Published:Updated:

`தி.மு.க சாம்ராஜ்ஜியம் பிரசாந்த் கிஷோர் கையிலா?!' - குமுறும் உடன்பிறப்புகள்

ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்
ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்

`ஸ்டாலின் ஐபேக் என்ற நிறுவனத்தின் மூலமாக ஆட்சியைப் பிடிக்க நினைப்பது வேதனையாக இருக்கிறது. வடமாநிலத்தில் இருந்த ஒருவருக்கு எப்படி தமிழக மக்களின் கலாசாரத்தைப் பற்றித் தெரியும்?'

`தி.மு.க கார்ப்பரேட் கட்சியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறது. மக்கள், தொண்டர்களை அரவணைத்துச்சென்று கட்சி நடத்தாமல், ஐபேக் என்ற பிரசாந்த் கிஷோரை நாடி கட்சியை வளர்க்கவேண்டிய சூழலில் தற்போது தி.மு.க இருப்பது வேதனையாக இருக்கிறது' என்று கட்சித்தொண்டர்களே முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதேபோல் அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளும் கடுமையான விமர்சனத்தை முன் வைக்கின்றன.

நிதிஷ்குமார் - பிரசாந்த் கிஷோர்
நிதிஷ்குமார் - பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வித்தகர் என்று அழைக்கப்படக்கூடியவர் பிரஷாந்த் கிஷோர். அவரது ஐபேக் நிறுவனம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் இணைந்து பணியாற்றவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில், இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

அவர் தனது முகநூல் பக்கத்தில், ``தமிழகம் இழந்த புகழை மீட்கும் நம் குறிக்கோள் வெற்றி பெறவும், அதற்கான திட்டமிடலில் உதவிடவும், திறமைமிக்க, ஒத்த கருத்துடைய பல தமிழக இளைஞர்கள், ஐபேக் அமைப்பின் கீழ், வருகின்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம்” என்று அறிவித்துள்ளார். தி.மு.கவின் இந்த முடிவுக்குத் தொண்டர்கள் மட்டுமல்லாமல் அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ``பிரஷாந்த் கிஷோரை தி.மு.க ஒப்பந்தம் செய்துள்ளது, அவர்களுக்கு அவர்கள் மீதே நம்பிக்கையில்லை என்பதைத்தான் காட்டுகிறது. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தால் வட இந்தியாவிலிருந்து ஒருவரை இங்கு கொண்டுவர வேண்டிய அவசியமே இல்லை.

ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்
ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்
கிஷோர் வேண்டுமானால் அங்கு பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால், தமிழகம் சாதிய கட்டமைப்பு உள்ள மாநிலம். இதில் எப்படி அவரது வியூகம் எடுபடப்போகிறது என்று தெரியவில்லை.
திமுக-வினர்

பிரஷாந்த் கிஷோரின் வருகை தி.மு.கவின் கொள்கைகள் நீர்த்துப்போய்விட்டதைத்தான் காட்டுகிறது. தி.மு.க கட்சி இல்லை. கார்ப்பரேட் நிறுவனம் போலத்தான் தி.மு.க தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் பிரஷாந்த் கிஷோரை நம்பியிருக்கிறது. ஆனால், அ.தி.மு.க மக்களை மட்டும் நம்பியிருக்கிறது. அந்த நம்பிக்கை எங்களுக்குக் கைகொடுக்கும்” என்று தி.மு.க-வைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தி.மு.க-வுக்கு பணியாற்ற பிரசாந்த் கிஷோர் அணிக்கு மாதம் எவ்வளவு? பின்னணி விவரங்கள்

இதுகுறித்து தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எல்லோரும் மக்களின் மனநிலையை அறிந்து அவர்களை நேரில் சந்தித்தும் பேச்சுக்கள் மூலமாகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்கள். இப்படித்தான் தி.மு.க என்ற சாம்ராஜ்ஜியம் வளர்ந்தது. ஆனால், இன்று ஐபேக் என்ற நிறுவனத்தின் மூலமாக ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் நினைப்பது வேதனையாக இருக்கிறது. வடமாநிலத்தில் இருக்கும் ஒருவருக்கு எப்படி தமிழக மக்களின் கலாசாரத்தைப் பற்றித் தெரியும்?

ஸ்டாலின்
ஸ்டாலின்

பிரசாந்த் கிஷோர் வேண்டுமானால் அங்கு பெரிய ஆளாக இருக்கலாம். சாதிய கட்டமைப்பு உள்ள மாநிலம் இது. இதில் எப்படி அவரது வியூகம் எடுபடப்போகிறது என்று தெரியவில்லை. கமல், ஜெகன்மோகன் ரெட்டி, பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் இவருடைய செயலைப் பார்த்து கட்சியை விட்டே வெளியேற்றிவிட்டார்கள். ஆனால், ஸ்டாலின் இவரோடு கைகோத்திருப்பது வேதனையாக இருக்கிறது. தி.மு.க தலைமை அறிவுறுத்தி வேலை செய்த நாங்கள் யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டு வேலை செய்யப்போகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு