Published:Updated:

உத்தவ் தாக்கரே ராஜினாமா; கேக் வெட்டி கொண்டாடிய அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் - அடுத்த திட்டம் என்ன?

கேக் வெட்டி கொண்டாடும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்

முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே விலகுவதாக அறிவித்தவுடன் கோவாவில் தங்கியிருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

உத்தவ் தாக்கரே ராஜினாமா; கேக் வெட்டி கொண்டாடிய அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் - அடுத்த திட்டம் என்ன?

முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே விலகுவதாக அறிவித்தவுடன் கோவாவில் தங்கியிருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

Published:Updated:
கேக் வெட்டி கொண்டாடும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்

மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்துவந்த அரசியல் நெருக்கடி நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆளுநரின் உத்தரவை ஏற்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பாகவே முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். உத்தவ் தாக்கரே இன்று பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கருதி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அஸ்ஸாமிலிருந்து கோவா வந்து தங்கியிருந்தனர். உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார் என்ற செய்தியைக் கேட்டவுடன் கோவாவில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.

இது குறித்து அதிருப்தி எம்.எல்.ஏ ஒருவர் கூறுகையில், ``நாங்கள் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவைக் கொண்டாடவில்லை. பால் தாக்கரேவின் கொள்கை வெற்றி பெற்றதைத்தான் கொண்டாடினோம்” என்று தெரிவித்தார்.

மகிழ்ச்சியைக் கொண்டாடும் பாஜக தலைவர்கள்
மகிழ்ச்சியைக் கொண்டாடும் பாஜக தலைவர்கள்

ஏக்நாத் ஷிண்டே இரவே எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். மும்பையிலும் பாஜக தலைவர்கள் தாஜ் ஹோட்டலில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்ததை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். இன்று பாஜக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஆளுநரைச் சந்தித்து பட்னாவிஸ் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய அரசில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதோடு அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 12 பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று கோவாவிலிருந்து மும்பைக்கு வரும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் முதலில் கூடி ஆலோசனை நடத்திவிட்டு ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநரைச் சந்திக்கின்றனர். அவர்கள் `பாஜக அரசு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கிறோம்’ என்று நேரில் சென்று ஆளுநரிடம் தெரிவிக்கவிருக்கின்றனர்.

உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துவிட்டதால் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. `கடந்த இரண்டரை ஆண்டில் பாஜக பலமுறை உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்க்க முயன்றது. ஆனால் முடியவில்லை. இப்போது சிவசேனாவில் இருந்த ஒருவரைக்கொண்டே ஆட்சிக் கவிழ்ப்பைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!