Published:Updated:

தூத்துக்குடி பயிற்சி மருத்துவர் சித்ரவதை வழக்கு: கைதான திமுக நிர்வாகிமீது நில அபகரிப்பு புகார்!

தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் பயிற்சி பல் மருத்துவரைத் தாக்கிய விவகாரத்தில் திமுக ஒன்றியப் பொறுப்பாளரும், ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவருமான இளையராஜா கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்மீது நில அபகரிப்பு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பல் மருத்துவராகப் பணிபுரிந்து வரும் முருகப்பெருமாள் என்பவரும், அதே மருத்துவருமனையில் பணிபுரிந்து வரும் பயிற்சி மருத்துவரான அமிர்தவர்த்தினி என்பவரும் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது.

புகார் அளித்த முத்துவேல்
புகார் அளித்த முத்துவேல்

இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்குத் தெரியவர, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க பெண் வீட்டார், இளையராஜா என்பவரை நாடியதாகச் சொல்லப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவர் இளையராஜா. இவர், ஓட்டப்பிடாரம் தி.மு.க வடக்கு ஒன்றியப் பொறுப்பாளராக இருக்கிறார். மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் இவர் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி பணி முடிந்து மருத்துவமனையைவிட்டு வெளியே வந்த முருகப்பெருமாளை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து இளையராஜா காரில் கடத்திச் சென்று அடித்துத் துன்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இதில் காயமடைந்த முருகப் பெருமாள், கடந்த 19-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இவர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இளையராஜா, அவரின் ஆதரவளரான வானவராயன் என்ற சண்முகசுந்தரம் உள்ளிட்ட மூவர் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைதுசெய்தனர். அத்துடன் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் அறிவாலயத்தில் பெரிய அளவில் எதிரொலித்ததாம்.

இளையராஜா
இளையராஜா

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விளக்கமும் கேட்கப்பட்டிருக்கிறதாம்.

இந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் நில அபகரிப்பு புகார் அளித்துள்ளார். இது குறித்து முத்துவேலிடம் பேசினோம். “ஓட்டப்பிடாரத்தில் எனக்கு 11.66 ஏக்கர் நிலம் இருக்கு. இந்த நிலத்துல கடந்த 25 ஆண்டாக மானாவாரி விவசாயம் செய்துட்டு வர்றேன். இந்த நிலையில ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவரான இளையராஜா, எனக்கான நிலத்துல மூணு ஏக்கரை அவர் பெயருக்கு எழுதிக் கேட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`விவசாயம் செய்யுற நிலத்தை உங்ககிட்ட கொடுத்துட்டா, நான் என்னய்யா செய்வேன்’னு சொல்லி நான் முடியாதுன்னு மறுத்துட்டேன். இதனால் என் நிலத்துக்குள்ள அத்துமீறி நுழைந்து 40 கல்தூண்கள் நட்டு என் நிலத்தை அபகரிச்சுட்டார். இது சம்பந்தமா ஓட்டப்பிடாரம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தேன். ஆனா, இளையராஜாவிடம் எந்த விசாரணையும் செய்யாமல், போலீஸார் என்னையும் என்னுடன் புகார் அளிக்க வந்தவரையும் அனுப்பிவிட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

நிலம் சம்பந்தமா புகார் கொடுத்தால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள். அவங்களோட மிரட்டலால் என்னோட நிலத்துக்கே போக முடியாத நிலையில இருக்கேன். இளையராஜாவிடமிருந்து என்னோட நிலத்தை மீட்டுத் தரக் கோரி கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு