Published:Updated:

`இதை தி.மு.க-வினரே நினைத்துப்பார்க்கவில்லை!’ - அமைச்சரவை எதிர்பார்ப்பும் விடுபட்டவர்களும்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க அமைச்சரவைப் பட்டியல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பலர் விடுபட்டுள்ளார்கள், இன்னும் சிலர் எதிர்பாராத வகையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க அமைச்சரவைப் பட்டியல் ஒருவழியாக வெளியாகிவிட்டது. இதில் பல சுவாரஸ்யங்கள் அடங்கியிருப்பதாகச் சொல்கிறார் அறிவாலயப் புள்ளி ஒருவர். அவரிடம் பேசினோம், “தனி ஒருவனாக இருந்து, எப்படி வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் தயார்செய்து வெளியிட்டாரோ, அதுபோலவே அமைச்சரவைப் பட்டியலையும் தனியாகவே இருந்து ஃபைனல் செய்திருக்கிறார். மனைவி, மகன், மருமகனிடம் ஆலோசனை செய்தபோதிலும் இறுதி செய்தது ஸ்டாலின் மட்டுமே. இதில் அமைச்சர் பதவி கிடைக்கும் என நாம் நினைத்தவர்களுக்கெல்லாம் கிடைக்கவில்லை. நினைத்துப் பார்க்காதவர்களுக்கெல்லாம் பதவி கிடைத்துள்ளது ஆச்சர்யம்தான். அப்படி யார் யார் பட்டியலில் விடுப்பட்டவர்கள்?

`இதை தி.மு.க-வினரே நினைத்துப்பார்க்கவில்லை!’ - அமைச்சரவை எதிர்பார்ப்பும் விடுபட்டவர்களும்!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் துரைமுருகன் ஒரு அமைச்சர், அவர்போக அனைக்கட்டு நந்தகுமார் அமைச்சராவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்டவில்லை.

ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையாவுக்கு தேவேந்திர குல வேளாளர் கோட்டாவில் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பு நிலவியது, ஆனால் கிடைக்கவில்லை.

திருவிடைமருதூர் கோவி.செழியன், திரு.வி.க.நகர் தாயகம் கவி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் உதயசூரியன், காஞ்சிபுரம் எழிலரசன், திருவள்ளூர் டி.ஜெ.கோவிந்தராஜன், ஆயிரம் விளக்கு டாக்டர் எழிலன், ராதாபுரம் அப்பாவு, ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜியைத் தோற்கடித்த தங்கபாண்டியன், மதுரை வடக்கு கோ.தளபதி, திருவையாறு துரை.சந்திரசேகரன், திருப்பூர் தெற்கு செல்வராஜ், சேலம் வடக்கு பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், ஓசூர் ஒய்.பிரகாஷ், மானாமதுரை தமிழரசி ஆகியோர் அமைச்சர் பட்டியலில் நிச்சயம் இடம்பிடிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. ஆனால், இந்த முறை அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை”

ஸ்டாலின் முதல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை... யாருக்கு என்ன துறை?! -வெளியானது அமைச்சரவை பட்டியல்

சரி, நினைத்துக் கூடப் பார்க்காத எத்தனை பேர் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்?

``முதலில் சீனியர்களுக்கெல்லாம் அமைச்சரவையில் இடம் இருக்காது என்று சொன்னார்கள். ஆனால், 34 பேரில் 24 பேர் சீனியர்கள்தான். அவர்களிலும் எதிர்பார்க்காதோர் என்றால், ரகுபதி, முத்துசாமி, பெரியகருப்பன், வெள்ளக்கோவில் சாமிநாதன், கீதா ஜீவன், க.ராமச்சந்திரன், ஆர்.காந்தி, பி.மூர்த்தி, செஞ்சி மஸ்தான், மதிவேந்தன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அமைச்சர் பட்டியலைல் இடம்பிடிப்பார்கள் என்று தி.மு.க-வினரே நினைத்துப்பார்க்கவில்லை. இதில் ராஜகண்ணப்பனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதால் பெரியகருப்பனுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்ற தகவல் வெளியானது. அதேபோல், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்பதால் கீதா ஜீவனுக்கு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கியுள்ளார் ஸ்டாலின்” என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு