Published:Updated:

அடகு வைக்கும் அரசு!

அடகு வைக்கும் அரசு!
பிரீமியம் ஸ்டோரி
அடகு வைக்கும் அரசு!

நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சேவைகளைத் தனியாருக்குக் குத்தகை விடுவதே இந்தத் திட்டம்.

அடகு வைக்கும் அரசு!

நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சேவைகளைத் தனியாருக்குக் குத்தகை விடுவதே இந்தத் திட்டம்.

Published:Updated:
அடகு வைக்கும் அரசு!
பிரீமியம் ஸ்டோரி
அடகு வைக்கும் அரசு!

நகையை ஏன் அடகு வைக்கிறீங்க... நல்ல விலைக்கு வித்திடுங்க’ என அட்வைஸ் செய்யும் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். ‘விற்பதைவிட அடகு வைப்பது நல்ல லாபம் தரும்’ என நினைக்கிறது மத்திய அரசு. நிதி ஆயோக் அமைப்பின் பரிந்துரைப்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கும் ‘தேசிய பணமாக்குதல் திட்டம்’ (National Monetisation Pipeline) இதைத்தான் செய்யவிருக்கிறது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது, முதலீட்டு விலக்கம் என்ற பெயரில் வேறு பல நிறுவனங்களின் பங்குகளை விற்பது ஆகியவற்றின் அடுத்த முன்னேற்றமே, ‘தேசிய பணமாக்குதல் திட்டம்.’

நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சேவைகளைத் தனியாருக்குக் குத்தகை விடுவதே இந்தத் திட்டம். ‘‘அடுத்த நான்கு நிதியாண்டுகளில் இதன்மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும். தேசம் முழுக்க புதுக் கட்டமைப்புகளை உருவாக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்’’ என்று சொல்கிறார் நிதியமைச்சர். நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா, லாபத்தில் இயங்கும் பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களை விற்பதாக மத்திய அரசு அறிவித்தும் யாரும் வாங்க முன்வரவில்லை. நிதி திரட்ட வேறு வழியின்றி குத்தகைத் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு.

அடகு வைக்கும் அரசு!

நெடுஞ்சாலைகளும் ரயில்வேயும்தான் பெருமளவு குத்தகைக்கு விடப்படுகின்றன. நெடுஞ்சாலைகளைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் 1.6 லட்சம் கோடி ரூபாய் வருமாம். ரயில்வேயில் 400 ரயில் நிலையங்கள், சில ரயில் பாதைகள், ரயில்கள், ரயில்வே யார்டுகள், ஸ்டேடியங்கள் ஆகியவை 1.52 லட்சம் கோடி ரூபாய்க்குக் குத்தகை விடப்படுகின்றன. இதேபோல விமான நிலையங்கள், மின் விநியோக வழித்தடங்கள், காஸ் பைப்லைன், நிலக்கரிச் சுரங்கங்கள் என்று பெரிய பட்டியலையே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

‘‘தனியார்மயமாக்கல் போல இந்தச் சொத்துகளின் உரிமை அரசிடமிருந்து போய்விடாது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் அரசின் கைகளுக்கு வந்துவிடும். இவற்றை முழுத்திறனுடன் இயக்கி அரசு லாபம் ஈட்டவில்லை. தனியாருக்குக் கொடுப்பதன் மூலம் முழுமையாகச் செயல்படுத்த முடியும். அரசுக்கும் நிதி கிடைக்கும்’’ என்கிறார் நிர்மலா சீதாராமன்.

ஏற்கெனவே ‘சொத்து மறுசுழற்சி’ என்ற பெயரில் சிறிய அளவில் செயல்பட்டு வந்த திட்டத்துக்குப் புதுப்பெயர் கொடுத்து பிரமாண்டமாக அமல்படுத்துகிறது மத்திய அரசு. நெடுஞ்சாலைகளைத் தனியாருக்குக் கொடுத்து, அவர்களைப் புதிதாக சாலை போட்டு சுங்க வரி வசூலித்துக்கொள்ள அனுமதித்தார்களே, அதுபோன்ற திட்டமே இது!

சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட சில தடங்களில் ரயில் சேவைகளைத் தனியாருக்குத் தர மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், அதற்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. வெறும் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்றன. அதனால் அந்த முயற்சி ஆரம்பத்திலேயே முடங்கிப்போனது.

சேவைத்துறைகளில் முதலீடு செய்ய நினைக்கும் நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாடு இல்லாமலும், நீண்ட கால உரிமையாகவும் அதைப் பெறுவதையே விரும்புகின்றன. அதனாலேயே மத்திய அரசு இப்படிச் செய்வதாக நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. பல நாடுகளின் பென்ஷன் திட்டங்களில் பெரிய அளவில் நிதி சேர்ந்து கிடக்கிறது. பாதுகாப்பான, நல்ல லாபம் வரும் துறைகளில் முதலீடு செய்ய அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த முதலீட்டை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்தக் குத்தகைத் திட்டம் உதவும் என நிதி ஆயோக் அமைப்பு நினைக்கிறது.

‘‘ஒரு சுரங்கத்தைக் குத்தகைக்கு விடுவதில் பொது மக்களுக்கு நேரடியாக எந்த விளைவுகளும் ஏற்படுவதில்லை. ஆனால், சேவைத் துறைகளில் இது பாதிப்புகளை ஏற்படுத்தும்’’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

உதாரணமாக, 25 ஆண்டுகளுக்கு முன்புவரை தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி வசூலிக்கும் கவுன்ட்டர்கள் கிடையாது. சாலைகளும் மோசமாக இருந்தன. சாலைகளில் தனியார் கட்டுமானத்தை அனுமதித்த பிறகு தரமான சாலைகள் வந்தன. எந்த இடத்துக்கும் விரைவாகப் போக முடிந்தது. ஆனால், பயணத்துக்கான செலவு அதிகமாகிவிட்டது.

ரயில்வேயில் குத்தகைத் திட்டமும் இதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இப்போது வார இறுதி நாள்களில் டிக்கெட் கிடைக்காமல் பலர் தவிக்கிறார்கள். எவ்வளவு டிமாண்ட் இருக்கிறது என்பதைப் பார்த்து பெட்டிகளை அதிகரிக்க இந்திய ரயில்வே முயற்சி செய்வதில்லை. வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்கள் கடைசியில் ஏமாற்றம் அடைகிறார்கள்.

இதுவே தனியார் கைக்குப் போனால், எல்லோருக்கும் பயணம் உறுதியாக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் இன்னொரு விஷயமும் நடக்கலாம். ஏ.சி வசதி இல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள், முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் பெட்டிகள் ஆகியவற்றில் ரயில்வேக்கு வருமானம் குறைவு. எளிய மக்கள் இந்தப் பெட்டிகளில்தான் பயணம் செய்கிறார்கள். ஒரு நிறுவனம் அதிகமாக சம்பாதிக்க ஆசைப்படும்போது, இந்தப் பெட்டிகளின் எண்ணிக்கை குறையலாம். இப்படிப் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்வசம் செல்லும்போது எளிய மக்கள்தான் முதலில் பாதிக்கப்படுவார்கள்.

முதலீடு செய்ய முடியாமலோ, அலட்சியத்தாலோ, அரசு நிறுவனங்கள் தரமான சேவை வழங்குவதில்லை. தனியாரிடம் குத்தகைக்குப் போனால், ரயில் நிலையங்கள் உலகத்தரமாக மாறும்; பாதுகாப்பிலும் குறை இருக்காது. மின்சேவை தனியாரிடம் போனால் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்த எல்லா வசதிகளுக்கும் ஒரு விலை இருக்கிறது. எத்தனை பேர் இதைத் தாங்குவார்கள் என்பது கேள்வி.

அடகு வைக்கும் அரசு!

அமெரிக்காவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மின் கம்பங்கள் மற்றும் கம்பிகள் தனியார்மயமாகின. ஐந்தே ஆண்டுகளில் மின் கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்தது. பிறகு அரசு தலையிட்டு மானியம் கொடுத்துக் கட்டணத்தைக் குறைத்தது. சிங்கப்பூரில் புறநகர் ரயில் சேவை தனியாரிடம் இருந்தது. அந்த நிறுவனம் போதுமான முதலீடு செய்யாததால், அடிக்கடி ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மக்கள் கோபப்பட, கடைசியில் அரசே அதை எடுத்துக்கொண்டது.

‘பிசினஸ் செய்வது தனியார் நிறுவனங்களின் வேலை, அதை அரசு செய்யக்கூடாது’ என்பது மோடியின் கொள்கை. ஆனால், சீனா இதற்கு நேர் எதிராக இருக்கிறது. அங்கும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களும் தரமான சேவை வழங்கி அவற்றுடன் போட்டி போடுகின்றன. ‘ஃபார்ச்சூன் 500’ என்று அழைக்கப்படும் உலகின் டாப் நிறுவனங்களில் 124 சீன நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் 91 பொதுத்துறை நிறுவனங்கள். வலிமையான பொதுத்துறை நிறுவனங்களே ஒரு தேசத்தைப் பொருளாதார வல்லரசாக மாற்ற முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism