Published:Updated:

ஸ்டாலின் லோகோ.. பாதி காய்கறிகள்! -கேலி, கிண்டலால் தி.மு.க தலைமைக்கு பறந்த கடிதம்

தி.மு.க நிர்வாகி  பார்த்திபன்
தி.மு.க நிர்வாகி பார்த்திபன்

நான் கொடுக்கும் காய்கறிகளில் பாதியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு போட்டோ பிடித்து ரூ.500 மதிப்புள்ள பொருள்களை வழங்கியதற்கு நன்றி என கிழக்கு ஒன்றிய தி.மு.க வாட்ஸ்அப் குரூப் ஒன்றை உருவாக்கி அதிலும், முக நூலிலும் பரப்பி வருகின்றனர்.

பட்டுக்கோட்டையில் தி.மு.க நிர்வாகி ஒருவர் தன் சொந்த செலவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு காய்கறி, மாஸ்க் உள்ளிட்ட பொருள்களை வழங்கி வரும் நிலையில், சக தி.மு.க நிர்வாகிகள் சிலரே அவரின் செயலை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருவது தி.மு.க நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்த்திபன்
பார்த்திபன்

பட்டுக்கோட்டை தி.மு.க-வின் கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் பார்த்திபன். இவர், ஊரடங்கால் வருமானமின்றி தவிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து காய்கறி, முகக்கவசம், சானிடைஸர் உள்ளிட்ட பொருள்களை சக நிர்வாகிகளுடன் பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகிறார்.

இதை அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல் செய்து வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் துரை.சந்திரசேகருக்கு பார்த்திபன் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறி வருகின்றனர். இந்தத் தகவல் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நிவாரண பொருள்களுடன் பார்த்திபன்
நிவாரண பொருள்களுடன் பார்த்திபன்

பார்த்திபன் அனுப்பிய கடிதத்தில், ``தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படியும், மாவட்டச் செயலாளர் வழிகாட்டுதல் படியும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.500 மதிப்புள்ள காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகிறேன் என்பது தாங்கள் அறிந்ததே.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத முன்னாள் பட்டுக்கோட்டை ஒன்றியப் பெருந்தலைவராக இருந்தவரின் கணவரும், மாவட்ட விவசாய அணியின் துணை அமைப்பாளரும், தாமரங்கோட்டை வடக்கு ஊராட்சியின் செயலாளருமான முருகப்பன் தலைமையிலான 5-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் என்னுடைய இந்தச் செயலை முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

சமூக வலதளங்களில் உலா வரும் போட்டோ
சமூக வலதளங்களில் உலா வரும் போட்டோ

நான் கொடுக்கும் காய்கறிகளில் பாதியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு போட்டோ பிடித்து ரூ.500 மதிப்புள்ள பொருள்களை வழங்கியதற்கு நன்றி என கிழக்கு ஒன்றிய தி.மு.க வாட்ஸ்அப் குரூப் ஒன்றை உருவாக்கி அதிலும், முக நூலிலும் பரப்பி வருகின்றனர். இதில் வேதனை என்னவென்றால் ஸ்டாலின் போட்டோவுடன் கூடிய லோகோவையும் காய்கறியுடன் வைத்து போட்டோ எடுத்து இதைச் செய்து வருகின்றனர்.

இதுபோல் இன்னும் பல கேலி கிண்டல்கள் தொடர்ந்து கொண்டிருப்பது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது அ.தி.மு.க-வினருடன் சேர்ந்துகொண்டு எனக்கும், கழகத்துக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இதைச் செய்துவருகிறார். முருகப்பனின் செயல்கள் பற்றி ஏற்கெனவே தாங்கள் நிறைய அறிந்துள்ளீர்கள். தி.மு.க இப்பகுதியில் செயல்படவும், வளர்ச்சியடையவும் வேண்டும் என்றால் முருகப்பன் உள்ளிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் எழுதியுள்ளதாக தெரிவித்தனர்.

முருகப்பன்
முருகப்பன்

இது குறித்து பார்த்திபனிடம் பேசினோம், ``காய்கறி ஏற்றி வந்த லாரி சென்னையிலிருந்து வந்ததால் கொரோனா பரவும் எனக் கூறி முதலில் தடை போட முயற்சி செய்தார். இப்போது என்னைக் கேலி கிண்டல் செய்வதாக நினைத்து கட்சிக்கும் தலைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தி வருகிறார். அவரைப் பற்றி புகார் அனுப்பியுள்ளேன். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்" என்று மட்டும் தெரிவித்தார்.

முருகப்பனிடம் பேசினோம், ``காய்கறி கொடுத்துக் கொண்டிருக்கிறார் என கேள்விப்பட்டேன். அது தொடர்பாக என்னிடம் தகவல் எதுவும் சொல்லவில்லை என்பதால் நான் கருத்து எதுவும் சொல்வதற்கில்லை. சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு