Published:Updated:

`சதிவேலைகளால் நான் வீழ்ந்து கொண்டிருக்கிறேன்!' -ஸ்டாலினிடம் ஆதாரத்தை அடுக்கிய சிவசங்கர்

தி.மு.க செயற்குழு அவசரக் கூட்டம்
தி.மு.க செயற்குழு அவசரக் கூட்டம்

அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவசங்கர் உட்பட சில மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினைத் தனியாகச் சந்தித்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாகப் பேசியுள்ளனர்.

`அ.தி.மு.க கூட்டணி மீது மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருந்தும் அவர்களால் எப்படி இந்தளவுக்கு வெற்றி பெற முடிந்தது?' என்று செயற்குழுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் களத்தில் நடந்த சில விஷயங்களை வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.

தி.மு.க செயற்குழு
தி.மு.க செயற்குழு

அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுக்கு வெற்றி என்றாலும் அதைக் கட்சித் தலைமையால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ, என்.ஆர்.சி உள்ளிட்டவைகளால் உள்ளாட்சியில் அ.தி.மு.க கூட்டணிக்குத் தோல்வி வந்து சேரும் எனத் தி.மு.க கூட்டணி எதிர்பார்த்தது. ஆனால் நடந்தது வேறு. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியையொட்டியே அ.தி.மு.க கூட்டணியும் வெற்றி வாகை சூடியது.

`இதோடு அனைத்தையும் நிறுத்திக்கொள்ளுங்கள்!' - அவசர செயற்குழுவில் கொதித்த ஸ்டாலின்

தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணி நடத்திய அரசியல் சதுரங்கத்தில் தி.மு.க-வினர் தோற்றுப்போனார்கள். காரணம் தி.மு.க-வுக்குள் நடந்த உள்ளடியே அதற்கு முக்கியக் காரணம். இந்தத் தகவல் தி.மு.க தலைமைக்குத் தெரியவந்ததும் உடனடியாக அவசர செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் ஸ்டாலின்.

தி.மு.க செயற்குழு அவசரக் கூட்டம்
தி.மு.க செயற்குழு அவசரக் கூட்டம்

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், `கன்னியாகுமரி, மதுரை, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் கோவை, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.,வுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தோல்விக்கான காரணத்தை ஒவ்வொருவரும் கூறுங்கள்' என்று கூறினார்.

ஆ.ராசாவுடன் ஒன்றிய செயலாளர் கண்ணன்
ஆ.ராசாவுடன் ஒன்றிய செயலாளர் கண்ணன்

இதையடுத்து சம்பந்தப்பட்ட மா.செ-க்கள், நிர்வாகிகள் மாவட்டங்களில் நடந்த உள்ளடி வேலைகளை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினர். அதையெல்லாம் ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமைதியாகக் கேட்டனர். பின்னர், கூட்டத்தில் பேச முடியாத சிலவற்றை ஸ்டாலினைச் சந்தித்து சில மாவட்டச் செயலாளர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் கேட்டபோது, ``அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவசங்கர் உட்பட சில மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினைத் தனியாகச் சந்தித்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாகப் பேசினர். கூட்டத்திலேயே சில மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் நடந்த உள்ளடி வேலைகளைப் பகிரங்கமாகக் கூறி ஒன்றிய, வட்டக் கழக நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்தினர். அப்போது பதில் கொடுத்த ஸ்டாலின், ` இந்தப் பதில் காலம் காலமாகச் சொல்லப்படுவதுதான். அதையும் தாண்டி அரசியல் செய்து வெற்றி பெற வைப்பதுதான் மாவட்டச் செயலாளர்களின் கடமை' எனக் கூறியிருக்கிறார்" என விவரித்தவர்கள்,

அரியலூர் தி.மு.க மாவட்டச் செயலளார் சிவசங்கர்
அரியலூர் தி.மு.க மாவட்டச் செயலளார் சிவசங்கர்

``சிவசங்கர் மீது தளபதிக்கு நல்ல பெயர் உண்டு. ஆனால் உள்ளாட்சியில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி வாய்ப்புகள் பெறவில்லை என்பதால் கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு அவரை அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது பேசிய சிவசங்கர், `நான் கடந்த முறை அரியலூர் மாவட்டத்தில் அரசின் தலைமை கொறடாவாக இருக்கும் ராஜேந்திரனை எதிர்த்து சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டேன். வெறும் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினேன். அதற்குக் காரணமும் டி.பழூர் ஒன்றியச்செயலாளராக இருந்த கண்ணன், திருமானூர், செந்துறை ஒன்றியச்செயலாளர்கள் ஆகியோர்தான் காரணம். இது தலைமைக்கும் தெரியும். அவர்கள் மீது என்ன நடவடிக்கையை எடுத்தீர்கள்.

இந்த முறையும் உள்ளாட்சித்தேர்தலில் செந்துறை ஒன்றியத்தில் போட்டியிட்ட மூன்று கவுன்சிலர்களை பா.ம.க-வுக்கு வாக்களிக்க வைத்தனர்.

எனக்கு எதிராக ஒரு கும்பல் ஆ.ராசாவிடம் இல்லாது பொல்லாததைச் சொல்லி பகையாளியாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இவர்கள் செய்யும் சூழ்ச்சி மற்றும் சதிவேலைகளால் நான் வீழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை. இப்போதே ஒரு குழு அமையுங்கள். அவர்கள் விசாரிக்கட்டும். யார் மீது தவறு இருந்தாலும் நீங்கள் நடவடிக்கை எடுங்கள், நான் கட்டுப்படுகிறேன்' என ஸ்டாலினிடம் கூறிவிட்டார்.

ஒ.செ.கண்ணன்
ஒ.செ.கண்ணன்

அடுத்ததாக நீலகிரி மாவட்டச் செயலாளர் முபாரக்கை அழைத்தார் ஸ்டாலின், அவரிடம், `நீங்கள் கட்சிக்காரர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சீட் வழங்கியது உண்மையா?' என அடுத்தடுத்த கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.

ஒரு காலகட்டத்தில் அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் வியர்த்து விறுவிறுத்துப்போய் கண் கலங்கிய நிலையில் வெளியில் வந்தார் முபாரக்" என்றனர் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு