Published:Updated:

ஒன் பை டூ

திலகபாமா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
திலகபாமா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

“30 ஆண்டுகளுக்கும் மேலாக வட மாவட்டங்களில் கல்வி மேம்பாட்டுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனும் மருத்துவர் ராமதாஸின் கருத்து?

ஒன் பை டூ

“30 ஆண்டுகளுக்கும் மேலாக வட மாவட்டங்களில் கல்வி மேம்பாட்டுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனும் மருத்துவர் ராமதாஸின் கருத்து?

Published:Updated:
திலகபாமா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
திலகபாமா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

திலகபாமா, பொருளாளர், பா.ம.க

``மிகச் சரியானது. தற்போது வெளியாகியிருக்கும் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில்கூட கடைசி பத்து இடங்களில் பெரும்பாலும் வட மாவட்டங்கள்தான் இருக்கின்றன. கல்வியைப் பொறுத்தவரை எல்லோருக்கும் ஒரே சட்டம், ஒரே திட்டம்.... எனவே அறிவிப்புகளைப் பள்ளிக் கல்வித்துறை செய்கிறது. கல்வியில் பலவீனமாக இருக்கும் மாவட்டங்களைப் பலப்படுத்தும் நிர்வாகத் திட்டமிடல் ஆட்சியாளர்களுக்கும் இல்லாமல் போய்விட்டது. அதுவே தொடர்ந்து வட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதற்கான காரணம். தவிர, வட மாவட்டங்களில் வன்னியர்களும், பட்டியலின மக்களும் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியிருப்பதும் இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஏராளமான குழந்தைத் திருமணங்கள், இடைநிற்றல்கூட வட மாவட்டங்களில்தான் அதிகமாக நிகழ்கின்றன. விழிப்புணர்வுக் கூட்டங்கள், கல்விக்கூடங்களை நோக்கி அவர்களை வரவழைப்பதற்கான கூடுதலான திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும். 3,800 ஓராசிரியர் பள்ளிகளில், பெரும்பாலானவை வட மாவட்டங்களில்தான் இருக்கின்றன. ஆசிரியர் பற்றாக்குறையைச் சரிசெய்து, 25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். ஐயா சொன்னதுபோல, தொடக்கப்பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், உயர் வகுப்புகளில் பாடத்துக்கு ஓர் ஆசிரியரை நியமித்தல், மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி ஆகியவை கொடுக்கப்பட வேண்டும்!’’

திலகபாமா
திலகபாமா
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``தவறான கருத்து. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. உயர்கல்வியில் கடலூர் மாவட்டத்தில் அதிகமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாடு முழுவதுக்கும் சில திட்டங்கள் கொண்டுவரப்படும். அதேவேளையில், ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் என்னென்ன மாதிரியான பிரச்னைகள் இருக்கின்றன, என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பதை மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஆராய்ந்து அதற்கேற்ப திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. 2006-11 காலகட்டத்தில், விருதுநகர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எனப் பிரத்யேக திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டன. ஓராசிரியர் பள்ளிகள் மதுரை, உசிலம்பட்டி பகுதிகளிலுள்ள சீர்மரபினர், ஆதிதிராவிடர் பள்ளிகளில்தான் அதிகமாக இருந்தன. அவற்றைக் கடந்த தி.மு.க ஆட்சியிலேயே மேம்படுத்தினோம். தருமபுரி மாவட்டமெல்லாம் பள்ளிக்கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார். ஆனால், 1996-2001 காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருந்தபோதே பல்வேறு முன்னெடுப்புகள் நடந்திருக்கின்றன. விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் பின்தங்கியிருப்பது உண்மைதான். கல்வியை நோக்கிய பார்வை அந்த மக்களிடம் அதிகமாக இல்லை. ஆனால், அதைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் இந்த அரசிடம் இருக்கின்றன!’’