Published:Updated:

`ஆளுநரின் முடிவு, ஜெட் விமானத்தைவிட வேகம்’ - சிவசேனா... கோவா செல்லும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்!

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்

அஸ்ஸாமின் கவுஹாத்தியில் தங்கவைக்கப்பட்டிருக்கும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கோவாவுக்குச் செல்கின்றனர்.

`ஆளுநரின் முடிவு, ஜெட் விமானத்தைவிட வேகம்’ - சிவசேனா... கோவா செல்லும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்!

அஸ்ஸாமின் கவுஹாத்தியில் தங்கவைக்கப்பட்டிருக்கும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கோவாவுக்குச் செல்கின்றனர்.

Published:Updated:
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்

மகாராஷ்டிராவில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசை நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டும்படி ஆளுநர் பகத்சிங் கோஷாரியா கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. 16 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீதான பதவிப் பறிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு வரும் 12-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தடை விதிக்கும்படி சிவசேனா கேட்டுக்கொண்டிருக்கிறது.

இன்று மாலை இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதாகத் தெரிவித்திருக்கிறது. பாஜக தலைவர்கள் கேட்டுக்கொண்ட அடுத்த நாளே ஆளுநர் கோஷாரியா பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு பிறப்பித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ``ஆளுநரின் முடிவு ஜெட் விமானத்தைவிட வேகமாக இருக்கிறது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

ரஃபேல் விமானம்கூட இந்த அளவுக்கு வேகமாக இருக்காது. ஆளுநர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக சிவசேனா தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் பதவிப் பறிப்பு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்காமல் இருக்கும்போது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பிறப்பித்திருக்கும் உத்தரவு சட்டவிரோதமானது. எதையும் நாங்கள் சட்டபூர்வமாகவே செய்வோம். சட்டபூர்வமாகவே போராடுவோம். எங்களுடன் போராடுவதாக இருந்தால் நேரடியாகப் போரிடுங்கள். ஆளுநரைப் பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கோவாவுக்கு இடம் மாறும் எம்.எல்.ஏ-க்கள்!

இதற்கிடையே அஸ்ஸாமில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அங்கிருந்து கோவாவுக்கு வரவிருக்கின்றனர். இன்று மாலைக்குள் கோவாவுக்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்காக பாஜக ஆளும் கோவாவில் ஹோட்டல் ஒன்றில் 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று இரவு கோவாவில் தங்கிவிட்டு மும்பைக்கு வரும் வகையில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தங்களது பயணத் திட்டத்தில் மாற்றம் செய்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!