Published:Updated:

`துரைமுருகன்கூட இரக்கம் காட்டுவார், நான் அப்படியில்லை!' - ராணிப்பேட்டையில் சீறிய ஸ்டாலின்

ஸ்டாலின்
ஸ்டாலின்

`ஜெயலலிதா சாவில் உள்ள மர்மம் வெளிவந்தால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சிறையில்தான் இருக்க வேண்டும்' என்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நடைபெற்ற சீர்திருத்த திருமண விழாவில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், ``சுயமரியாதையுடன் சீர்திருத்த திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதற்காக பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் சிறப்புக் கவனம் செலுத்தினர். 1967-ல் தி.மு.க ஆட்சி அமைந்தது. முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்று சட்டமன்றத்தில் நுழைந்த பிறகு ‘இரு மொழிக் கொள்கை, தமிழ்நாடு பெயர் சூட்டுதல், சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லும்’ ஆகிய மூன்று தீர்மானங்களை நிறைவேற்றினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்கள் நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கவலைப்படாமல் இருக்கிறார்கள். குடியுரிமையைப் பெற்று வாழும் நிலையை ஏற்படுத்திவருகிறார்கள். தமிழகத்தில், அ.தி.மு.க, பா.ஜ.க-வைத் தவிர அனைத்துக் கட்சிகளுமே குடியுரிமை சட்டத்தை எதிர்க்கின்றன. அதேபோல், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் எனப் பல்வேறு மாநிலங்களிலும் குடியுரிமைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றுவருகிறது. பாராளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றியபோது, இரண்டு அவையிலும் தி.மு.க எதிர்ப்புக் குரல் கொடுத்து ஓட்டுப்போட்டது. பா.ஜ.க-வுக்கு அடிபணிந்து அடிமையாக உள்ள அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் தான் ஆதரித்து ஓட்டுப்போட்டது. இவர்களும் எதிர்த்திருந்தால் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றிருக்க முடியாது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்த நேரத்தில், தலைநகர் டெல்லியில் என்னென்ன கலவரம் நடக்கிறது என்பதைப் பார்க்கிறோம். இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் ஆபத்து இல்லை. இந்து சமூக மக்களுக்கும்தான் ஆபத்து. பிறந்த தேதி, அதற்கான பதிவு, பெற்றோர் பெயர், அவர்கள் எங்கே பிறந்தார்கள், எந்த தேதியில் பிறந்தார்கள், தாத்தா, பாட்டி யார் என்பதையும் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லவில்லை என்றால் `டவுட்’ லிஸ்ட்டில் நம்மையும் சேர்த்துவிடுவார்கள். நீதிபதி, சமுதாய தலைவர்கள், சமுதாயத்துக்கு அப்பாற்பட்ட தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனக் கூட்டாகச் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிக் கோரி வலியுறுத்தினர்.

இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது. நாங்கள்தான் உட்காரப் போகிறோம். அண்ணன் துரைமுருகன் கூட இரக்கக் குணம் காட்டுவார். நான், உங்களை விடமாட்டேன்.
ஸ்டாலின்

அதற்கு எடப்பாடி, `நான் எங்கே பிறந்தேன்னு எனக்கே தெரியல...’ என்று கூறியிருக்கிறார். ஆக முதலமைச்சருக்கே, இந்த நிலைதான். ஊழலில் கொடிகட்டிப் பறக்கக் கூடிய ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இயக்குநர், ஆணையர் இருக்கிறார்கள். இவர்களின் வேலை, ஊழல் நடந்தால் முறையாக விசாரிக்க வேண்டும். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியிடமிருந்து கடைசியில் இருக்கிற அமைச்சரின் ஊழல் வரை விசாரிக்கவேண்டும். சென்னை மாநகராட்சியில் ஊழல் செய்திருப்பதாக அமைச்சர் வேலுமணி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுபற்றி விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரண்டு வருடம் விசாரித்துவிட்டு `வேலுமணி மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை’ என்று நீதிமன்றத்தில் ரிப்போர்ட் தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், `நீங்கள் முறையாக விசாரிக்கவில்லை. மரியாதையாகக் கோப்புகளைக் கொண்டுவந்து கொடுங்கள்’ என்று உத்தரவு போட்டுள்ளனர்.

இதேமாதிரிதான், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அது குறித்தும் நீதிமன்றம் விசாரிக்கிறது. ஆனால், ‘ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டிலும் முகாந்திரம் இல்லை’ என்று லஞ்ச ஒழிப்புத் துறை சொல்கிறது. மறைந்த அம்மையார் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்கள். அதில் தவறு இல்லை. ஆனால், அந்த அம்மையாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பி.எஸ்தான் சொன்னார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

முதலமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து 40 நிமிடம் ஆவியுடன் பேசினார். பின்னர், நீதி விசாரணை வேண்டும் என்றார். உடனே, சமாதானம் செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதாக அக்ரிமென்ட் போட்டுக்கொண்டார். அதையடுத்து, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து மூன்று மாதத்தில் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்றனர்.

மூன்று ஆண்டுகளாகிறது, இதுவரை அறிக்கையைக் கொடுக்கவில்லை. மீண்டும் விசாரணை நீட்டிப்பு என்கிறார்கள். ஜெயலலிதா சாவில் உள்ள மர்மம் வெளிவந்துவிட்டால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சிறையில்தான் இருக்க வேண்டும். இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது. நாங்கள்தான் உட்காரப் போகிறோம். அண்ணன் துரைமுருகன் கூட இரக்கக் குணம் காட்டுவார். நான், உங்களை விடமாட்டேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு