Published:Updated:

திருச்சி: மணல் கடத்தல்; போலீஸுக்கு மிரட்டல்! - திமுக ஒன்றியப் பொறுப்பாளர் கட்சியிலிருந்து நீக்கம்

வாகனம்
வாகனம்

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டுவந்ததால், ஆரோக்கியசாமியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறது தி.மு.க தலைமை.

திருட்டு மணல் அள்ளியதோடு போலீஸாரை மிரட்டிய குற்றத்துக்காக தி.மு.க பொறுப்பாளர் ஆரோக்கியசாமியை தற்காலிகமாகக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது தி.மு.க தலைமை. ஆரோக்கியசாமி கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணல் கடத்தலில் ஈடுபட்ட கிழக்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் ஆரோக்கியசாமி
மணல் கடத்தலில் ஈடுபட்ட கிழக்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் ஆரோக்கியசாமி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள முத்தப்புடையான்பட்டியில் மணல் கடத்துவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன்பேரில் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான ஒரு டீம் முத்தப்புடையான்பட்டியில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஜே.சி.பி-யைப் பறிமுதல் செய்ததோடு, மனோகர், கார்த்திகேயன், பவுன் சேகர் ஆகிய மூன்று டிரைவர்களையும் பிடித்து மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

``10 லட்சம் மரங்கள் இலக்கு; இதுவரை 6 லட்சம் நட்டிருக்கிறோம்!" - அமைச்சர் கே.என். நேரு

அப்போது, மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் ஆரோக்கியசாமி, ``எப்படி என்னுடைய வண்டிகளைப் பிடித்தீர்கள்?“ என்று காவல் நிலையத்தில் பிரச்னையில் ஈடுபட்டதோடு, ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் கொடுத்த அழுத்தத்தின்பேரில் காவல் நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டிருந்த மூன்று டிரைவர்கள், வண்டிகளை இன்ஸ்பெக்டர் அன்பழகன் விடுவித்ததாகக் கூறப்படுகிறது.

மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம்
மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம்

அதோடு யூனியன் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி மற்றும் டிப்பர்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டது குறித்து, டி.ஜி.பி வரை புகார் சென்றது. இதையடுத்து, விடுவிக்கப்பட்ட வாகனங்களையும், டிரைவர்களையும் உடனே பிடிக்க மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தாவுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில், டி.எஸ்பி பிருந்தா மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒன்றியப் பொறுப்பாளர் ஆரோக்கியசாமியிடம் பேசியிருக்கிறார். அதற்கு அவர், ``வண்டியையும் டிரைவர்களையும் ஒப்படைக்க முடியாது. உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கறாராகச் சொல்லியதாகத் தெரிகிறது.

டி.எஸ்.பி-யால் ஒன்றும் சொல்ல முடியாமல் ஆரோக்கியசாமியின் வீட்டுக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அவர் வெளியில் இருந்துகொண்டு, ``மேடம், நான்தான் சொல்லிவிட்டனே... அப்புறம் எதுக்கு வீட்டுக்கு வந்து பேசுறீங்க" எனப் பேசியிருக்கிறார். டி.எஸ்.பி-க்கு வேறு வழி தெரியாமல் இன்ஸ்பெக்டர் அன்பழகனுக்கு நெருக்கடி கொடுத்ததால், அவர் நேரடியாக ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டியைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறாராம்.

வாகனம்
வாகனம்

அவர் இரு தரப்புக்கும் 'பஞ்சாயத்து' செய்ததாகத் தகவல் வெளியானது. இதில், இரு பழைய வண்டிகளை மட்டும் ஒப்படைக்க ஆரோக்கியசாமி ஒப்புக்கொண்டிருப்பதாகவும் போலீஸாரும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் பறந்தன. ஆனால் டிரைவரை மட்டும் என்னால் அனுப்ப முடியாது என்று மறுப்பு தெரிவிக்க, இந்த விவகாரம் மீண்டும் டிஜிபி வரைக்கும் சென்றுவிட்டது.

இன்ஸ்பெக்டர் அன்பழகன்
இன்ஸ்பெக்டர் அன்பழகன்

இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டுவந்ததால், ஆரோக்கியசாமியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறது தி.மு.க தலைமை.

இது குறித்து ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டியிடம் பேசினோம். ``நான் யாருக்கும் பஞ்சாயத்து செய்யவில்லை. இன்ஸ்பெக்டர் என்னுடைய உறவினர். அவர்தான் என்னிடம் பேசினார்.

வாகனம்
வாகனம்

அதன்பேரில்தான் நான் ஆரோக்கியசாமியிடம் பேசி போலீஸார் சொல்வதைக் கேட்க வேண்டும். அவர்களுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்று பேச்சுவார்த்தை நடத்தி, வண்டியை ஒப்படைக்கவைத்தேன்.

ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ
ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ

இதில் என்ன தவறு இருக்கிறது... வேண்டுமென்றே என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதால், நான் பஞ்சாயத்து செய்ததுபோல் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். என்னைப் பற்றித் தொகுதியில் கேட்டுப் பார்த்துவிட்டுப் பேசுங்கள்" என்று சொன்னார்.

அடுத்த கட்டுரைக்கு