Published:Updated:

`பதவிகளை விற்றுவிட்டார் பாத்திர வியாபாரி!' - தூத்துக்குடி அனிதாவுக்கு எதிராகக் கொதிக்கும் ஒ.செ

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

அடுத்தடுத்த நாள்களில் இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட குழப்பத்தால் எளிதாகக் கைப்பற்ற வேண்டிய கருங்குளம் யூனியன் அ.தி.மு.க வசம் போனதாக மா.செ அனிதா ராதாகிருஷ்ணன் மீது குற்றம்சாட்டுகின்றனர் தூத்துக்குடி தி.மு.கவினர்.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தூத்துக்குடி, உடன்குடி, ஓட்டப்பிடாரம், ஆழ்வார்திருநகரி ஆகிய ஒன்றியங்களில் தி.மு.க வெற்றி பெற்றது. கருங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், இரண்டு வேட்பாளர்களை அறிவித்ததால் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லையே எனப் புலம்பி வருகிறார்கள்.

அந்தப் பதிவுகள்
அந்தப் பதிவுகள்

இந்நிலையில், ``கருங்குளம் யூனியன் குழுத் தலைவருக்கு கழகத்தின் சார்பில் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தி குளறுபடி ஏற்படுத்தி கழகம் தோல்விக்கு காரனமாக இருந்த அனிதா', என்றும், `கழகத்திற்குப் பணியாற்றுங்கள். அது நமது கொள்கை. ஆனால், அனிதாவை நம்பிச் செல்லாதீர்கள். வீடு வாசல் குடும்பத்தை இழந்து கடைவீதிக்கு வருவீர்கள்',

ஃபேஸ்புக் பதிவு
ஃபேஸ்புக் பதிவு

`திருச்செந்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.கவிற்கு தாரைவார்த்த அனிதா' எனக் குறிப்பிட்டு கருங்குளம் வடக்கு ஒன்றியச் செயலாளர் மகாராஜன், தனது முகநூலில் கடந்த ஜனவரி 27, 28-ம் தேதிகளில் 5 பதிவுகள் வரைப் பதிவிட்டிருந்தார்.

இவரது இந்தப் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தி.மு.கவினர் சமூகவளைதளங்களில் ஷேர் செய்தனர். ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு மகாராஜனின் முகநூலில் இருந்து அந்தப் பதிவுகள் நீக்கப்பட்டிருந்தது. நம் கைக்கு சிக்கிய அந்த ஸ்கிரீன் ஷாட்டை வைத்துக் கொண்டு, மகாராஜனிடம் பேசினோம், ``இதுகுறித்த புகார் தலைமையில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் இது சம்மந்தமாக பேசுவது சரியாக இருக்காது” என்றவர், ``நான் வெளியில் இருக்கிறேன் பிறகு பேசுகிறேன்” எனச் சொல்லி போனைத் துண்டித்தார். இதுகுறித்து கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள தி.மு.கவினர் சிலரிடம் பேசினோம். ``கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 16 வார்டுகள் உள்ளது. தலைவர் பதவி, பெண் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க 7 வார்டுகளிலும், தி.மு.க 5 வார்டுகளிலும், அ.ம.மு.க 2 வார்டுகளிலும், புதிய தமிழகம், சுயேச்சை உறுப்பிர்கள் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர்.

மகாராஜன்
மகாராஜன்

தி.மு.க 5 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், அ.ம.மு.க, புதிய தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள் என்பதால், அந்த உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தி.மு.க ஆதரவு உறுப்பினர்களின் பலத்தை 9ஆக உயர்த்தி ஈஸியாக யூனியனைக் கைப்பற்றி விடலாம் என கணக்குப் போட்டோம்.

இதில், அ.தி.மு.க உறுப்பினர்களில் ஒருவரிடம் பேசி மறைமுக வாக்குப்பதிவில் எங்களுக்கு வாக்களிக்க சம்மதிக்க வைத்தோம். இந்தநிலையில், முதலில் தெற்கு மாவட்ட தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் இசக்கிப்பாண்டியனின் மனைவியும், 16வது வார்டு கவுன்சிலருமான கம்மாடிச்சியை 5-ம் தேதி வேட்பாளராக அறிவித்தார், அனிதா ராதாகிருஷ்ணன். ஒருமனதாக கம்மாடிச்சியின் வெற்றிக்காக அ.ம.மு.க, புதியதமிழகம், சுயேச்சை வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

8-ம் தேதி 12வது வார்டு கவுன்சிலர் சுந்தரியை தலைவர் வேட்பாளராக அறிவித்தார் அனிதா. இருப்பினும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினோம். 10-ம் தேதி மீண்டும் கம்மாடிச்சியையே வேட்பாளராக அறிவித்தார் அண்ணாச்சி. இருவருமே நான்தான் வேட்பாளர் எனக் கூறி வந்ததால் யார் தலைவர் வேட்பாளர் என்று எங்களுக்குள் குழப்பம் எற்பட்டது. `யார் தலைவர் வேட்பாளர் எனச் சொல்லுங்கள் பிறகு ஆதரவாக வாக்களிப்பதைப் பற்றி யோசிக்கிறோம்' என்று எங்களிடம் சொல்லிவிட்டனர் மற்ற கட்சியைச் சேர்ந்த 4 கவுன்சிலர்கள்.

இந்தக் குழப்பத்தை, வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட அ.தி.மு.கவினர், அந்த 4 பேரையும் தங்கள் பக்கம் இழுத்து அ.தி.மு.க தலைவர் வேட்பாளரான கோமதி ராஜேந்திரனை வெற்றி பெற்ற வைத்துவிட்டனர். எளிதாகக் கைப்பற்ற வேண்டிய யூனியன் தலைவர் பதவி, இரண்டு தலைவர் வேட்பாளர்களை அறிவித்த குழப்பத்தால் கைவிட்டுப் போனது. இவர், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனுக்கு விலை போனாரா என்ற சந்தேகமும் உள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இதுகுறித்து கருங்குளத்தைச் சேர்ந்த தி.மு.கவினர் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளோம்” என்றனர். இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் பேசினோம், ``தலைவர் பதவிக்கு யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு இருக்கும் எனத் தெரிந்து கொண்டுதானே நிறுத்த முடியும்? இதில் குழப்பம் எதுவுமில்லை. அந்த 4 பேரும் அ.தி.மு.கவினரிடம் பணத்திற்காக விலை போய்விட்டனர்” என்றனர். இது தூத்துக்குடி தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பின் செல்ல