Election bannerElection banner
Published:Updated:

பெட்டிக்குள் புதையலா... பூதமா? உதறலில் உ.பி-க்கள்... ரணகளத்தில் ர.ர-க்கள்..!

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி முடிந்தது. மே 2-ம் தேதிதான் பெட்டிகள் திறக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

ரிசல்ட் அறிவிக்கப்பட இன்னும் இரு வார காலம்தான் இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தைக்கூட கடக்க முடியாமல் தி.மு.க உடன்பிறப்புகளும், அ.தி.மு.க ரத்தத்தின் ரத்தங்களும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தினந்தோறும் இரு கட்சித் தொண்டர்களும் தங்களுக்குத் தெரிந்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், டி.வி நெறியாளர்கள் என ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
மாதிரிப் படம்

இது குறித்து தி.மு.க உ.பி-க்களிடம் பேசினோம். ``ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து மே 2-ம் தேதி வரையிலான காலகட்டம் எங்களுக்கு திக் திக் உணர்வைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 10 வருடங்களாக ஆட்சியில் இல்லை. பெரும் தொகையைக் கொடுத்து ஐபேக்கைப் பணியமர்த்தியிருக்கிறது தலைமை. இந்தச் சூழலில் ரிசல்ட் எப்படி வருமோ என்ற பதைபதைப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறதே தவிர குறையவில்லை.

வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாகவைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூம் அமைந்துள்ள கல்லூரிகளில் நாங்கள் தினமும் மூன்று ஷிஃப்ட் போட்டு கண்காணித்துவருகிறோம். அப்படியும்கூட இரவில் ஸ்ட்ராங் ரூம் அருகில் ஏதாவது நடந்துகொண்டிருக்கிறது. ஏஜென்ட்டுகள் உஷாராக இல்லையென்றால், ஸ்ட்ராங் ரூமைத் திறக்கும் வாய்ப்புகூட இருக்கிறது. இந்தநிலையில், இரவு நேர ஊரடங்கு வேறு அமல்படுத்தப்பட்டிருப்பதால், இரவு 10 மணிக்கு மேல் இன்னும் உஷாராக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தலைவர்களுக்கும் இந்தப் பதைபதைப்பு இல்லாமல் இல்லை. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக தலைவர் சுற்றுலா சென்றுவிட்டார். இன்னும் பிற இரண்டாம் கட்டத் தலைவர்கள் தங்களது வீடுகளில் முடங்கிவிட்டனர். அப்படியும் ஒவ்வொரு நாளும் வாக்கு எண்ணும் மையத்தைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் ஏஜென்ட்டுகளிடம் அவ்வப்போது நடப்பவை குறித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தலைவர்களுக்கே அப்படியென்றால் எங்கள் நிலைமையை யோசித்துப்பாருங்கள். அதனால்தான், எங்களுக்குத் தெரிந்த பத்திரிகையாளர்கள், விமர்சகர்களிடம் தினமும் கால் செய்து நிலைமை குறித்து விசாரித்துவருகிறோம்” என்றனர்.

அ.தி.மு.க ர.ர-க்களோ, ``வரும் கருத்துக்கணிப்புகள், எக்ஸிட் போல்கள் எல்லாமே தி.மு.க ஆட்சி என்றுதான் வருகின்ரன. 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சி மீது மக்களுக்கு எந்த ஒரு பெரிய எதிர்ப்பும் இல்லை என்பது வாக்குப்பதிவு சதவிகிதத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. கடைசி இரு தினங்களில், மாநிலம் முழுக்க எங்கள் ஆளும்தரப்புக்கு மக்களின் ஆதரவுக் குரல்கள் அபரிமிதமாக அதிகரித்தன. இதைப் பார்த்து தி.மு.க வேட்பாளர்களே கதிகலங்கிப்போய்க் கிடக்கிறார்கள்.


அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

இப்படியான சூழலில் எப்படி தி.மு.க-வுக்கு ஆதரவான சூழலில் நிலவுகிறது என்பது புரியவில்லை. இதனால்தான், அடிக்கடி எங்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பொது வாழ்க்கையில் உள்ளவர்களிடம் நிலைமையை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறோம்” என்றனர்.

எத்தனை முறை கேட்டாலும், பெட்டிக்குள் இருப்பது புதையலா அல்லது பூதமா என்பது மே 2-ம் தேதிதான் தெரியும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு