அலசல்
அரசியல்
Published:Updated:

“தி.மு.க இந்து விரோதக் கட்சி இல்லை!”

சேகர்பாபு
பிரீமியம் ஸ்டோரி
News
சேகர்பாபு

சேகர்பாபு திட்டவட்டம்

`தி.மு.க மாவட்டச் செயலாளர்களில் சுறுசுறுப்பானவர்’ என்று பெயரெடுத்தவர், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பி.கே.சேகர்பாபு.

அக்மார்க் வடசென்னைக்காரர். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தைப் பராமரிப்பதில் முக்கியமானவர். கொரோனா தடுப்புப் பணிகளில் அரசின் செயல்பாடு, தி.மு.க இந்து விரோதக் கட்சி என்ற குற்றச்சாட்டு... எனப் பல கேள்விகளுக்கு மனம் திறக்கிறார் சேகர்பாபு.

“சென்னையில் நடைபெறும் அரசின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து..?”

“முதல்வர் கைவிரித்துவிட்டார். இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது... இந்த அரசிடம் ஒருங்கிணைப்பு இல்லை. மாநகராட்சி ஆணையருக்கு மேல் இரண்டு சீனியர் ஐ.ஏ.எஸ்-கள், மண்டலத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என நியமிப்பதால் எந்தப் பலனும் இல்லை. சென்னை மாநகராட்சியில் 42 இளநிலைப் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. களத்தில் பணிபுரியும் உதவிப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். பெருநகர சென்னை எல்லைக்குள் 22 எம்.எல்.ஏ தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் 16 பேர் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். மூன்று பேர் தி.மு.க எம்.பி-க்கள். ஆனால், கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டங்கள் எதற்கும் எங்களை அழைப்பதில்லை. தொகுதிப் பிரதிநிதிகளுக்குத்தானே பிரச்னையை எப்படிக் களைய வேண்டும் என்பது புரியும்.

சென்னையில் இறப்பு எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. நகருக்குள் இருக்கும் ஐந்து பெரிய அரசு மருத்துவமனைகள் மற்றும் புறநகர் மருத்துவமனைகளுக்கு தலா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை மேற்பார்வையாளராக நியமித்திருக்க வேண்டும். கொரோனா நோயாளி ஒருவர் இறந்துவிட்டால், அவர் உடலை அப்புறப்படுத்துவதற்கு எட்டு மணி நேரமாகிறது. அதுவரை கொரோனா வார்டிலேயே மற்ற நோயாளிகளுடன் அந்த உடல் வைக்கப்படுகிறது. இது மனரீதியாக மற்ற நோயாளிகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இறந்தவருக்கு இறப்புச் சான்றிதழ் அளிப்பதிலும் சிக்கல் எழுகிறது. இதைச் சரிசெய்ய அரசு ஒரு கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும். இது எதையுமே செய்யாமல் தான்தோன்றித்தனமாக இந்த அரசு செயல்படுவது வேதனையளிக்கிறது.’’

“ராயபுரத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த தீர்வு என்ன?”

“தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா தீவிரமாகப் பரவியபோது வட சென்னையில் அவ்வளவாகத் தொற்று இல்லை. சுகாதார வசதிகள் இல்லாததும், குப்பைகள் சரிவர அள்ளப்படாததுமே இங்கு தொற்று வேகமாகப் பரவுவதற்குக் காரணம். ராயபுரம் போன்ற நெரிசலான பகுதிகளில் பொதுக் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினக்கூலி மக்களே இங்கு அதிகம். அவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஊரடங்கையும் மீறி வெளியே வருகின்றனர். எங்கள் தலைவர் ஸ்டாலின் கூறியபடி, ஒரு குடும்பத்துக்கு 5,000 ரூபாய் நிவாரணம் தந்தால் மட்டுமே அவர்களால் நிலைமையைச் சமாளிக்க முடியும்.”

“சென்னையில் சமூகத் தொற்று ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா?”

‘‘சென்னையின் மொத்த மக்கள்தொகையான ஒன்றரைக் கோடியில் வெறும் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கே நோயாளிகளின் எண்ணிக்கை 40,000-ஐ தாண்டிவிட்டது. இறப்பு எண்ணிக்கை எகிறிக்கொண்டே இருக்கிறது. சென்னை மக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப் பட்டால் சமூகத் தொற்று ஏற்பட்டிருப்பது ஊர்ஜிதமாகிவிடும்.’’

“நிவாரணப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறீர்கள். எங்கிருந்து கிடைக்கிறது நிதி?”

“இது எங்கள் கட்சி உறுப்பினர்களின் பணம். எங்களால் உதவி பெற்ற நண்பர்கள், தன்னார்வலர்கள் போன்றவர்களிட மிருந்து பொருள்களை நிவாரண உதவிக்குக் கேட்டுப் பெறுகிறோம். யாரையும் வற்புறுத்துவதில்லை.”

“ஆனால், தி.மு.க-வினர் கொரோனா `நிவாரணம்’ என்கிற பெயரில் வசூல் வேட்டையில் இறங்கிவிட்டதாக கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டுகிறாரே?”

“இதை அவரால் நிரூபிக்க முடியுமா? ‘தி.மு.க-வினர் கட்டாயப்படுத்தி பணம் வாங்கினார்கள்’ என்று தொழிலதிபர்கள் யாரேனும் குற்றம்சாட்டினார்களா? கே.பி.ராமலிங்கம் எங்கேயோ ஒரு கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். அது இன்னும் திறக்கவில்லை. எங்கள்மீது வசவு பாடினால் கதவு திறக்கும் என்று கருதுகிறார்.”

சேகர்பாபு
சேகர்பாபு

“தி.மு.க-வை இந்து விரோதக் கட்சி என பா.ஜ.க அடையாளப்படுத்துகிறது. ஓர் ஆன்மிகவாதியாக இதற்கு உங்கள் பதில் என்ன?”

“அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துவந்து தி.மு.க-வில் நான் இணைந்தபோது, கோபாலபுரம் இல்லத்துக்கு நானும் தளபதி ஸ்டாலினும் சென்றிருந்தோம். ‘பாபு கட்சியில் சேர்கிறார். கோயில்களுக்குப் போறது அவரின் வழக்கம். அதுக்கு அனுமதி கேட்கிறார்’ என்று கலைஞரிடம் தளபதி கூறினார். ‘தாராளமா அவரைப் போகச் சொல்லுய்யா. ஆனா, என்னைக் கூப்பிட வேண்டாம்னு சொல்லு’ என்றார் கலைஞர். தி.மு.க என்றுமே ஆன்மிகத்துக்குத் தடை போட்டதில்லை. தி.மு.க ஆட்சியில்தான் அதிக கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. ‘தி.மு.க ஆன்மிகத்துக்கு எதிரானது’ என்கிற ஆயுதம் வரும் சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தப்படும்.”