Published:Updated:

ஆண்டிபட்டியில் வேட்புமனுவை வாபஸ் வாங்கிய தி.மு.க வேட்பாளர்!- அழைத்துச் சென்ற அ.தி.மு.க வேட்பாளர்?

ஆண்டிபட்டி அருகே அ.தி.மு.க வேட்பாளர், தி.மு.க வேட்பாளரை அழைத்துச் சென்று வேட்புமனுவை வாபஸ் பெற வைத்த சம்பவம் தேனி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajendhran & LogiRajan
Rajendhran & LogiRajan

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை வாபஸ்பெற இன்று கடைசிநாள் என்பதால், பலரும் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இந்த நிலையில், ஆண்டிபட்டி 3வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு, அ.தி.மு.க சார்பில் லோகிராஜனும், தி.மு.க சார்பில் எஸ்.எஸ் புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரனும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், ராஜேந்திரனை லோகிராஜனே அழைத்துக்கொண்டு வந்து மனுவை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜேந்திரனுடன் பேசிய மகாராஜன்
ராஜேந்திரனுடன் பேசிய மகாராஜன்

அங்கு வந்த ஆண்டிபட்டி தி.மு.க எம்.எல்.ஏ மகாராஜன், மனுவை வாபஸ் பெற்ற ராஜேந்திரனிடம் ``மனுவை ஏன் வாபஸ் பெற்றாய்?” எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த லோகிராஜனுக்கும் மகாராஜனுக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகவே, விரைந்து வந்த ஆண்டிபட்டி காவல்துறையினர், இரு தரப்பையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர்.

அப்போது லோகிராஜன், ராஜேந்திரனை தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றார். உடனே மகாராஜன் தரப்பினர், ராஜேந்திரனை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் தலையிட்டு, ``யாருடன் உங்களுக்குச் செல்ல விருப்பம்?” என ராஜேந்திரனிடம் கேட்டார். ``நான் யாருடனும் செல்ல விரும்பவில்லை” என்றார் ராஜேந்திரன். இறுதியாக, ராஜேந்திரனை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

போலீஸார் சமாதானம் பேசும்போது அருகே இருந்த லோகிராஜன்
போலீஸார் சமாதானம் பேசும்போது அருகே இருந்த லோகிராஜன்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க பிரமுகர் ஒருவர், ``திட்டமிட்டே ராஜேந்திரனை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர். அவரை அழைத்துவந்து மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இதை கேட்க எம்.எல்.ஏ மகாராஜன் அங்கு சென்றார். அவருடனே வாக்குவாதம் செய்தனர். இதற்கு காவல்துறையும் உடந்தையாக இருந்திருக்கிறது” என்று கொதித்தார்.

“தி.மு.க. இப்போது சரிந்துவிட்டது!”

இச்சம்பவம் குறித்து அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜனிடம் போனில் பேசியபோது, ``எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் மனுவை வாபஸ் பெற்றனர். அதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். அப்போது தி.மு.க வேட்பாளர் ராஜேந்திரனும் அங்கு இருந்தார். அவர் அருகில் நான் இருந்தேன். மற்றபடி நான்தான் மனுவை வாபஸ் பெறச் சொன்னேன் எனக் கூறுவது பொய்” என்றார்.

ராஜேந்திரன் மனுவை வாபஸ் பெற்ற காட்சி... அருகே இருந்த லோகிராஜன்
ராஜேந்திரன் மனுவை வாபஸ் பெற்ற காட்சி... அருகே இருந்த லோகிராஜன்

ராஜேந்திரன், தனது மனுவை வாபஸ் பெறுவது போலவும், அருகே லோகிராஜன் இருப்பது போலவும் வெளியான படம், தேனி அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஜனும், லோகிராஜனும் உடன்பிறந்த சகோதரர்கள். கடந்த சட்டசபை இடைத் தேர்தலில் தி.மு.க சார்பில் மகாராஜனும், அ.தி.மு.க சார்பில் லோகிராஜனும் நிறுத்தப்பட்டனர். இதில் தம்பியை வீழ்த்தி மகாராஜன் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

`முடிந்தால் 15 நாள் ஸ்டேஷனில் உட்காரவை, பார்ப்போம்!’ - போலீஸை மிரட்டிய குடியாத்தம் தி.மு.க பிரமுகர்