Published:Updated:

‘வாழ்க... துரோகிகள்!’ - சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா பின்னணி

சுப்புலட்சுமி ஜெகதீசன்
பிரீமியம் ஸ்டோரி
சுப்புலட்சுமி ஜெகதீசன்

2021 சட்டமன்றத் தேர்தலில் சுப்புலட்சுமி அக்கா வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றபோதே, தலைமை அவரிடம் என்னவென்று விசாரித்திருக்க வேண்டும்.

‘வாழ்க... துரோகிகள்!’ - சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா பின்னணி

2021 சட்டமன்றத் தேர்தலில் சுப்புலட்சுமி அக்கா வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றபோதே, தலைமை அவரிடம் என்னவென்று விசாரித்திருக்க வேண்டும்.

Published:Updated:
சுப்புலட்சுமி ஜெகதீசன்
பிரீமியம் ஸ்டோரி
சுப்புலட்சுமி ஜெகதீசன்

‘மனநிறைவோடு கட்சியிலிருந்து விலகுகிறேன்’ என தி.மு.க-வின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். வெளியே அப்படிச் சொன்னாலும், தன் பதவி விலகலின் பின்னணியிலுள்ள உட்கட்சித் துரோகங்கள் குறித்து, அறிவாலயத்தில் குமுறித் தள்ளிவிட்டுத்தான் போயிருக்கிறார் என்கின்றனர் உடன்பிறப்புகள்!

இது குறித்து ஈரோடு மாவட்ட உடன்பிறப்புகள் சிலரிடம் பேசியபோது, “ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் முத்துசாமிக்கும் சுப்புலட்சுமிக்கும் ஏழாம் பொருத்தம்தான். 2021 தேர்தலில், மொடக்குறிச்சி தொகுதியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிட, அந்தத் தொகுதியிலுள்ள தன்னுடைய ஆதரவாளர்களை வேலை செய்ய விடாமல் முத்துசாமி முடக்கிப்போட்டார். ஒன்றியச் செயலாளர்கள் முதல் பூத் ஏஜென்ட் வரை எவருமே சுப்புலட்சுமிக்கு வேலை செய்ய வில்லை. விளைவு சுப்புலட்சுமி தோல்வி யடைந்து, மொடக்குறிச்சியில் தாமரை மலர்ந்தது. கட்சியின் து.பொ.செ-ரையே பா.ஜ.க வீழ்த்தியதால் அதிர்ச்சியடைந்த தலைமை, மாவட்ட நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டது. செய்வதெல்லாம் செய்துவிட்டு, ‘சுப்புலட்சுமி பிரசாரத் துக்கே வராததும், கட்சி கொடுத்த பணத்தையே செலவு செய்யாததும்தான் தோல்விக்குக் காரணம்’ என அறிவாலயத்தில் போட்டுக்கொடுத்தது முத்துசாமி தரப்பு.

‘வாழ்க... துரோகிகள்!’ - சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா பின்னணி

தாமரை மலர்ந்த பின்னணி!

இதில் கொதித்துப்போன சுப்புலட்சுமி, ‘முத்துசாமியின் ஆதரவுடன், மொடக் குறிச்சி மேற்கு ஒன்றியச் செயலாளர் குணசேகரனும், கொடுமுடி வடக்கு ஒன்றியச் செயலாளர் சின்னசாமியும் சேர்ந்து திட்டமிட்டே என்னைத் தோற்கடித்துள்ளனர். என்னைப் பழிதீர்க்க, பெரியார் மண்ணிலேயே உதயசூரியனை வீழ்த்தி, தாமரையை மலரச் செய்துவிட்டார் முத்துசாமி’ எனக் கலங்கியபடி தலைமையிடம் புகார் கொடுத்திருந்தார். இப்போது உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுவரும் சூழலில், ‘என்னுடைய தோல்விக்குக் காரணமான முத்துசாமியின் ஆதரவாளர்களான அந்த இரண்டு ஒன்றியச் செயலாளர்களுக்கும் மறுபடியும் பதவியைக் கொடுக்கக் கூடாது’ என சுப்புலட்சுமி ஜெகதீசன், தேர்தல் தலைமைக் குழுவினரிடம் கொதித்திருக்கிறார். உடனே அமைச்சர் முத்துசாமியை அழைத்து விசாரிக்க, ‘அவங்க ரெண்டு பேரையும் நான் விட்டுக்கொடுக்க முடியாது. அவங்களுக்கே பதவியைக் கொடுங்க. இல்லைன்னா நான் என்னோட பதவியை ராஜினாமா செஞ்சுடுறேன்’ என எகிறியிருக்கிறார். இதையடுத்து இந்த விஷயத்தைத் தலைவரே முடிவு செய்யட்டும் என பிரச்னைக்குரிய இரண்டு ஒன்றியத்தைத் தவிர, ஈரோட்டிலுள்ள அனைத்து ஒன்றியங் களுக்கும் பொறுப்பாளர்களை தலைமையிலிருந்து அறிவித்தனர்.

இப்படியான சூழலில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 25, 26-ம் தேதிகளில் ஈரோட்டு நிகழ்ச்சிக்காக ஸ்டாலின் வந்திருந்தார். அப்போது, ‘நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்த இரண்டு ஒன்றியச் செயலாளர்கள்தான் சிறப்பாகச் செய்தார்கள்’ என ஸ்டாலினிடம் முத்துசாமி எக்ஸ்ட்ரா பிட் போட்டு சிலாகித்துக் கூறியிருக்கிறார். மேலும், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சென்னைக்குச் சென்ற அமைச்சர் முத்துசாமி, ஸ்டாலினிடம் பேசி அடுத்த இரண்டே நாள்களில் நிறுத்திவைத்திருந்த இரண்டு ஒன்றியச் செயலாளர்களுக்கும் பதவி வாங்கி வந்திருக்கிறார். ‘கட்சியில் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருந்தும், நம் பேச்சை மதிக்கவில்லையே... தலைமையிடம் பேசி முத்துசாமி ஜெயித்துவிட்டாரே... தலைமையே துரோகிகளுக்கு ஆதரவாக இருக்கும்போது, நாம் யாரை நம்பி அரசியல் செய்வது. துரோகிகளே நன்றாக வாழட்டும்’ என்ற கோபத்தில்தான் சுப்புலட்சுமி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்” என்றனர்.

முத்துசாமி
முத்துசாமி

துரோகிகள் வாழட்டும்!

சுப்புலட்சுமிக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். “2021 சட்டமன்றத் தேர்தலில் சுப்புலட்சுமி அக்கா வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றபோதே, தலைமை அவரிடம் என்னவென்று விசாரித்திருக்க வேண்டும். தோல்வி குறித்துப் புகார் கொடுத்தும் தலைமை அதைப் பொருட்படுத்தாதது அக்காவுக்கு பெரும் வருத்தம். 1996 மொடக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில், 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். புத்தகம் போல் அச்சிடப்பட்டிருந்த வாக்குச்சீட்டில் 25-வது பக்கத்தில்தான் உதயசூரியன் சின்னமே இருந்தது. ஆனாலும், அக்காவின் பெயரைத் தேடி, வெற்றிபெற வைத்தனர் தொகுதி மக்கள். முத்துசாமியின் அதிகாரவெறியால் கட்சி சீர்குலைந்துவருவதற்கு, அக்காவின் ராஜினாமா ஒரு சின்ன உதாரணம். இனியாவது கட்சித் தலைமை முத்துசாமியையும், மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து விசாரணை செய்ய வேண்டும். மேலும், தன்னுடைய தோல்விக்குக் காரணமென அக்கா புகார் சொன்ன, இரண்டு ஒன்றியச் செயலாளர்களுக்காகவும் அமைச்சர் முத்துசாமி ஏன் இவ்வளவு போராடுகிறார் என்பதையும் தலைமை விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இரண்டு ஒன்றியச் செயலாளர்களுக்கு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில், சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களைத் தூக்கிக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் முத்துசாமி. இப்படி ஒருசிலருடைய ஆதாயத்துக்காக முத்துசாமி கட்சியை ஒழித்துவருகிறார்” எனக் கொதித்தனர்.

பா.ஜ.க-வில் இணைகிறாரா?

“வந்தேறியான முத்துசாமியால், பாரம்பர்ய தி.மு.க-காரரான சுப்புலட்சுமி கட்சியைவிட்டுப் போய்விட்டார்” என்று இவரின் ஆதரவாளர்கள் சொல்ல... “அவரும் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்தானே” என்று அமைச்சர் தரப்பு பதிலடி கொடுத்திருக்கிறது. இதற்கிடையே தி.மு.க-விலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் பா.ஜ.க-வில் இணைய வாய்ப்பிருப்பதாகச் சிலர் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

இது குறித்து விசாரிக்கையில், ‘‘சுப்புலட்சுமி தீவிரமான பெரியாரிஸ்ட். பா.ஜ.க-வில் இணைவதாகச் சொல்வதெல்லாம் பெரிய காமெடி. சுப்புலட்சுமி ஜெகதீசனின் மகன், தற்கொலை தடுப்பு அமைப்பு ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அதுபோக குடும்பப் பிரச்னைகளுக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பு ஒன்றையும், குடிபோதை மறுவாழ்வு மையம் ஒன்றையும் தொடங்கவிருக்கிறார்கள். அதில் இணைந்து சுப்புலட்சுமி செயல்பட விருக்கிறார்’’ என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

‘வாழ்க... வசவாளர்கள்!’ என்பது அண்ணாவின் புகழ்பெற்ற வாசகம். அதையே கொஞ்சம் மாற்றி ‘வாழ்க... துரோகிகள்!’ என்று சொல்லி வெளியேறியிருக்கிறார் சுப்புலட்சுமி ஜெகதீசன்!