Published:Updated:

தஞ்சாவூர்: `கட்சி நிர்வாகிகள் விலை போனதே தோல்விக்கு காரணம்!’ - திமுக வேட்பாளர் காட்டம்

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன் ( ம.அரவிந்த் )

``ஒரு நிர்வாகி ரூ 10 லட்சத்திற்கு விலை போய் விட்டார். இது போல் பலரும் பணத்தை பெற்று கொண்டு அமைதியாகி விட்டனர். இது தலைவர் ஸ்டாலினுக்கும் தெரியும். தொகுதியில் தி.மு.கவில் உள்ள ஒரே ஒரு நிர்வாகி தான் இதற்கு முக்கிய காரணம்” என்கிறார் ராமச்சந்திரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`ஒரத்தநாடு தொகுதியில் தி.மு.க நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க வேட்பாளர் வைத்திலிங்கம் தரப்பிடம் விலை போனதே அந்த தொகுதியில் திமுக தோல்விக்கு காரணம்’ என்கிறாராம் தி.மு.க வேட்பாளர் ராமச்சந்திரன். இது தொடர்பாக ராமச்சந்திரன், தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச இருப்பதாகவும் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க வேட்பாளர் ராமச்சந்திரன்
தி.மு.க வேட்பாளர் ராமச்சந்திரன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒரத்தநாடு தொகுதியை தவிர மீதமுள்ள ஏழு தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். அ.தி.மு.கவில் நால்வர் அணியில் ஒருவராக வலம் வந்த வைத்திலிங்கத்தை கடந்த முறை ஒரத்தநாடு தொகுதியில் தோற்கடித்த எம்.ராமச்சந்திரன் தான் இந்த முறையும் வேட்பாளராக போட்டியிட்டார். அ.தி.மு.க சார்பில் வைத்திலிங்கம் 5-வது முறையாக களமிறங்கியதால் கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் ஒரத்தநாடு தொகுதி தமிழகம் முழுவதும் கவனிக்கப்படும் தொகுதியாக மாறியது.

ஆரம்பம் முதலே எம்.ராமச்சந்திரனே வெற்றி பெறுவார் என பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து வைத்திலிங்கம் தொகுதியில் வைட்டமின் `ப’ -வை தாராளப்படுத்தியதாக தகவல் பரவலாக வெளியானது. பின்னர் மெல்ல தொகுதி வைத்திலிங்கத்திற்கு சாதகமாக மாறத்தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 28,835 வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். மொத்தம் உள்ள எட்டு தொகுதியில் ஒரு தொகுதியை தவறவிட்டது தி.மு.க விசுவாசிகளை வருத்தமடைய செய்தது. இந்நிலையில் தி.மு.க நிர்வாகிகள் பலரும் வைத்திலிங்கத்திடம் விலை போனதே தோல்விக்கு காரணம் என ராமச்சந்திரன் புலம்பியதாக தி.மு.க வட்டத்தில் பரவலாக எழுந்த பேச்சுக்கள் லோக்கல் அரசியல் வட்டத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

இது குறித்து எம்.ராமச்சந்திரனிடம் பேசினோம், ``வைத்திலிங்கம் வெற்றி பெற்ற தீர வேண்டும் என்பதற்காக எல்லையில்லாம செலவு செய்தார். இவ்வளவு பணம் தர்றாங்களே என வாக்காளர்களே திகைச்சு போயிட்டாங்க. குறிப்பாக பெண்களை குறி வச்சு பண மழையை பொழிஞ்சுட்டார். அத்துடன் தேர்தலில் வேலை செய்யாம அமைதியாக இருக்க தி.மு.க நிர்வாகிகளை பணம் கொடுத்து வைத்திலிங்கம் விலைக்கு வாங்கி விட்டார்.

ஒரு நிர்வாகி ரூ 10 லட்சத்திற்கு விலை போய் விட்டார். இது போல் பலரும் பணத்தை பெற்று கொண்டு அமைதியாகி விட்டனர். இது தலைவர் ஸ்டாலினுக்கும் தெரியும். தொகுதியில் தி.மு.கவில் உள்ள ஒரே ஒரு நிர்வாகி தான் இதற்கு முக்கிய காரணம். அவரை அடிச்சுட்டா மத்தவங்க எல்லாம் அடங்கிடுவாங்க. தலைவர் ஸ்டாலின் அதை செஞ்சுத்தான் ஆகணும். சில தினங்களில் ஸ்டாலினை சந்தித்து இது குறித்து கூற இருக்கிறேன். ஸ்டாலின் என் பேச்சை கேட்பார். கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் நீக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு