Published:Updated:

`சசிகலா தலைமை; பிரமாண்ட ஏற்பாடுகள்!' - திருமண உற்சாகத்தில் திவாகரன் குடும்பம்

திவாகரன் - ஜெய் ஆனந்த்
திவாகரன் - ஜெய் ஆனந்த்

`வரும் பிப்ரவரி மாதம் 26-ம் தேதிக்குள் சசிகலா சிறையிலிருந்து உறுதியாக வெளியே வந்துவிடுவார்' என்கிறார்கள் மன்னார்குடி உறவுகள்.

திவாகரன் மகன் ஜெய்ஆனந்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் மகளை வரும் மார்ச் மாதத்தில் கரம் பிடிக்கிறார். `அதற்குள் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார். அ.தி.மு.க-விலும் பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. கல்யாணமாக இல்லாமல் மாநாடுபோல் இந்தத் திருமணத்தை நடத்துவதற்கான பணிகளில் இப்போதே இறங்கிவிட்டார் திவாகரன்' எனத் தஞ்சாவூரில் உள்ள சசிகலா உறவுகள் உற்சாகமுடன் கூறுகிறார்கள்.

சசிகலா - திவாகரன்
சசிகலா - திவாகரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றார். தினகரன் அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டு, அவர் அ.ம.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். திவாகரனுக்கும் தினகரனுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு தரப்பும் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டனர்.

இதையடுத்து திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அதில், அவர் மகன் ஜெய் ஆனந்துக்கு முக்கிய பொறுப்புகளையும் வழங்கினார். கட்சி தொடங்கி தினகரனை விமர்சித்து வந்ததால், `என்னை அக்கா' என திவாகரன் அழைக்கக் கூடாது என்று சசிகலா தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகு, `இனி நான் சசிகலாவை அக்கா என அழைக்க மாட்டேன். முன்னாள் சகோதரி என்றே அழைப்பேன்' எனத் திவாகரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

திவாகரன்
திவாகரன்

`கட்சி, ஆட்சி, நிர்வாகம் என எல்லாம் கையைவிட்டுப் போச்சு. அதை மீட்பதற்கான பணிகளைச் செய்யாமல், உறவுகளுக்குள்ளேயே இப்படி மோதிக்கொள்கிறார்களே?' என சசிகலா குடும்ப உறவுகள் பலர் வேதனைப்பட்டனர். `இந்த மோதல்கள், மனக்கசப்புகள் விரைவில் தீர இருக்கின்றன. அதற்கு வித்தாக அமையவிருக்கிறது, ஜெய்ஆனந்தின் திருமணம்' என்று உற்சாகமாகப் பேசிக்கொள்கிறார்கள் மன்னார்குடி உறவுகள்.

Vikatan

தஞ்சாவூரைச் சேர்ந்த சசிகலா உறவுகள் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ``திவாகரன் மகன் ஜெய்ஆனந்தும் சசிகலாவின் அக்கா மகன் பாஸ் என்கிற பாஸ்கரன் மகளும் காதலித்து வந்தனர். ஜெயஸ்ரீ டாக்டருக்குப் படித்திருக்கிறார். இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து இருதரப்பிலும் பேசிக்கொண்டிருக்கும்போது அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் தற்காலிகமாகத் திருமண பேச்சைத் தள்ளிவைத்தனர். இப்போது குடும்பத்தினரிடையே இருந்த மனக்கசப்புகள் விலகத் தொடங்கிவிட்டன.

தினகரன் திவாகரன்
தினகரன் திவாகரன்

சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்குத் திரைமறைவில் டெல்லியில் முகாமிட்டு பல செயல்களைச் செய்தார் திவாகரன். ஜெய்ஆனந்த் சில மாதங்களுக்கு முன்பு சசிகலாவை சிறையில் சந்தித்துப் பேசினார் அப்போது, `உனக்கு மட்டும்தான், நான் எதையும் செய்யவில்லை' என உருகியிருக்கிறார் சசிகலா. `நீங்க வெளியே வந்தா, அதுபோதும் அத்தை' என ஜெய்ஆனந்த் கூற முதுகில் தட்டிக் கொடுத்து பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா.

இந்தநிலையில், ஜெய்ஆனந்துக்குத் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி மாதம் 26-ம் தேதிக்குள் சசிகலா சிறையிலிருந்து உறுதியாக வெளியே வந்துவிடுவார். இதனால், வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி மன்னார்குடி சுந்தரக்கோட்டை பண்ணை வீட்டில் பிரமாண்டமாக மாநாட்டைப்போல் திருமணத்தை நடத்துவதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார் திவாகரன்.

சசிகலா
சசிகலா

சசிகலா வெளியே வந்த பிறகு, அ.தி.மு.க-வில் நிச்சயமாக மாற்றங்கள் நிகழும். எல்லோரும் இணைவதற்கான சூழல் ஏற்படும். எப்படி இளவரசி மகன் விவேக் திருமணத்தை சசிகலா முன்னின்று நடத்தி வைத்தாரோ, அதேபோல் ஜெய்ஆனந்த் திருமணத்தை நடத்தி வைப்பார். அப்போது ஆட்சியாளர்கள் மன்னார்குடியில் முகாமிடுவார்கள். இவை நடக்கத்தான் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்'' என்கின்றனர் உற்சாகக் குரலில்.

அடுத்த கட்டுரைக்கு