Election bannerElection banner
Published:Updated:

தஞ்சாவூர்: திமுக வேட்பாளர்களின் சந்தேகம்; 5 டிஷ் ஆன்டனாக்கள் அகற்றம்! -வாக்கு எண்ணும் மையப் பரபரப்பு

தி.மு.க வேட்பாளர்கள்
தி.மு.க வேட்பாளர்கள் ( ம.அரவிந்த் )

பார்வையிட வந்த மூன்று தொகுதிகளின் வேட்பாளர்களும் இங்கு குளறுபடி நடப்பதாகத் தெரிவித்தனர். அது குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதுடன் வேட்பாளர்கள்வைத்த கோரிக்கையும் செய்து கொடுக்கப்பட்டது.

தஞ்சாவூரில் மூன்று தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் கல்லூரி ஒன்றில் வைகப்பட்டுள்ளன. அந்த மையத்துக்கு வந்த மூன்று தி.மு.க வேட்பாளர்கள் பாதுகாப்பில் குளறுபடி இருப்பதாகவும், நுழைவாயில் இருக்கும் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பல மையங்களில் சந்தேகத்துக்கு இடமான சம்பவங்கள் நடைபெறுவதாகவும், மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகின்றன. தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஓட்டு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மையத்தில் தி.மு.க வேட்பாளர்கள்
ஓட்டு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மையத்தில் தி.மு.க வேட்பாளர்கள்

இந்தநிலையில், மூன்று தொகுதிகளின் தி.மு.க எம்.எல்.ஏ-க்களும், வேட்பாளர்களுமான துரை.சந்திரசேகர், எம்.ராமச்சந்திரன், டி.கே.ஜி.நீலமேகம் மூன்று பேரும் பதிவான ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தைப் பார்வையிட்டனர். கல்லூரி நுழைவு வாயிலிலுள்ள சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை. இங்கு சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் வந்து செல்கின்றனர். பாதுகாப்பு விஷயத்தில் குளறுபடி இருக்கிறது எனப் பணியிலிருந்த தஞ்சாவூர் தாசில்தார் பாலசுப்பரமணியன், திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஒரத்தநாடு தாசில்தார் அருணாகிரி ஆகியோரிடம் தெரிவித்தனர்.

பின்னர் இந்தத் தகவலை செல்போன் மூலம் தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவிடம் தெரிவித்தனர். அப்போது நுழைவு வாயிலில் புதிய சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மாடியில் ஐந்து டி.வி டிஷ் ஆன்டனாக்கள் உள்ளன. அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர். இதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட கலெக்டர், `பாதுகாப்பு விஷயத்தில் 100 சதவிகிதம் விழிப்பாக இருந்து செயல்பட்டுவருகிறோம். இருந்தாலும் நீங்கள் சொன்ன கோரிக்கைகளை சில மணி நேரத்தில் செய்துதருகிறேன்’ என உறுதியளித்தார்.

பாதுகாப்புப் பணியில் போலீஸ்
பாதுகாப்புப் பணியில் போலீஸ்

அதன்படி முதலில் நுழைவுவாயிலில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. பின்னர் கல்லூரி மாடியிலிருந்த டிஷ் ஆன்டனாக்கள் அகற்றப்பட்டன. அவற்றை எடுக்கவந்த ஊழியர்களை போலீஸார் செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டனர். தி.மு.க வேட்பாளர்கள் கோரிக்கைவைத்த மூன்று மணி நேரத்துக்குள் இவை அனைத்தும் செய்யப்பட்டன. இந்தத் தகவல் அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. அப்போது கலெக்டர் செயல் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக தி.மு.க தரப்பில் தெரிவித்தனர்.

இது குறித்து துரை.சந்திரசேகரன் கூறும்போது, ``கல்லுாரி நுழைவு வாயிலிலுள்ள சிசிடிவி கேமரா செயல்படவில்லை. கல்லுாரி தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டில் முழுயைாக உள்ள நிலையில், முதல்வர், பேராசிரியர்கள் எனப் பணிபுரிபவர்கள் பலரும் அடிக்கடி வந்து செல்கின்றனர். இது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்பதையும், மேலும் வளாகத்திலுள்ள ஐந்து டிஷ் ஆன்டனா இணைப்பை அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தோம். உடனடியாகச் செய்துதருவதாக உறுதியாகத் தெரிவித்தார்’ என்றார்.

அகற்றப்பட்ட டிஷ் ஆண்டனாக்கள்
அகற்றப்பட்ட டிஷ் ஆண்டனாக்கள்

பணியிலிருந்த போலீஸ் ஒருவர், `தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளில் மொத்தம் 5,91,346 ஓட்டுகள் பதிவாகின. அந்த ஓட்டு இயந்திரங்கள், மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் அவை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கப்பட்டுவருகின்றன. இங்கு பார்வையிட வந்த மூன்று தொகுதிகளின் வேட்பாளர்களும் இங்கு குளறுபடி நடப்பதாகத் தெரிவித்தனர். அது குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதுடன், வேட்பாளர்கள் வைத்த கோரிக்கையும் செய்து கொடுக்கப்பட்டது’ என்றனர். சிலர் தி.மு.க வேட்பாளர்கள் டிஷ் ஆன்டனாவையெல்லாம் அகற்றச் சொன்னது வேடிக்கையாக இருக்கிறது என கமென்ட் அடித்துக்கொண்டதையும் பார்க்க முடிந்தது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு