Published:Updated:

ரஷ்ய அதிபர் புதின் விசிட்... இந்தியா அமைக்கும் சக்கர வியூகம்!

சீனாவின் கடல் பரப்பைச் சுற்றிலும், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் அமெரிக்காவுக்குக் கடற்படைத் தளங்கள் உள்ளன.

பிரீமியம் ஸ்டோரி

சீனாவுடனான எல்லைப் பிரச்னை இந்தியாவுக்குக் குடைச்சலைக் கொடுத்துவரும் நிலையில், வரும் டிசம்பர் 6-ம் தேதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். சீனாவுக்கு எதிராக இந்தியா அமைக்கும் சக்கர வியூகத்தின் ஒரு பகுதியாக புதினின் இந்த விசிட் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ரஷ்ய அதிபரின் இந்தப் பயணத்தில், அந்நாட்டுடன் இரண்டு முக்கியமான உடன்படிக்கையை டெல்லி செயல்படுத்தவிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்த வெளியுறவுத்துறை அதிகாரிகள்!

போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பவும், உணவுப்பொருள்கள், உதிரி பாகங்களைப் பெறுவதற்கும் ஒரு நாட்டின் ராணுவத் துறைமுகங்களை மற்றொரு நாடு பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தங்கள் அவசியம். இப்படியான ஒப்பந்தங்களைப் பல ஆண்டுகளாக இந்தியா மேற்கொள்ளாத நிலையில், முதன்முறையாக 2016-ம் ஆண்டு அமெரிக்காவுடன் ‘லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோரண்டம் ஆஃப் அக்ரிமென்ட்’ (LEMOA) என்றொரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலமாக, இந்தியாவுக்குச் சொந்தமான ராணுவத் துறைமுகங்களை அமெரிக்காவும், அமெரிக்காவின் ராணுவத் துறைமுகங்களை இந்தியாவும் ராணுவரீதியாகப் பயன்படுத்திக்கொள்ள வழிவகை உருவானது. இந்த மாடலில், ‘ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், சிங்கப்பூர், தென்கொரியா நாடுகளுடன் அடுத்தடுத்து ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்ட இந்தியா, சீனாவைச் சுற்றிலும் கடல் பரப்பில் சக்கர வியூகம் அமைக்கிறது’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

நம்மிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிலர், ‘‘சீனாவின் கடல் பரப்பைச் சுற்றிலும், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் அமெரிக்காவுக்குக் கடற்படைத் தளங்கள் உள்ளன. 2016-ம் ஆண்டு அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பயனாக, இந்தத் தளங்களை இந்தியப் போர்க்கப்பல்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். போர்க்கப்பலில் பயணிக்கும் வீரர்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள், கப்பலின் உதிரி பாகங்களை இதன் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், நிரந்தரமாக அந்தத் துறைமுகத்தில் நம் போர்க்கப்பல்களை நிறுத்திவைக்க முடியாது. இதன் பயன்பாடு மிக முக்கியத்துவமானது என்பதை அறிந்துதான், சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளுடன் இப்படியான ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொள்கிறது.

2017-ம் ஆண்டு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் சீனாவின் முதல் வெளிநாட்டு கடற்படைத்தளம் அமைக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, மார்ச் 2018-ல் பிரான்ஸ் நாட்டுடன் ‘லாஜிஸ்டிக்ஸ் சப்போர்ட் அக்ரிமென்ட்’ கையெழுத்திடப்பட்டு, இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள அந்த நாட்டின் ரீயூனியன் தீவுக் கடற்படைத்தளத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது. தற்போது, ரஷ்ய அதிபர் புதினின் வருகையையொட்டி இப்படியான ஓர் ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் இந்தியா கையெழுத்திடவிருக்கிறது. ‘ரெசிபுரோக்கல் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் அக்ரிமென்ட்’ (RELOS) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, ரஷ்யாவின் ராணுவத் துறைமுகங்களை இந்தியப் போர்க்கப்பல்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். வடக்கில் ஆர்க்டிக் கடலில் ஆரம்பித்து, ஜப்பானியக் கடல், மஞ்சள் கடல், கிழக்கு மற்றும் தெற்கு சீனக் கடல் வரை பல்வேறு நாடுகளுடனான லாஜிஸ்டிக்ஸ் ஒப்பந்தங்கள் மூலமாக இந்தியப் போர்க்கப்பல்களுக்கு அனுமதி கிடைக்கும். சீனாவுடன் போர் மூளூம்பட்சத்தில், அப்போது இது பெரிதும் கைகொடுக்கும்.

தவிர, ரஷ்யாவிடம் ஏற்கெனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி, எஸ்-400 ரக ஏவுகணைகள் விரைவில் இந்தியாவுக்கு வரவிருக்கின்றன. 40,000 கோடி ரூபாய்க்கு, இந்த வகை ஏவுகணைகள் ஐந்துக்கு அக்டோபர் 2018-ல் இந்தியா ஆர்டர் கொடுத்திருந்தது. பாகிஸ்தானின் எந்தப் பகுதியிலிருந்து போர் விமானங்கள் கிளம்பினாலும், திபெத்திய பகுதியில் சீன ராணுவ விமானங்கள் பறந்தாலும், எஸ்-400 ரேடார் மூலமாகக் கண்காணிக்கலாம். நீண்ட தூரம் பாயும் ரஷ்ய ஏவுகணைகளும் இந்த ஒப்பந்தத்துக்குள் அடக்கம். ஆனால், ரஷ்யாவிடமிருந்து போர்த் தளவாடங்களை எந்த நாடு பெற்றாலும், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துவருகிறது அமெரிக்கா. இதற்காக, ‘காட்ஸா’ என்கிற பெயரில் தனிச்சட்டத்தையும் அவர்கள் உருவாக்கியிருக்கின்றனர். ஏற்கெனவே எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து வாங்கிய சீனா, துருக்கி நாடுகள் இந்தத் தடையைச் சந்தித்துள்ளன. இந்தியாமீது அப்படியானதொரு தடையை அமெரிக்கா தொடுத்தால், அது அந்த நாட்டுக்குத்தான் இழப்பாகிவிடும்.

ரஷ்ய அதிபர் புதின் விசிட்... இந்தியா அமைக்கும் சக்கர வியூகம்!

‘குவாட்’ நாடுகள் கூட்டமைப்பின் ஓர் அங்கமாகவும், தெற்காசியாவில் அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய நண்பனாகவும் இந்தியா இருக்கிறது. அமெரிக்க நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சந்தையாகவும் இருக்கிறது. இந்தச் சூழலில், ‘நாம் எங்கேயிருந்து ஆயுதங்களை வாங்க வேண்டும்’ என்று அமெரிக்கா தீர்மானிக்க முடியாது. இதை, நவம்பர் 15-ம் தேதி தன்னைச் சந்தித்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார் பிரதமர் மோடி. ‘காட்ஸா’ சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பிருந்தே, ரஷ்யாவுடன் இந்தியா ராணுவரீதியிலான வர்த்தகத்தைக் கொண்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் வாஷிங்டனுக்கும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதையும் மீறி அமெரிக்கா நெருக்குதல் கொடுப்பதற்கு வாய்ப்பு இல்லை’’ என்றார்கள் அந்த அதிகாரிகள்.

கொரோனா பரவலைத் தொடர்ந்து, ஒரு வருடமாக ரஷ்யாவைவிட்டு வெளியே வராத புதின், கடந்த ஜூன் மாதம்தான் அமெரிக்க அதிபரைச் சந்திப்பதற்காக ஜெனிவாவுக்குச் சென்றார். அதற்குப் பிறகு இந்தியாவுக்குத்தான் அவர் பயணமாகவிருக்கிறார். ரஷ்ய அதிபரின் இந்தப் பயணம் மூலமாக சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியா மறைமுக செக் வைப்பதோடு, ‘எங்கள் வியாபாரத்தில் தலையிடாதே’ என அமெரிக்காவுக்கும் ‘ஃபுல் ஸ்டாப்’ வைப்பதுதான் சர்வதேச அரசியலை தகிக்கவைத்திருக்கிறது. புதினின் விசிட், சீனாவைச் சுற்றி இந்தியா கட்டமைக்கும் சக்கர வியூகத்துக்கு வலுசேர்க்கும் என்பதில் மாற்றமில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு