Published:Updated:

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை... நான் பார்த்த சட்டமன்றம்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

எம்.ஜி.ஆரே கலைஞருக்கு நேரடியாக போன் செய்து, ‘பார்ட்டி ஆபீஸில்தானே இருக்கீங்க... இருங்க, அங்கே வர்றேன்’ என்றார்.

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை... நான் பார்த்த சட்டமன்றம்!

எம்.ஜி.ஆரே கலைஞருக்கு நேரடியாக போன் செய்து, ‘பார்ட்டி ஆபீஸில்தானே இருக்கீங்க... இருங்க, அங்கே வர்றேன்’ என்றார்.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

சுவாரஸ்யம், பதற்றம், பாராட்டு, அவச்சொல், கலவரம், கண்ணீர் என தமிழக அரசியல் வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியமாக இருக்கும் சட்டசபை, நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டசபையோடு இணைந்திருக்கும் மூத்த உறுப்பினரும் தற்போதைய நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனிடம் சபை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கேட்டேன்.

“நான் சட்டமன்ற உறுப்பினராக முதன்முதலில் சபைக்குள் அமர்ந்தது 1971-ல். ஆனால் எனக்கு அது புதிதல்ல. 1967-ல் அண்ணா ஆட்சியமைத்த காலத்திலிருந்தே ஒருநாள் தவறாமல் தினமும் கலைஞரோடு சபைக்கு வருவேன். அதனால் சபை நடவடிக்கைகள் எனக்கு அத்துப்படி. கடந்த 50 ஆண்டுகளில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என மாறி மாறி சட்டமன்றத்துக்குள் என் வாழ்க்கை சுழன்றிருக்கிறது.

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை... நான் பார்த்த சட்டமன்றம்!

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பூம்புகார் நிறுவனம் சார்பில் இரண்டு கப்பல்கள் வாங்குவதற்கான வேலை நடந்தது. அதில் ஊழல் நடந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. கலைஞர் அது தொடர்பான தகவல்களைத் திரட்டினார். ஏகப்பட்ட ஆவணங்கள் சேர்ந்துவிட்டன. இரண்டு நாள்களில் கூடவிருக்கும் சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தைக் கிளப்பவேண்டும். முரசொலி மாறன், நான் எல்லோரும் அமர்ந்து ஆவணங்களை முறைப்படுத்த முயன்றோம். கசகசவென பெரும் குழப்பமாக இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த கலைஞர், ‘எல்லாத்தையும் கொடுங்கப்பா’ என்று வாங்கி அழகாகப் பிரித்து அடுக்கினார். ‘பால்டிகா கப்பல் பேர ஊழல்’ என்றழைக்கப்பட்ட அந்த விவகாரத்தைப்பற்றி சட்டமன்றத்தில் அவர் பேசிய பேச்சு காலத்திற்கும் நிலைத்திருக்கும். ‘இதற்கு இது ஆதாரம்’, ‘இதற்கு இது ஆதாரம்’ என்று ஆவணங்களைத் தூக்கிப்போட்டு அவர் பேசியதைப் பார்த்து மிரண்டுபோன எம்ஜிஆர், ‘நாளை பதிலளிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார். மறுநாள் சபைக்கு வந்து ‘கப்பல் வாங்கப்போவதில்லை’ என்றார். அந்தக் காலகட்டத்தில் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

ஒருமுறை சபையில் ரகளையாகிவிட்டது. எங்களைப் பேசவிடவில்லை. நாங்கள் வெளிநடப்பு செய்து கட்சி அலுவலகத்துக்குச் சென்றுவிட்டோம். சபாநாயகர் பேசி சபைக்கு அழைத்தார். நாங்கள் ‘வரமுடியாது’ என்று சொல்லிவிட்டோம். அடுத்து எம்.ஜி.ஆரே கலைஞருக்கு நேரடியாக போன் செய்து, ‘பார்ட்டி ஆபீஸில்தானே இருக்கீங்க... இருங்க, அங்கே வர்றேன்’ என்றார். ‘அதெல்லாம் வேண்டாம்... நாளைக்கு சபைக்கு வந்திடுறோம்’ என்றார் கலைஞர். அப்படி கட்சித் தலைவர்கள் அன்பாகவும் இணக்கமாகவும் பேசிக்கொண்ட காலகட்டம் தமிழக அரசியல் சூழலில் இருந்தது.

பொதுவாக, சபையிலிருந்து எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தால் ஆளுங்கட்சியிலிருந்து அழைப்பு விடுப்பது ஒரு நாகரிகம். ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரம்... வெளிநடப்பு செய்துவிட்டார்கள். கலைஞர், அமைச்சர்கள் நேருவையும் வீரபாண்டி ஆறுமுகத்தையும் அனுப்புகிறார். எதிர்க்கட்சித் தலைவர் அறைக்குச் சென்று அமைச்சர்கள் அழைக்க, ஓ.பி.எஸ் அவரது தலைவிக்கு போன் செய்து பேசினார். ‘வேண்டாம், வந்திடுங்க’ என்று சொல்லிவிட்டார் ஜெயலலிதா. இப்படியும் ஒரு காலகட்டத்தைத் தமிழக சட்டசபை சந்தித்திருக்கிறது.

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை... நான் பார்த்த சட்டமன்றம்!

நான் மாணவனாக இருந்தபோது எம்.ஜி.ஆர் நிறைய உதவிகள் செய்திருக்கிறார். எனக்கு அவர்மீது எப்போதும் பெரிய மரியாதை உண்டு. ஒருமுறை நான் சபையில் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரே குமட்டல். வாந்தி வரும்போல் இருக்கிறது. பேச்சை நிறுத்திவிட்டு வாயைப் பொத்திக் கொண்டு வெளியில் ஓடிவந்து விழுந்துவிட்டேன். முதல்வர் இருக்கையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் ஓடிவந்து என்னை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு ‘தம்பி... தம்பி...’ என்று பதறிப்போனார். அந்த அளவுக்கு சபையில் கட்சியைத் தாண்டிய அன்பும் நேசமும் இருந்தது.

கலைஞரும் எம்.ஜி.ஆரும் சபையில் இயல்பாகப் பேசிக்கொள்வார்கள். ஒருவரை ஒருவர் கலாட்டா செய்து சிரிப்பார்கள். ‘காவிரிப் பிரச்னையில் உங்கள் கொள்கை என்ன?’ என்று கேட்டால், ‘கலைஞர் கொள்கை என்னவோ அதுதான் என் கொள்கை’ என்பார். கோட்டையில் கொடியேற்றும்போது, ‘இந்தக் கொடியேற்றும் உரிமையை வாங்கித்தந்தவர் முன்னாள் முதல்வர் மதிப்புக்குரிய கலைஞர்’ என்றார்.

நான், சுப்பு, ரகுமான்கானெல்லாம் இடி, மின்னல், மழையாக இருந்த காலம் அது. சபையில் எம்.ஜி.ஆரைப் பிடிபிடியென்று பிடிப்போம். நானாவது வரம்போடு பேசுவேன். சுப்பு அடிஅடியென்று அடிப்பார். ‘நம்முடைய முதலமைச்சருக்குக் கொள்கையில்லை என்பதுதான் கொள்கை’, ‘முதலமைச்சர் நல்லவர், ஆனால் வயதானவர்’ என்றெல்லாம் வாரிக்கொண்டே இருப்பார். எம்.ஜி.ஆர் கோபப்படமாட்டார். ரசித்துச் சிரிப்பார்.

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை... நான் பார்த்த சட்டமன்றம்!

அப்போதெல்லாம் ஒவ்வொரு இருக்கையிலும் பச்சைத்துணியில் மணலைக் கொட்டிக் கட்டி பேப்பர் வெயிட் மாதிரி வைத்திருப்பார்கள். ஒருமுறை சபையில் கலவரமாகி அந்த மணல் மூட்டையைத் தூக்கி ஒருவர் மேல் ஒருவர் வீசிக்கொண்டார்கள். எம்.ஜி.ஆர் மேலேயே ஒரு மூட்டை விழுந்தது. அதன்பிறகு, ‘அந்தப் பச்சைத்துணி பேப்பர் வெயிட் சபைக்குள்ளேயே வரக்கூடாது’ என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.

கலைஞர் முதல்முறையாக முதல்வராக வந்து சபையில் அமர்ந்த நேரம். மாயவரம் எம்.எல்.ஏ கிட்டப்பா ‘மாயவரத்தில் விமான நிலையம் அமைக்கப்படுமா?’ என்று கேள்வி கேட்டார். ‘கிட்டப்பா, அது கிட்டாதப்பா’ என்று பதில் சொன்னார் கலைஞர். அடுத்த கேள்வி, ‘நாப்தாலில் இருந்து என்னென்ன துணைப்பொருள்களைத் தயாரிக்கலாம்?’ என்பது. 90 வகையான பொருள்களைத் தயாரிக்கலாம் என்ற கலைஞர் அந்த 90 பொருள்களின் பெயரையும் பட்டியலிட்டார். அடுத்து, அவருக்குப் பின்னால் இருந்து அரியலூர் எம்.எல்.ஏ ஆறுமுகம் கைதூக்கினார். ‘பேரவைத் தலைவர் அவர்களே... நாப்தாலில் இருந்து என்னென்ன துணைப்பொருள்களைத் தயாரிக்கலாம்?’ என்று மீண்டும் கேட்டார். கலைஞர் அமைதியாக எழுந்து, ‘காது கேட்கும் கருவி செய்யலாம்’ என்றார்.சபையே சிரித்தது.

கலைஞர் 56 ஆண்டுகளுக்குமேல் சபையில் இருந்திருக்கிறார். வாழ்க்கையில் பெரும்பகுதி இந்த சபையில் கழிந்திருக்கிறது. எம்.எல்.ஏ-வாக, கொறடாவாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராக, முதலமைச்சராக என 5 நிலைகளில் இருந்து சபையில் பேசியிருக்கிறார். கணக்கிட்டுப் பார்த்தோமானால் சட்டசபைக்குள் அதிகம் பேசியவராக அவரே இருப்பார். ஆனால், அவர் பேசிய ஒரே ஒரு வார்த்தையைக்கூட அவைக்குப் புறம்பானதாகச் சொல்லி சபைக்குறிப்பிலிருந்து சபாநாயகர்கள் நீக்கியதில்லை. அந்த அளவுக்குக் கண்ணியம் காத்தவர்.

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை... நான் பார்த்த சட்டமன்றம்!

ஜெயலலிதா வந்தபிறகு சபையின் கலாசாரம் முழுமையாக மாறிப்போனது. எதிர்க்கட்சிகளை விரோதியாகப் பார்ப்பது, பேசவிடாமல் தடுப்பது, நேரம் தராமல் ஒடுக்குவது எனச் சூழலே மாறிப்போனது. அ.தி.மு.க அமைச்சர்களும் உறுப்பினர்களும் மறந்துகூட மற்றவர்களைப் பார்த்துப் புன்னகைக்க மாட்டார்கள். அவஸ்தையாகவும் இறுக்கமாகவும் அமர்ந்திருப்பார்கள். அமைச்சர்களுக்கு அருகில்தான் என் இருக்கை. நான் ஒரு பேனாவை எடுத்து அமைச்சர்கள் முகத்துக்கு முன்னால் ஆட்டுவேன். சிரிக்கக்கூட முடியாமல் வாயைக் கடித்துக்கொள்வார்கள். ஜெயலலிதா சபையை விட்டுப் போனபிறகு, ‘ஏண்ணே, நீங்க வேற...’ என்று சிரிப்பார்கள்.

சபைக்குள் கச்சத்தீவு பற்றிய விவாதம் நடக்கிறது. ஜெயலலிதா எழுந்து, ‘இந்த விவகாரம் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க-வுக்கு அருகதை இல்லை. வக்கில்லாத கட்சி’ என்றெல்லாம் பேசிக்கொண்டே சென்றார். ஸ்டாலின் இடைமறித்து, ‘தி.மு.க-வைப்பற்றிப் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்குத் தகுதியில்லை’ என்று அதே ஆவேசத்தோடு பேசினார். ஜெயலலிதா பதில் பேச முயன்றார். நாங்கள் விடவில்லை. ஜெயலலிதா ‘ஸ்டாலின் ப்ளீஸ் 2 மினிட்ஸ்’, ‘துரைமுருகன் ப்ளீஸ்’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் தி.மு.க உறுப்பினர்கள் அவரைப் பேசவிடவில்லை. கத்திக்கத்திப் பார்த்துவிட்டு ஓ.பி.எஸ் பக்கம் திரும்பி, ‘நீங்களே ஏதாவது செஞ்சுக்கோங்க’ என்று மிகவும் கடுமையாக ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுக் கிளம்பினார். நடக்கமுடியவில்லை. தள்ளாடிய ஜெயலலிதாவைக் காவலர்கள் சூழ்ந்து அழைத்துச் சென்றார்கள். அதுதான் ஜெயலலிதா கடைசியாக சபைக்கு வந்த நாள்.

1989-ல் சட்டசபையில் முதல்வராக இருந்த கலைஞர் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர். பட்ஜெட் தாக்கல் செய்யவிடாமல் அ.தி.மு.க உறுப்பினர்கள் தடுக்க, ஒரே களேபரமாகிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கையில் இருந்து 14வது இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். நான் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர். சம்பவம் நடக்கும் இடத்துக்கு லாபியைச் சுற்றித்தான் வரவேண்டும். ஆனால் மாலை பேட்டி கொடுத்தபோது, நான்தான் புடவையை இழுத்தேன் என்று சொல்லிவிட்டார் ஜெயலலிதா. ‘இது அபாண்டக் குற்றச்சாட்டு... அருகிலேயே மூப்பனார் இருந்தார். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார்... அவர் சொல்லட்டும், ஒப்புக்கொள்கிறேன்’ என்று சொன்னேன். மூப்பனார் அமைதியாகவே இருந்துவிட்டார்.

எடப்பாடி, ஓ.பி.எஸ் இருவரும் முதல்வராக இருந்த காலகட்டங்களையும் பார்த்திருக்கிறேன். இருவருமே கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல மாட்டார்கள். வாங்கிப் படிப்பார்கள். அவ்வளவுதான். தயாராகவே வரமாட்டார்கள்.

சட்டசபை நூற்றாண்டு, கலைஞரின் படத்திறப்பு விழாவின் மேடையில் ஜனாதிபதி, கவர்னர், சபாநாயகர், முதலமைச்சரோடு எதிர்க்கட்சித் தலைவரையும் சமமாக அமரவைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விரும்பினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்புதல்பெறும் பொறுப்பை என்னிடம் தந்தார். நான் பழனிசாமியைத் தொடர்புகொண்டு ‘பங்கேற்க வேண்டும்’ என்று அழைத்தேன். ‘சேலம் போய்க்கிட்டிருக்கேண்ணே. எங்க ஆளுங்ககிட்ட கலந்துக்கிட்டுச் சொல்றேன்’ என்றார். ‘இதுக்கெல்லாமா கலந்துக்கிட்டிருப்பீங்க? ஒரு உறையில ஒரு கத்திதான் இருக்கணும்... முடிவெடுங்க’ என்றேன். சட்டசபைச் செயலாளருக்கு போன் செய்து ‘நான் வரவில்லை’ என்று சொல்லிவிட்டார்.

நாங்கள் மீண்டும் கண்ணியமான அந்தப் பழைய மரபை சட்டசபைக்குள் கொண்டு வர உறுதியெடுத்திருக்கிறோம். சட்டசபை நூற்றாண்டைக் கடந்திருக்கிறது. அதற்கான மாண்பும் கண்ணியமும் எப்போதும் நிலைத்திருக்கும். அதற்காக உழைப்போம்!

*****

1919-ல் மாண்டேகு - செம்ஸ்போர்டு பரிந்துரைகளின்படி, இந்தியர்கள் தங்களை ஆண்டுகொள்வதற்கான மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் நியமன உறுப்பினர்கள் என்று இரட்டையாட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட சபை இது.

அதன்படி, 1920-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சென்னை மாகாணத்தின் முதல் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. முதல் சட்டமன்றக் கூட்டம் 1921, ஜனவரி 11-ல் நடைபெற்றது. அந்த முதல் தேர்தலில் வெறும் 3 சதவிகித மக்களுக்கே வாக்குரிமை கிடைத்தது. பெண்கள் வாக்களிக்க அனுமதி இல்லை. முதல் கூட்டத் தொடரிலேயே, பெண்களுக்கு வாக்குரிமையும் தேர்தலில் போட்டியிட உரிமையும் கிடைக்க சட்டம் இயற்றப்பட்டது.

1935-ல் சட்டமன்ற மேலவை, கீழவை என்னும் இரு அவைகளை உருவாக்குவதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி 1937-ல் சட்டமன்றத்தில் இரு அவைகள் செயல்படத் தொடங்கின. இதை அடிப்படையாகக் கொண்டே 1987-ல் சட்டப்பேரவைப் பொன்விழா கொண்டாடுவதற்கான முயற்சிகள் தொடங்கின. ஆனால், எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல்போனதால் அந்த விழா முயற்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. 1989-ல் தமிழக முதல்வரான கருணாநிதி சட்டப்பேரவையின் பொன்விழாவைக் கொண்டாடினார். இதைச் சுட்டிக்காட்டியே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ‘ஸ்டாலின் சட்டமன்ற வரலாற்றை மாற்றுகிறார்’ என்று குற்றம் சாட்டினார்.

எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஸ்டாலின் கணக்குகள் இப்படி இருக்க, ஜெயலலிதாவின் கணக்கோ இன்னும் விசித்திரமானது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு நடைபெற்ற முதல் தேர்தலின்படி 1952-ல் உருவான சட்டமன்றக் கணக்கைக்கொண்டு 2012-ல் சட்டமன்ற வைரவிழாவைக் கொண்டாடினார்.