`எங்களிடம் தலைமை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்!' - சிற்றரசு நியமனத்தில் அன்பகத்தில் கிளம்பிய அனல்

நிர்வாகிகள் பேசிக்கொண்டிருக்கும்போது, தன்னுடைய ஆதரவாளர்களுடன் கூட்டத்தில் இருந்து வெளியேறினார் மதன்மோகன். `இவர் ஏன் திடீரென வெளியேறுகிறார்?' எனக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சிற்றரசு முன்னிலையில், பகுதிக் கழகச் செயலாளர்கள் நடந்து கொண்டவிதம், அறிவாலயத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் இருந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் மறைவுக்குப் பிறகு, புதிய மாவட்டச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. மாவட்டத்தில் சீனியர்களின் சிலரின் பெயர்களும் அடிபட்டுக்கொண்டிருக்க, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த சிற்றரசுவை நியமித்து உத்தரவிட்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதில், சிற்றரசு வகித்த பதவி, அன்பழகன் மகன் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், புதிய மாவட்டப் பொறுப்பாளர் நியமனத்தைத் தொடர்ந்து அன்பகத்தில் பகுதிக்கழக நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். கூட்டத்தில் ஜெ.அன்பழகன் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி, `இந்த இயக்கத்துக்காக ஜெ.அன்பழகன், அவருடைய தந்தை ஜெயராமன் ஆகியோர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களை இந்த இயக்கம் எந்தநாளும் மறக்காது. ஜெ.அன்பழகனை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். அவருடைய தந்தை ஜெயராமன், எனக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளார். தற்போது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிற்றரசு தலைமையில் இயக்கப் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும்' என்றார்.

அவரைத் தொடர்ந்து, பகுதிச் செயலாளர்கள் தங்கள் கருத்தை முன்வைத்தனர். முதலில் பேசிய அண்ணா நகர் பகுதிச் செயலாளர் ராமலிங்கம், `இந்த இயக்கத்தில் நாங்கள் நீண்டநாள்களாக இருக்கிறோம். மாவட்டத்துக்குப் புதிய பொறுப்பாளரை அறிவிக்கும்போது, எங்களைப் போன்ற சீனியர்களிடம் தளபதி அவர்கள், ஒருவார்த்தை கேட்டிருக்கலாம். இருந்தாலும் தலைமைக் கழகம் அறிவித்துவிட்டது. அவருக்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பை அளிப்போம். முன்பிருந்த மாவட்டச் செயலாளருக்கு எந்தளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தோமோ, அதேபோல், இவர் வயதில் சிறியவர் என்றாலும் ஒத்துழைப்பைத் தருவோம்' என்றார்.
அவரைத் தொடர்ந்து மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் த.வேலு பேசுகையில்,`தலைமை அறிவித்துவிட்டதால், இந்த மாவட்ட பொறுப்பாளருக்கு ஒத்துழைப்பு தருவோம். அதில், எந்தவித மாற்றமும் இல்லை' என்றார். மூன்றாவதாகப் பேசிய சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் மதன்மோகன், `ஜெ.அன்பழகன் எங்கள் தொகுதியின் எம்.எல்.ஏ. அவர் எங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளார். அவரைப் போல ஒரு மாவட்டச் செயலாளரைப் பார்க்க முடியாது' எனப் புகழ்ந்து பேசியவர், `தலைமை அறிவித்துவிட்டது. புதிய மாவட்டச் செயலாளருக்கு ஆதரவு தருவோம்' என்றதோடு முடித்துக்கொண்டார்.

தொடர்ந்து மற்ற நிர்வாகிகள் பேசிக்கொண்டிருக்கும்போது, தன்னுடைய ஆதரவாளர்களுடன் கூட்டத்தில் இருந்து வெளியேறினார் மதன்மோகன். `இவர் ஏன் திடீரென வெளியேறுகிறார்?' எனக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இறுதியாகப் பேசிய சிற்றரசு, `இந்த மாவட்டத்தில் உள்ள பகுதிச் செயலாளர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் என்னிடம் பேசலாம். எந்த நிகழ்வுக்கு அழைத்தாலும், உடனே வருவேன். உதயநிதியிடம் சொல்லி உங்களுக்கான உதவிகளைச் செய்வேன். நானும் பாரம்பர்ய தி.மு.க-காரன்தான்' என்றார்.
புதிய மாவட்ட பொறுப்பாளர் பங்கேற்ற முதல் கூட்டத்திலேயே நிர்வாகிகள் சிலர், அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகப் பேசிய தகவல் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாகப் பேசிய அறிவாலய நிர்வாகிகள் சிலர், ``அன்பழகனைப் புகழ்ந்து பேசிய மதன்மோகன், அவருடைய இறப்பு நிகழ்வில்கூட பங்கேற்கவில்லை. புதிய மாவட்டச் செயலாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் அனைத்தும் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. விரைவில் மாவட்டத்தில் சில மாற்றங்கள் நடக்கலாம்" என்கின்றனர்.