அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ஒன் பை டூ

தமிழன் பிரசன்னா, கே.பி.ராமலிங்கம்
News
தமிழன் பிரசன்னா, கே.பி.ராமலிங்கம்

“பழைய சவால்களை முறியடித்துவிட்டு, புதிய இந்தியா வேகமாக வளர்ந்துவருகிறது!” என்ற பிரதமர் மோடியின் கருத்து...

தமிழன் பிரசன்னா
தமிழன் பிரசன்னா

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“உண்மைதான். பழைய இந்தியாவில், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மூவரும் சகோதரர்களாக ஒற்றுமையுடன் இருந்தோம். ஆனால், மோடியின் புதிய இந்தியா, அந்த ஒற்றுமையைச் சிதைத்து, பிரச்னை செய்வதில் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக `அமெரிக்க டாலரின் மதிப்பைப் பாதியாகக் குறைப்பேன்’ என்றார் மோடி. ஆனால், இப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. உலக அளவில் டீசல் விற்பனை விலையில் மூன்றாம் இடம், பெட்ரோல் அதிகபட்ச விலையில் விற்பனை செய்வதில் ஆறாவது இடம் என்று மோடியின் புதிய இந்தியா மக்களை வதைப்பதில் முன்னேறிக்கொண்டேதான் இருக்கிறது. `உலகம் முழுவதும் கொரோனா பேரிடருக்குப் பிறகு ஏழு கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே சென்றிருக்கிறார்கள். அவர்களில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் இந்தியர்கள்’ என்று உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை சொல்கிறது. உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியா 101-வது இடத்திலிருந்து 107-வது இடத்துக்கு வளர்ந்திருக்கிறது. இவையனைத்துமே மோடி அரசின் மாபெரும் சாதனைதான். தன் கொடிய நச்சுப் பற்களைக்கொண்டு இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. மோடி உருவாக்கிக்கொண்டிருக்கும் புதிய இந்தியா இந்தியர்களுக்கானது அல்ல ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கானது. அவர்களின் வளர்ச்சிக்கானது. அதைத்தான் மோடி சொல்லியிருக்கிறார்!”

கே.பி.ராமலிங்கம்
கே.பி.ராமலிங்கம்

கே.பி.ராமலிங்கம், தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

``சரியாகச் சொல்லியிருக்கிறார். கொரோனா பேரிடர் சமயத்தில் உலகின் வல்லரசு நாடுகளே பொருளாதாரரீதியாக ஆட்டம் கண்டபோதும், இந்தியப் பொருளாதாரம் முன்னேறியிருக்கிறது. உக்ரைன் போர் சமயத்தில், அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை மீட்பதற்காகப் போர் நிறுத்தப்பட்டதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் பலம் தெரியவந்தது. நீண்டகாலமாக வழக்கு மன்றத்திலிருந்த அயோத்தி பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு, அற்புதமான ராமர் கோயில் கட்டப்பட்டுவருகிறது. சுதந்திர இந்தியாவில் நமக்கு நாமே நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டிவருகிறோம். இந்தியா முழுவதும் நீர்ப்பாசன வசதிகள் செய்து, வறண்டு கிடந்த ஏழு லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றியிருப்பது மாபெரும் வேளாண் புரட்சி. இந்த எட்டு ஆண்டுகளில், வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த பல தடைகளை நீக்கி பிரதமர் புதிய இந்தியாவைக் கட்டமைத்திருக்கிறார். புதிய இந்தியா வியாபாரத்தில், ஏற்றுமதியில், ராணுவப பலத்தில் முன்னேறியிருக்கிறது. முதன்முறையாக உள்நாட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பல் தயாரித்து சாதனை படைத்திருக்கிறது. உள்நாட்டுத் தீவிரவாதம் முற்றிலுமாக அடக்கப்பட்டு மக்கள் நிம்மதியுடன் வாழ்கிறார்கள். உலகத் தலைவர்களெல்லாம் நமது பிரதமரைப் பின்பற்றிவருகிறார்கள். ஆனால், இந்தியாவில் சிலர் தங்களின் அரசியல் சுயலாபத்துக்காக, பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியைக் குறை கூறிவருகிறார்கள்!”