Published:Updated:

`எங்களை மதிக்கலை; நாங்களும் வேலை பார்க்கலை’ - திமுக வேட்பாளருக்கு எதிராகக் கொதிக்கும் திமுக-வினர்

மாட்டுவண்டித் தொழிலாளிக்கு பணம் கொடுக்கும் திமுக வேட்பாளர்
மாட்டுவண்டித் தொழிலாளிக்கு பணம் கொடுக்கும் திமுக வேட்பாளர்

தி.மு.க நிர்வாகிகள் மண்ணச்சநல்லூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் மீது கடும் கோபத்தில் இருப்பதோடு அவருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கவில்லை என்று கூறப்படுகிறது.

மண்ணச்சநல்லூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிரவன் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் பணம், வேட்டி, சேலை என தொகுதி மக்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் தி.மு.க நிர்வாகிகள் வேட்பாளர் மீது கடும் கோபத்தில் இருப்பதோடு, அவருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கவில்லை என்று கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்று விசாரித்தோம்.

தி.மு.க வேட்பாளர் கதிரவன்
தி.மு.க வேட்பாளர் கதிரவன்

தமிழகத்தில் தேர்தல் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்த நாளிலிருந்து இன்று வரையிலும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. அதேபோல் தி.மு.க-விலும் நிர்வாகிகள் உள்ளடி வேலைகளைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

``கட்சியில் எனக்கு ஒத்துழைப்பு இல்லை. நானே களம் காண்கிறேன்" என்று தலைமைக்கு தகவல் கொடுத்துவிட்டு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறாராம் மண்ணச்சநல்லூர் வேட்பாளர் கதிரவன். அப்படி அவர் பிரசாரம் செய்யும் இடங்களில், மக்களுக்கு வேட்டி சேலை, பணம் கொடுப்பதாகப் புகைப்படங்கள் பரவிவருகின்றன. இந்த விவகாரம் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

உள்விவகாரம் அறிந்த தி.மு.க நிர்வாகிகளிடம் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொளவதற்காகப் பேசினோம். ``கதிரவன் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். இவர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத் தலைவர் சீனிவாசனின் மகன். இவர்களுக்குச் சொந்தமாகப் பல கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.

வேட்பாளர் கதிரவன்
வேட்பாளர் கதிரவன்

இந்தப் பகுதியில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள். திருச்சி சிறுகனூரில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்துக்குப் பல கோடிகளைத் தலைமைக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதோடு இவர் ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் கே.என்.நேரு மூலமாகக் காய்நகர்த்தி சீட் வாங்கியிருக்கிறார். இவரை அறிவித்த நாளிலிருந்தே பல்வேறு சிக்கல்கள் ஆரம்பித்துவிட்டன. இந்தத் தொகுதியைக் குறிவைத்து, பல வருடங்களாக வேலை செய்த எங்களுக்கு சீட் கொடுக்காமல் பண பலம் படைத்த ஒருவருக்கு சீட் கொடுத்தால் எப்படியிருக்கும்?

நீங்களே நினைத்துப்பாருங்கள். தளபதி, கே.என்.நேரு ஆதரவு கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா... தொகுதியில் நிர்வாகிகளைச் சந்திக்க வேண்டாமா? கையில் பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று நினைத்துக்கொண்டு தி.மு.க நிர்வாகிகளைப் புறந்தள்ளி, அவருடைய சமூகத்தினரை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு ஆதரவு கேட்டுவருகிறார். அதோடு மக்களுக்குப் பணம் மற்றும் வேட்டி, சேலைகளைக் கொடுத்துவிட்டால் ஓட்டு விழுந்துவிடும் என்கிற நம்பிக்கையில் பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார். அதனால் அவருக்குப் பாடம் புகட்ட நாங்கள் வேலை செய்வதில்லை என்கிற முடிவை எடுத்திருக்கிறோம்" என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ``தி.மு.க நிர்வாகிகள் பெரிதாக வேலை செய்வதில்லை என்பது உண்மைதான். அதற்கெல்லாம் நாங்கள் ஒன்றும் அஞ்சப்போவதில்லை. எங்களுக்குத் தனி ஆதரவு இந்தத் தொகுதியில் இருக்கிறது. வேட்டி, சேலை எதுவும் கொடுக்கவில்லை. அந்த வேட்டி அண்ணனுக்குத் தொண்டன் ஒருவர் போட வந்தார்.

மாட்டுவண்டி தொழிலாளிக்குப் பணம் கொடுக்கும் திமுக வேட்பாளர்.
மாட்டுவண்டி தொழிலாளிக்குப் பணம் கொடுக்கும் திமுக வேட்பாளர்.

அதை வாங்கி அப்படியே அவருக்கு அணிவித்தார் அவ்வளவுதான். அதேபோல் மாட்டுவண்டியில் அண்ணன் பிரசாரம் செய்தார். அதற்கான கூலியாக அந்தப் பணத்தைக் கொடுத்தார். அதுவும் பக்கத்திலிருந்த ஒருவரிடம் வாங்கித்தான் கொடுத்தார். நீங்கள் நினைப்பதுபோல் எதுவும் இல்லை" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு