Published:Updated:

வீட்டில் எப்போதும் 20 பேர்; குழப்பிய 2 அறிக்கைகள்! - தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்

விஜயகாந்த்
விஜயகாந்த்

கொரோனா காலத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு அவரைக் கவனித்திருக்க வேண்டும். அதில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாகவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பாக வெளியான இரு வேறு அறிக்கைகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. `விஜயகாந்தின் விருகம்பாக்கம் வீட்டில் எப்போதும் 20 பேர் இருப்பார்கள். அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டிருக்க வேண்டும். அலட்சியமாக இருந்ததன் விளைவு இது' எனக் குமுறுகின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள்.

தலைமைக்கழக அறிக்கை
தலைமைக்கழக அறிக்கை

சென்னை மணப்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில், அவ்வப்போது பரிசோதனைக்காகச் செல்வது விஜயகாந்தின் வழக்கம். சர்க்கரைக் குறைபாடு உள்ளிட்ட உடல் பிரச்னைகளுக்காக அவருக்குத் தொடர் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுவந்தன. இந்தநிலையில், கடந்த 22-ம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் விஜயகாந்த். அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு `பாசிட்டிவ்' எனத் தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக, `தலைமைக் கழகம்' என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், ` வழக்கமாக ஆறு மாதத்துக்கு ஒரு முறை கேப்டன் விஜயகாந்த் மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் மியாட் மருத்துவமனைக்குச் சென்ற கேப்டனுக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், அது உடனடியாகச் சரிசெய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல்நலத்துடன் இருக்கிறார்' எனத் தெரிவிக்கப்பட்டது.

`லேசான கொரோனா அறிகுறி; சரி செய்யப்பட்டு விட்டது!’ - விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக

இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், `செப்டம்பர் 22 அன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கோவிட் 19 பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம்' எனத் தெரிவித்திருந்தார்.

மியாட் மருத்துவமனை அறிக்கை
மியாட் மருத்துவமனை அறிக்கை

`ஒரே நேரத்தில் இரண்டு முரண்பாடான அறிக்கைகள் ஏன்?’ என்று தே.மு.தி.க மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசியவர், ``மியாட் மருத்துவமனை அமைந்திருக்கும் பகுதியின் மாவட்ட நிர்வாகிகளுக்கே இது குறித்துத் தகவல் தெரியவில்லை. வாரம் ஒரு முறை சர்க்கரைக் குறைபாடுக்கு சிகிச்சை எடுப்பதற்காக அவர் மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அப்படி 22-ம் தேதி செல்லும்போதுதான் கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டது. அதைப் பற்றி வெளியில் சொல்வதைக்கூட பிரேமலதா தரப்பினர் விரும்பவில்லை. ஒருகட்டத்தில் தொண்டர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அறிக்கை வெளியிட்டார். அதுவும் அந்த அறிக்கையை யார் வெளியிட்டார்கள் என்பதும் தெரியவில்லை. மியாட் தரப்பிலிருந்து அறிக்கை வெளியான பிறகே நிலைமையை உணர முடிந்தது" என விவரித்தவர்கள்.

`` சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்துக்கொண்டு கேப்டன் வந்த பிறகும், கேப்டனின் உடல்நிலை தொடர்பான தகவல்களை வெளியில் கசியவிடாமல் குடும்பத்தினர் மிகுந்த கவனத்துடன் வைத்திருக்கிறார்கள். ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உடல்நிலையை வெளியே சொல்வதில் என்ன தவறு இருக்கிறது... விருகம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் இரண்டு பணிப்பெண்கள், இரண்டு டிரைவர்கள், உதவியாளர்கள் என 10 பேர் இருக்கின்றனர். வீட்டிலுள்ள நாய்ப் பண்ணையில் ஏராளமான நாய்களை வளர்க்கின்றனர். அவற்றை கவனித்துக்கொள்வதற்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர, விஜயகாந்த் மகனின் நண்பர்கள் என எப்போதும் 10 பேர் இருப்பார்கள். இவர்களெல்லோரும் வெளியில் சுற்றிக்கொண்டேயிருப்பவர்கள். கடந்த சில வருடங்களாகவே உடல் உபாதைகள் காரணமாக விஜயகாந்த் அதிகம் வெளியில் வருவதில்லை.

பிரேமலதா
பிரேமலதா

அவருக்குத் தேவையான உதவிகளைக்கூட உதவியாளர்கள்தான் செய்கின்றனர். கொரோனா காலத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு அவரைக் கவனித்திருக்க வேண்டும். அதில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாகவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 22-ம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்ட அன்றே, வீட்டில் வேலை செய்பவர்களுக்குத் தகவல் சென்றிருக்கிறது. `இரண்டு நாள்களுக்கு யாரும் வேலைக்கு வர வேண்டாம்' எனக் கூறிவிட்டார் பிரேமலதா. விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பாக மருத்துவர்கள் தெரிவிப்பதற்கு முன்பே, `குணமாகிவிட்டார்' என்று தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டதுதான் வேதனையைத் தருகிறது" என்றார் ஆதங்கத்துடன்.

இது தொடர்பாக, தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதியிடம் பேசினோம். ``எந்தக் குழப்பமும் இல்லை. அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்தது. அதிலிருந்து குணமாகிவிட்டார். மருத்துவமனையில் ஓய்வில் இருக்கிறார். அதைத்தான் அறிக்கையில் கூறியிருந்தோம். கேப்டன் செய்த புண்ணியமான காரியங்கள் அவரை குணப்படுத்திவிடும். கடவுளின் அருளால் அவர் விரைவில் வீடு திரும்புவார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு