் ஈடுபட்டு, தமிழக அரசியலை நள்ளிரவு ‘அடல்ட்ஸ் ஒன்லி’ நிகழ்ச்சி ஆக்கிவிடாதீர்கள்!