Published:Updated:

மதிமுக: அதிகரிக்கும் கலகக்குரல்கள்... நிர்வாகிகள் போர்க்கொடி! - என்ன செய்யப்போகிறார் வைகோ?

துரை வையாபுரி - வைகோ - ஸ்டாலின்

வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுக-வில் கலகம் தொடங்கியிருக்கிறது. திமுக-வில் கட்சியைக் கரைத்துவிடுவதே மேலானது என்கிற வாதமும் வைக்கப்படுகிறது.

மதிமுக: அதிகரிக்கும் கலகக்குரல்கள்... நிர்வாகிகள் போர்க்கொடி! - என்ன செய்யப்போகிறார் வைகோ?

வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுக-வில் கலகம் தொடங்கியிருக்கிறது. திமுக-வில் கட்சியைக் கரைத்துவிடுவதே மேலானது என்கிற வாதமும் வைக்கப்படுகிறது.

Published:Updated:
துரை வையாபுரி - வைகோ - ஸ்டாலின்

1993-ல் திமுக-விலிருந்து வைகோ வெளியானதற்கு, கருணாநிதி தன்னுடைய மகன் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி வாரிசு அரசியல் செய்கிறார் என்ற காரணமும் உண்டு. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது நிரூபணமாகும் வகையில், அதே வாரிசு குறித்த சர்ச்சை ம.தி.மு.க-விலும் எழத் தொடங்கிவிட்டது. ம.தி.மு.க-வில் துணைப் பொதுச் செயலாளர்கள், தலைமை கழகச் செயலாளர் உள்ளிட்ட நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. ஏற்கெனவே தலைமை கழகச் செயலாளர் பதவிக்கு வைகோவின் மகன் துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதான் ம.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ம.தி.மு.க தலைவர் வைகோ, துரை வைகோ
ம.தி.மு.க தலைவர் வைகோ, துரை வைகோ

இதனால், வைகோவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க சில நிர்வாகிகள் தயாராகிவிட்டனர். சிவகங்கையில் அதிருப்தி நிர்வாகிகள் ஆலோசனையிலும் ஈடுபட்டனர். அக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முக சுந்தரம், உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், வழக்கறிஞர் அணிச் செயலாளர் பாரத மணி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரச்னை குறித்து ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் விசாரித்தோம். “போர்க்கொடி தூக்கியிருக்கும் செவந்தியப்பன் வைகோவின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர். பொடா சட்டத்தின் கீழ் கைதாகி, வைகோவுடன் பல மாதங்கள் சிறையில் இருந்தவர். அப்படிப்பட்ட நபரே இன்று அதிருப்தியில் இருக்கிறார் என்றால் கட்சியின் நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள். கலிங்கப்பட்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வைகோ, அவரின் மகன் துரை வைகோவை மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக தேர்வு செய்ய முடிவு செய்தார். எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி அவசரமாகக் கூட்டம் நடத்தி, துரை வைகோவை ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளராகத் தேர்வுசெய்ததால் 8-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அக்கூட்டத்திலிருந்து வெளியேறியதும் நடந்திருக்கிறது.

மதிமுக அதிருப்தியாளர்கள் கூட்டம்
மதிமுக அதிருப்தியாளர்கள் கூட்டம்

கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு எதிராகப் பேசி விமர்சனம் செய்திருக்கிறார் வைகோ. தி.மு.க-வைவிட்டு வெளியேறியதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், வாரிசு அரசியலை, அதாவது ஸ்டாலினை வைகோ எதிர்த்ததும் முக்கியமான காரணமாகும். அப்படிப்பட்ட வைகோ எம்.பி பதவிக்காக முன்பு, `ஸ்டாலினை முதல்வராக அமர்த்திப் பார்ப்பதே தனது லட்சியம்’ என்றார். இப்போது, தி.மு.க-வைப் பின்பற்றி அவரின் மகன் துரையைப் பொறுப்புக்குக் கொண்டுவந்துள்ளார். தி.மு.க பாணியில் செயல்படுவதோடு நிறுத்திக்கொண்டால்கூட பரவாயில்லை, ஆனால் தி.மு.க-வுடனேயே ம.தி.மு.க-வைக் கரைத்துவிட வேண்டும் என்பதற்கான மறைமுகப் பேரமும் நடத்திவருகிறார்கள் என்கிறார்கள். தொண்டர்கள் விருப்பப்பட்டார்களானால் தாராளமாக இணைத்துக்கொள்ளட்டும் என்பதுதான் அதிருப்தியாளர்களின் வாதமும்கூட! எதுவாயினும் குறைந்தபட்சம் நிர்வாகிகளுக்காவது தெரியப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கருத்து” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவனிடம் பேசினோம். “போனில் எந்த விஷயத்தையும் பேச முடியாது. நேரில் வந்தால் ஒன் டு ஒன் பேசிக்கொள்ளலாம். எங்களுக்கு விளம்பரப்படுத்திக்கொள்வதில் எண்ணமில்லை” என்றவரிடம் உங்கள் டிமாண்ட் என்ன என்பதையாவது சொல்லலாமே என்று கேட்டோம். தொடர்ந்து பேசியவர், “கட்சியை தி.மு.க-வுடன் இணைப்பதாக தலைமையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இணைத்துக்கொள்ளுங்கள் என்று நாங்களும் சொல்கிறோம். மற்றபடி பொதுக்குழுக் கூட்டத்துக்கு (இன்று) நான் செல்லப்போவதில்லை” என்பதோடு முடித்துக்கொண்டார்.

வைகோ - ஸ்டாலின்
வைகோ - ஸ்டாலின்

ம.தி.மு.க தலைமையின் விளக்கமறிய முதலில் கணேசமூர்த்தி எம்.பி-யைத் தொடர்புகொண்டபோது, `வெளியில் இருப்பதாக’ சொல்லி போனை வைத்துவிட்டார். அடுத்ததாக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவைத் தொடர்புகொண்டோம், “செய்தித் தொடர்பாளர் நன்மாறனிடம் பேசுங்கள்” என்று அவரும் இணைப்பை துண்டித்தார். நன்மாறனிடம் பேசினால், ‘நோ கமென்ட்ஸ்’ என்று முடித்துக்கொண்டார். இறுதியாக வைகோ மகன் துரை வைகோவைத் தொடர்புகொண்டோம். பலமுறை போன் செய்தபோதும் ஒருமுறைகூட எடுத்துப் பேசவில்லை.

இந்த நிலையில் இன்று சென்னையில் மதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் அதிருப்தி நிர்வாகிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வைகோ மகன் துரை வையாபுரி கட்சித் தலைமைக் கழகச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. கலகக் குரல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் வைகோ என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism