Published:Updated:

`வீட்டுக்கு வந்து சொல்லவே பயமா இருக்கு!' - ஸ்டாலினைக் கலாய்த்த உதயநிதி

கடந்த நான்கைந்து மாதங்களாக ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டங்களில் எதாவது ஒரு பிரச்னை எழுப்பப்படுவதும், அதற்கு அவர் கோபப்படுவதும் தொடர்கதையாக இருந்தது.

சென்னை மேற்கு மாவட்டம்: 25.08.2020: மாலை 4 மணி :

தி.மு.க மாநில, மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 63 பேருடன் ஜூம் ஆப் வாயிலாக உரையாடத் தொடங்கினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். `நான் ரெகுலராக எக்சர்சைஸ் பண்றேன். வெளியில் பத்திரமாகப் போயிட்டு வர்றேன். மாஸ்க், கிளவுஸ் போடறேன். தினமும் வாக்கிங் போறேன். யோகா பண்றேன். நான் பர்ஃபெக்ட்டா இருக்கேன். நீங்களும் என்னை ஃபாலோ பண்ணுங்க’ என இயல்பாகப் பேசப் பேச, ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

கூட்டத்தில் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்
கூட்டத்தில் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்

கொரோனா சீஸன் தொடங்கிய நாள்முதலாக, ஜூம் கூட்டங்களில் எதாவது ஓர் உடன்பிறப்பு, ஸ்டாலினின் கோபத்தைக் கிளறிவிடுவதும், `உன் ஏரியாவுல என்ன பிரச்னைனு சொல்லவா?' என பதிலுக்கு தி.மு.க தலைவர் ஆவேசப்பட்டதும் தொடர்கதையாக இருந்துவந்தது. அதற்கு மாறாக, 4 மணிக்குத் தொடங்கிய கூட்டம் இரவு 8 மணிக்கு நிறைவடையும் வரையில் மிகுந்த பாசத்தைக் கொட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

`ஏன் இந்த திடீர் மாற்றம்?' எனக் கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``அதுதான் எங்களுக்கும் புரியவில்லை. ஆனால், இப்படியொரு கூட்டத்தை நாங்களும் எதிர்பார்க்கவில்லை. மேற்கு மாவட்டத்தில் கோ.அய்யாவு என்பவர், சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக இருக்கிறார். அவர் நீண்டகாலமாக கட்சியில் இருப்பவர். அவரிடம் பேசும்போதே, அவருடைய மகனை அழைத்து, `அப்பாவை நல்லபடியாகப் பார்த்துக்கொள்' என்றார் ஸ்டாலின். அப்போது கண்கலங்கிய அய்யாவு, `உங்களை முதல்வராகப் பார்ப்பதற்காகத்தான் இன்னும் இருக்கிறேன்’ என்றார் கலங்கியபடி.

நிர்வாகிகள் கூட்டம்
நிர்வாகிகள் கூட்டம்

அடுத்து, சித்ரமுகி சத்தியவாணி முத்துவிடம் நலம் விசாரித்தபோது அவர் அழுதுவிட்டார். `இது நான்காவது தலைமுறை' எனக் கூறி தனது பேத்திகளை அறிமுகப்படுத்தினார். `பக்கத்துல இருக்கிறது யாரு... எல்லாரும் எப்படி இருக்காங்க?’ என உரிமையோடு பேசிய ஸ்டாலின்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`நான் 89-ல் சட்டசபைக்குப் போனதும், தலைவரிடம் குறிப்பிட்ட ஒரு விஷயம் குறித்து என் கருத்துகளைத் தெரிவித்தேன். அப்போது அவர் பதில் சொல்லவில்லை. இரண்டாவது முறை எழுந்து நினைவுபடுத்தினேன். அதற்கு அவர், `இதை நீ வீட்டிலேயே சொல்லிருக்கலாம்’னு சொன்னார். அப்போது கையைத் தூக்கிய உதயநிதி, `இப்பவெல்லாம் வீட்டுக்கு வந்து சொல்லவே எனக்கு பயமா இருக்கிறதே?’ எனக் கமென்ட் அடித்தார்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

அடுத்து, மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் ஆயிரம் விளக்கு மோகன், கல்லூரிகளில் நிர்வாகிகளைப் போடுவது குறித்து விவரிக்க, `மாணவர்களைத்தானே நிர்வாகிகளாகப் போடுகிறீர்கள்?’ எனக் கேட்க, `ஆமாம். அனைத்து விவரங்களையும் உங்களிடம் காட்டுவதற்காகத்தான் தொகுத்து வைத்திருக்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது காட்டுகிறேன்' எனக் கூற, தலையசைத்தார் ஸ்டாலின். கடந்த நான்கைந்து மாதங்களாக ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டங்களில் எதாவது ஒரு பிரச்னை எழுப்பப்படுவதும், அதற்கு அவர் கோபப்படுவதும் தொடர்ந்தது. அப்படி எதுவும் இல்லாமல், அந்த நான்கு மணி நேரம், அவர் நேரடியாக வீட்டுக்கே வந்து எங்களிடம் பேசியதுபோல் இருந்தது’’ என நெகிழ்ந்தவர்,

`` கொரோனாவுக்கு முந்தைய காலங்களில் தலைவரைச் சந்திப்பதற்கு ஏராளமான தடைகள் இருந்தன. சிலர் அவரைச் சுற்றி அமர்ந்துகொள்வதும் ஒரு காரணமாக இருந்தது. இப்போது கிளைக்கழக நிர்வாகிகள் வரையில் அவரே நேரடியாக உரையாடுகிறார். இதற்குக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சில அதிருப்திகளையும் காரணமாகப் பார்க்கிறோம். மேற்கு மாவட்டச் செயலாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டதில், கட்சியின் சீனியர்கள் பலருக்கு உடன்பாடில்லை. இந்தக் கோபத்தை அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் நேரடியாகவே காட்டினார்கள். `கட்சிக்குப் புதியவரை யாரிடமும் கேட்காமல், மாவட்டப் பொறுப்பாளராக நியமித்துவிட்டார்கள்' என்ற கோபம் இன்னும் தணியவில்லை.

`எதனால் விட்டேன்னு சொல்லவா?!' - ஸ்டாலினைக் கொதிக்கவைத்த கே.கே.நகர் தனசேகரன்

தவிர, தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வளைப்பதற்கான முயற்சியில் தமிழக பா.ஜ.க இறங்கியுள்ளது. குறிப்பாக, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை உட்பட பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான தி.மு.க-வினர் பா.ஜ.க-வில் இணைந்துவருகின்றனர். தொடர்ந்து தி.மு.க தொண்டர்களை இழுக்கும் பணியில் பா.ஜ.க ஈடுபட்டுவருகிறது. இதற்குக் காரணம், அந்தந்தப் பகுதிக் கழக நிர்வாகிகளின் செயல்பாடுகள்தான். இதைக் களையும் வகையில் தலைவரே நேரடியாகக் குறைகளைக் கேட்கத் தொடங்கிவிட்டதை நல்ல விஷயமாகப் பார்க்கிறோம’’ என்றார் விரிவாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு