Published:Updated:

`தமிழையும் தமிழகத்தையும் ஸ்டாலின் காப்பாற்றுவார்!' - தஞ்சை திருமணவிழாவில் திவாகரன்

திருமண விழாவில் திவாகரன்
திருமண விழாவில் திவாகரன்

`அரசியலில் நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். சிலருக்கு இடைஞ்சல் கொடுப்பதற்காகவே அரசியல் கட்சியைத் தொடங்கினேன். தமிழகத்தில் திராவிடப் பாரம்பர்யம் காக்கப்பட வேண்டும்' என்றார் திவாகரன்.

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆகியோர் சந்தித்துப் பேசி கொண்டனர். மேலும் `இன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலின் நாளைய தமிழகத்தின் முதல்வர் மட்டுமல்ல வருங்காலமும் அவர்தான்' என திவாகரன் ஸ்டாலினை வாழ்த்திப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண விழாவில் ஸ்டாலின், திவாகரன்
திருமண விழாவில் ஸ்டாலின், திவாகரன்

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்தின் சகோதரர் ராஜ்குமார் மகன் ஸ்ரீராம் சுப்பையா - சாருஹாசினி திருமணம் தஞ்சாவூரில் இன்று நடைப்பெற்றது. இதில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார் ஸ்டாலின்.

திருமண விழாவில் பேசிய திவாகரன், ``இன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலின்தான் நாளைய தமிழகத்தின் முதல்வர். அவர்தான் தமிழகத்தின் வருங்காலம். இன்றைக்குத் தமிழ்நாட்டின் நிலை மிகக் கேவலமாக உள்ளது. தமிழர்கள் இரண்டாம்தர நிலையில் நடத்தப்படுகிறோம்.

திருமண விழாவில் ஸ்டாலின்
திருமண விழாவில் ஸ்டாலின்

கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவருக்குப் பெரியாரை விமர்சித்து பேசும் அளவுக்கு இன்று துணிச்சல் வந்துவிட்டது. திராவிடத் தலைவர்கள் ஒருவர், ஒருவராக மறைந்துவிட்டதால் இந்த நிலை வந்துள்ளது. தமிழ், தமிழகம்தான் நமக்கு முதல் முக்கியம். அதைக் காப்பவர்களுக்குப்பின் நாம் நிற்க வேண்டும். தமிழையும் தமிழகத்தையும் நிச்சயம் ஸ்டாலின் காப்பார்.

அரசியலில் நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். சிலருக்கு இடைஞ்சல் கொடுப்பதற்காகவே அரசியல் கட்சியைத் தொடங்கினேன். தமிழகத்தில் திராவிடப் பாரம்பர்யம் காக்கப்பட வேண்டும். அதைக் காக்கும் தலைவர்தான் ஸ்டாலின். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற வேண்டிய பல இடங்கள், ஆளுங்கட்சியால் தட்டிப் பறிக்கப்பட்டிருக்கின்றன. விழிப்போடு இருந்திருந்தால் இன்னும் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருப்பீர்கள்" எனப் பேசினார்.

திருமண விழாவில் ஸ்டாலின்
திருமண விழாவில் ஸ்டாலின்

பின்னர் பேசிய ஸ்டாலின், ``புதுக்கோட்டையில் பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவராக இருந்த அரசகுமார், `என்னை அடுத்த முதலமைச்சர்' எனக் கூறினார். பின்னர் அவர் தி.மு.க-வில் இணைந்து விட்டார். தற்போது அதையே திவாகரனும் கூறி இருக்கிறார். அவர் எங்கே செல்வார் என்பது தெரியாது.

Vikatan

தமிழ்நாட்டில் நடைபெறுவதை ஆட்சி எனக் கூற முடியாது, அது வெறும் காட்சி. உள்ளாட்சித் தேர்தலில் விழிப்போடு இருந்த காரணத்தால்தான் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம். அதற்காகத்தான் தொடர்ந்து நீதிமன்றத்தை நாம் நாடினோம். முறையாகத் தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் 90 சதவிகித வெற்றியைப் பெற்றிருப்போம்.

ஸ்டாலினுடன் திவாகரன்
ஸ்டாலினுடன் திவாகரன்

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது சட்டமன்றத் தேர்தல் வெற்றியின் அடித்தளம். இதை உணர்ந்துகொண்டுதான் இப்போதே நம் மீது பல்வேறு விமர்சனங்களைக் கூறி வருகிறார்கள். என் மீது இரண்டு வழக்குகள் போட்டுள்ளார்கள். இரண்டு வழக்கு அல்ல இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டோம்.

மிசாவையே கண்டவர்கள் நாங்கள். ஏழை எளிய மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த ஆட்சிக்கு இல்லை. மத்திய அரசு கொண்டுவரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்து நிறுத்தாமல் மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. இதையெல்லாம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றார் கொதிப்புடன்.

பின் செல்ல