Published:Updated:

ஐபேக் வந்தாரு... அட்ராசிட்டி பண்றாரு! - கதறும் உடன்பிறப்புகள்

பிரசாந்த் கிஷோர்
பிரீமியம் ஸ்டோரி
பிரசாந்த் கிஷோர்

சில நாள்களுக்கு முன்பு தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார், திடீரென்று நடுரோட்டில் குத்தாட்டம் போட்டார். மொத்த தொண்டர்களும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனார்கள்

ஐபேக் வந்தாரு... அட்ராசிட்டி பண்றாரு! - கதறும் உடன்பிறப்புகள்

சில நாள்களுக்கு முன்பு தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார், திடீரென்று நடுரோட்டில் குத்தாட்டம் போட்டார். மொத்த தொண்டர்களும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனார்கள்

Published:Updated:
பிரசாந்த் கிஷோர்
பிரீமியம் ஸ்டோரி
பிரசாந்த் கிஷோர்

எம்.ஜி.ஆர் நடித்த ‘ராஜகுமாரி’ தொடங்கி கடைசியாக பிரசாந்த் நடித்த ‘பொன்னர் சங்கர்’ வரை மறைந்த முதல்வர் கருணாநிதி எழுதிய கதை, வசனங்களைக் கேட்டு கைதட்டி ரசித்திருப்பார்கள் உடன்பிறப்புகள். ஆனால், சமீபகாலமாக தி.மு.க மேடைகளிலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் ‘ஐபேக்’ தரப்பினர் எழுதித் தரும் ஓட்டை உடைசலான கதை, வசனங்களைக் கேட்கச் சகிக்காமல் எரிச்சலடையும் தி.மு.க நிர்வாகிகள் ‘ஓடுகிறேன்... ஓடுகிறேன்... கட்சியைவிட்டே ஓடுகிறேன்’ என்று புலம்பாத குறையாகக் கதறித் துடிக்கிறார்கள். சமீபத்திய உதாரணங்களையே எடுத்துக்கொள்வோம்...

* சில நாள்களுக்கு முன்பு தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார், திடீரென்று நடுரோட்டில் குத்தாட்டம் போட்டார். மொத்த தொண்டர்களும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனார்கள். பிறகுதான் இது ஐபேக் கொடுத்த ஸ்கிரிப்ட் என்று அவர்களுக்குத் தெரியவர... வேறு வழியில்லாமல் அவர்களும் நடுரோட்டில் ஆட்டம் போட வேண்டியதாயிற்று. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களில் பொங்கித் தீர்த்துவிட்டார்கள் உடன்பிறப்புகள். ‘இந்தப் பொழப்புக்கு, காலில் விழும் அமைச்சர்களே பரவாயில்லை...’, ‘மருத்துவர், நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த கதின்னா மத்தவன் கதி!’ என்றெல்லாம் செந்தில்குமாருக்கு நெருக்கமானவர்களே வறுத்தெடுத்துவிட்டார்கள். தருமபுரி தி.மு.க தொண்டர்களோ, ‘‘அதிர்ந்துகூடப் பேசாத, மெத்தப் படித்த மருத்துவரான செந்தில்குமாரையே இப்படி டப்பா டான்ஸ் ஆட வெச்சுட்டாங்களே!” என்று புலம்புகிறார்கள்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

* அதிரடிக்குப் பெயர்போன சென்னை தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவரிடம், ‘தலைவர் கருணாநிதினு அடிக்கடி சொல்றீங்களே... ரொம்ப ஃபேமஸ் போல... அவரைவெச்சே கூட்டம் நடத்துனா என்ன?’ என்று கேட்டாராம் உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்திருந்த ஐபேக் நிர்வாகி ஒருவர். கடுப்பான அந்த மாவட்டச் செயலாளர், அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளில் அர்ச்சித்துவிட்டு, ‘உன்னைப் போய் என் தலைல கட்டினானுங்க பாரு. என் விதியைச் சொல்லணும்யா’ என்று கடுகடுத்திருக்கிறார்.

* தி.மு.க-வின் 11-வது மாநில மாநாடு, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருக்கும் சிறுகனூரில் 350 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெற விருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கே.என்.நேரு செய்துவருகிறார். வழக்கமாக தி.மு.க மாநில மாநாடு இரண்டு அல்லது மூன்று நாள்கள் வரை நடக்கும். ஆனால், ‘ஒரே நாளில் நடத்தி முடிக்க வேண்டும்’ என்று ஐபேக் டீம் நேருவிடம் கறார் காட்டியிருக்கிறது. அத்துடன், நிர்வாகிகளைத் தரையில் அமர வைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். முதலில் இந்த மாநாடு பிப்ரவரி 21-ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், நேருவிடம் கலந்தாலோசிக்காமலேயே ஸ்டாலினின் நான்காம் கட்ட பிரசாரத்தை ஐபேக் அறிவித்துவிட்டது. இதனால், மாநாடு தேதியை மார்ச் 14-க்கு ஒத்திவைக்க வேண்டியதாயிற்று.

அதுமட்டுமல்லாமல், நேருவிடம் ‘நீங்கள் கூட்டத்தை மட்டும் திரட்டினால் போதும்... மற்ற ஏற்பாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்கிறரீதியில் அட்வைஸ் செய்திருக்கிறது ஐபேக். இதனால் கடுப்பான நேரு தரப்பு, ‘‘திருச்சியில நான் எத்தனை மாநாடு நடத்தியிருக்கேன்... இன்னைக்கு வந்து எனக்கே பாடம் எடுக்குறாங்க. கள நிலவரம் தெரியாம எல்லா விஷயத்துலயும் மூக்கை நுழைக்கக் கூடாது’’ என்று ஐபேக் டீமை வெளுத்து வாங்கியிருக்கிறது. இவர்கள் மட்டுமல்ல... நாடக கம்பெனி கணக்காக ஐபேக் தரப்பினர் சொல்லும் அரதப் பழசான ஐடியாக்களைக் கேட்டு துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு எனப் பலரும் தலை கிறுகிறுத்துப் போவதுடன்... கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

தி.மு.க-வில் என்னதான் நடக்கிறது? கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலா ளர்கள் சிலரிடம் பேசினோம்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

ஐபேக் அட்ராசிட்டி; கொந்தளித்த தலைவர்

‘‘தி.மு.க-வுக்குத் தேர்தல் பணியாற்ற ஐபேக் நிறுவனத்தைப் பேசி அழைத்து வந்ததே ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான். ஐபேக் நிறுவனம் அளிக்கும் ரிப்போர்ட்டுகள் இவர் மூலமாகவே தி.மு.க தலைமையைச் சென்றடைகின்றன. தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று வேட்பாளர்களைக்கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது. இதையே வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களைப் பட்டியலில் சொருகும் வேலையை சபரீசன் தரப்பு ஆரம்பித்திருக்கிறது. இதற்கு ஐபேக் நிறுவனமும் உடந்தை. இப்படி வேட்பாளர்கள் தேர்விலேயே ஐபேக் நிறுவனம் தலையிடுவது கட்சியின் சீனியர்களுக்குப் பிடிக்கவில்லை. தவிர, கட்சி நிகழ்ச்சிகளுக்காக மாவட்ட நிர்வாகிகளிடம் லட்சக் கணக்கில் காசைப் பறித்துவிடுகிறார்கள்.

இந்த விஷயத்தில் கடும் கொந்தளிப்பிலிருந்த மூத்த தலைவர் ஒருவர், சமீபத்தில் ஸ்டாலினைச் சந்தித்து, ‘தம்பி... ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ கூட்டத்துக்கு 50 லட்சம் ரூபாய் பில் போடுறாங்க. அவ்வளவு செலவெல்லாம் ஆகாதுங்க. அதுலயும் முன்னயெல்லாம், நம்ம கூட்டத்துக்கு நாமதான் ஏற்பாடு பண்ணுவோம். இதுல லோக்கல்ல பந்தல் போடுறவன், சேர் வாடகைக்கு விடுறவன் எல்லாரும் பிழைப்பான். நம்ம மாவட்டச் செயலாளர்களும் காசு கையைக் கடிக்காம கூட்டத்தை நடத்திடுவாங்க. இப்ப என்னமோ புதுசா, ‘பந்தலை நான் போடுறேன், கூட்டத்தை மட்டும் நீ கூட்டிட்டு வா’னு சொல்லி 20 லட்சத்துக்குள்ள முடியுற செலவை, 50 லட்சமா பில் போட்டு பணத்தைச் சுருட்டுறாங்க.

கூட்டத்துல நீங்க பேசும்போது, மாவட்டச் செயலாளர் பெயரைத் தவிர வேற யார் பேரையும் சொல்லக் கூடாதுனு ஐபேக் தரப்பு சொல்லியிருக்கு. நீங்களும் சொல்றதில்லை. கட்சிக் கூட்டம் நடத்துறவனே ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள்தான். கலைஞர் எந்தக் கூட்டத்துக்குப் போனாலும், வட்டச் செயலாளர் வரைக்கும் பேரை வாசிப்பாரு. அது ஒண்ணுதான் அந்த நிர்வாகிக்கு மதிப்பு, மரியாதை. அவன் பேரைச் சொல்லலைன்னா, அப்புறம் எதுக்கு கட்சி நடத்துறோம்? ஐபேக் ஆளுங்க ஊருக்குள்ள வந்தாலே நம்மாளுங்க பதறிப்போறாங்க... அவங்க அட்ராசிட்டி தாங்க முடியலை’ என்று வெடித்திருக்கிறார்.

அப்போது எதுவும் பேச முடியாமல் அமைதி காத்த ஸ்டாலின், சமீபத்தில் ஐபேக் நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் சீனியர்களின் மனக்குமுறல் குறித்துப் பேசியிருக்கிறார். அதற்கு பிரசாந்த் கிஷோர் தரப்போ, ‘நான் சொல்லும் திட்டங்களில் எந்த மாற்றத்தை நீங்கள் செய்தாலும், தேர்தல் முடிவுகளில் எங்களை எந்தக் குறையும் சொல்லக் கூடாது’ என்று கொஞ்சம் அதிரடியாகவே சொல்லியிருக்கிறது. இதனால் புலி வாலைப் பிடித்த கதையாக இப்போது ஐபேக் பின்னால் தி.மு.க செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது” என்றனர் ஆதங்கத்துடன்.

ஐபேக் வந்தாரு... அட்ராசிட்டி பண்றாரு! - கதறும் உடன்பிறப்புகள்

சீனியர்களுக்கு கல்தா!

இன்னொரு பக்கம், ‘ஸ்டாலினைத் தனிப் பெரும் தலைவராக உருவாக்குவது மட்டுமே எங்கள் பணி’ என்று ஓப்பனாக செயல்படும் ஐபேக், கருணாநிதிக்கு நெருக்கமான நபர்களுக்கு சீட் தர வேண்டாம் என்றும் கறார் காட்ட ஆரம்பித்துவிட்டதாம்.

இப்படிக் கட்சியின் 16 சீனியர்களின் பெயர்களை வேட்பாளர்கள் பட்டியலிலிருந்து தூக்கியிருக்கிறது ஐபேக். இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க எம்.பி ஒருவர், ‘‘கழக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலெட்சுமி ஜெகதீசனின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்தது. பார்த்தவுடன் அதிருப்தியடைந்த சபரீசன், ‘இந்த அம்மாவுக்கு சீட் வேண்டாம். எவ்வளவு நாளைக்கு சீனியர்னு சீட் கொடுப்பீங்க. கட்சிப் பணியை மட்டும் கவனிச்சா போதும்’ என்று பெயரை அடித்திருக்கிறார். இதற்கு ஐடியா கொடுத்ததே ஐபேக்-தான். துரைமுருகன், நேரு, பொன்முடி உள்ளிட்ட சீனியர்கள், இரண்டு முறைக்கு மேல் எம்.எல்.ஏ ஆனவர்கள் என 16 சீனியர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்பதையும் கட்சித் தலைமையிடம் ஐபேக் வலியுறுத்தியிருக்கிறது.

விஷயத்தை அரசல் புரசலாக மோப்பம் பிடித்த மூத்த தலைவர்கள் சிலர் ஸ்டாலினிடமே நேரடியாகக் குமுறிவிட்டனர். அதற்குப் பிறகுதான் துரைமுருகன், நேரு, பொன்முடி ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றன. சீட் கிடைக்காத சீனியர்களுக்கு, சட்டமன்ற மேலவையை உருவாக்கி எம்.எல்.சி ஆக்குவதாக ஸ்டாலின் சமாதானம் செய்திருக்கிறார். ஆனால், இதை சீனியர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்பெல்லாம், ஒரு தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்புதல் பெற்றே பட்டியல் தயாராகும். இப்போது, ஐபேக் சொல்லும் வேட்பாளர்களை மாவட்டச் செயலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது” என்றார் வருத்தத்துடன்.

 நேரு, துரைமுருகன், பொன்முடி, சேகர் பாபு
நேரு, துரைமுருகன், பொன்முடி, சேகர் பாபு

வசூல் ராஜா ஐபேக்!

இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக ஐபேக் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டே பண விவகாரங்களில் அரசியல்வாதிகளை விஞ்சிவிட்டார்கள் என்பதுதான். சமீபத்தில்கூட, திருவள்ளூர் மாவட்டத்தில் ஐபேக் நிறுவனம் தரப்பில் ஒருவர் சீட்டுக்குப் பணம் வாங்கியதைச் சம்பந்தப்பட்ட தி.மு.க நிர்வாகி வீடியோவாக எடுத்து தலைமைக்கு அனுப்பியது பெரும் சர்ச்சையானது.

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர், “தி.மு.க-வின் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய, தொகுதிவாரியாக ஐபேக் டீம் சமீபத்தில் பயணப்பட்டது. அந்தந்தத் தொகுதியில் சீட் கேட்கும் நபர்களைத் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களுக்கு அழைத்து, ‘உங்கள்மீது சில அதிருப்திகள் நிலவுகின்றன. பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்த்துவிடுகிறோம். எங்களை கவனியுங்கள்’ என்று பேசி சுமார் 25 லகரங்களைக் கறந்துவிடுகிறார்கள். மூன்று வேட்பாளர்கள்கொண்ட பட்டியலைத் தயார் செய்ய, மூன்று நபர்களிடமும் பணம் வாங்கிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இப்படிப் பணம் வாங்கினாலும், தங்களுடைய சர்வேயில் நல்ல பெயர் பெற்றிருக்கும் நபரையே, தலைமைக்கு அளிக்கும் சிபாரிசுப் பட்டியலில் முதலிடத்தில் வைக்கிறார்களாம். ‘வசூலுக்கு வசூலும் ஆனது, வேலையை முடித்ததுபோலவும் ஆனது’ என்று பணவேட்டையில் பட்டையைக் கிளப்புகிறது ஐபேக்” என்றார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அதேபோல் ஸ்டாலின் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஐபேக் டீம் வந்துவிடுகிறது. அவர்கள் தங்குவது முதல் அனைத்துச் செலவுகளையும் மாவட்டச் செயலாளர்கள் தலையில் கட்டிவிடுகிறார்களாம். “ஐபேக் டீம் உருவாக்கிக் கொடுத்த ஒரு ஐடியாகூட எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ‘ஒன்றிணைவோம் வா’, ‘தமிழகம் மீட்போம்’ பிரசாரத் திட்டங்களெல்லாம் குளறுபடியில்தான் முடிந்தன” என்று புலம்புகிறார்கள் நிர்வாகிகள்.

மொத்தத்தில் தொண்டர்களோ, “கலைஞர் இருந்தப்ப அவர் சொன்னதுதான் வேதவாக்கு. தலைமைக் கழகம் தொடங்கி மாவட்டக் கழகம் வரைக்கும் புள்ளிவிவரங்களைக் கையில வெச்சிருப்பாரு. ஆனா, இன்னைக்கு சபரீசனுக்கு ஒரு டீம், உதயாவுக்கு ஒரு டீம்னு கட்சிக்காரங்களை டார்ச்சர் பண்றாங்க. இவங்களுக்கெல்லாம் உச்சமா ஐபேக் அட்ராசிட்டியால கழகம் படுபாதாளத்துக்கு போய்க்கிட்டிருக்கு. பத்து வருஷம் கழிச்சு இப்பதான் ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்குற மாதிரி தெரியுது... அதுக்கும் இந்த பீகார்காரன் வேட்டுவெச்சுடுவானோனு பயமா இருக்கு” என்கிறார்கள் அச்சத்துடன்!

சபரீசன்
சபரீசன்

‘சொந்தக் காசுல சூனியம்வெச்சுக்கிட்டாங்க!’ என்றொரு சொலவடை இருக்கிறது. தி.மு.க நிர்வாகிகள் புலம்புவதைப் பார்த்தால், அந்தச் சொலவடை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism