Published:Updated:

தி.மு.கவின் உயிரினும் மேலான உடன்பிறப்புக்கு ஸ்டாலினுடன் படம் எடுக்க ஆசை!

இதுவரையிலும் தி.மு.க நடத்திய 233 கூட்டங்களுக்கும் மேல் கலந்துகொண்டிருக்கும் இவர், அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதைத்தான் ஆசையாகக் கொண்டிருக்கிறார்.

DMK Follower Mani
DMK Follower Mani

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் தி.மு.க நடத்தும் எந்தக் கூட்டமாக இருந்தாலும் முதல் ஆளாக ஆஜராகிவிடுவார், இந்த மனிதர். மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் பேச்சு மற்றும் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். கருணாநிதி, ஸ்டாலின் இருவர்களுள் யாரேனும் ஒருவர் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் போதும், பேப்பர் கட்டை தூக்கிக்கொண்டு முதல் ஆளாக ஆஜராகிவிடுவார். கருணாநிதி கைதானபோது, முதல் ஆளாக மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு நடுவீதியில் ஓடியவர் இவர். இதுவரையிலும் தி.மு.க நடத்திய 233 கூட்டங்களுக்கும் மேல் கலந்துகொண்டிருக்கும் இவர், அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதைத்தான் ஆசையாகக் கொண்டிருக்கிறார்.

Mani in DMK Event
Mani in DMK Event

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், மணி. இவர், பூ விற்கும் தொழில் செய்துவருகிறார். இவருக்கு, மூன்று பெண்பிள்ளைகள். எந்தச் சுவரிலாவது 'தி.மு.க போராட்டம்' என்று போஸ்டரைப் பார்த்துவிட்டால் போதும், ஒரு கையில் கொடியைப் பிடித்துக்கொண்டு, மறு கையில் பேப்பர் கட்டை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்.

பொதுக்கூட்டம், பிரசாரம் இல்லாத நாள்களில், பூ விற்பார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு, சாப்பாட்டிற்கும் வெளியூர் கூட்டத்திற்குச் செல்லவும் பயன்படுத்துவார்.

Mani
Mani

1960-களில், தி.மு.க-வை பலப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் கருணாநிதி சென்றபோது, செந்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலும் அவர் கலந்துகொண்டார்.

மேடையில் ஏறிய கருணாநிதி, "உங்களுக்காக அல்லும்பகலும் உழைத்துக்கொண்டிருக்கிறேன். எனக்காக யாரும் உழைக்க வேண்டாம். கழகத்திற்காக உழைத்தால்போதும், பல கலைஞர்கள் உருவாவார்கள்'' என்று பேசியிருக்கிறார். அன்று அவரது பேச்சை மனதில் நிறுத்திய மணி, அன்றுமுதல் தம் பெயரோடு கலைஞர் என்ற பெயரை இணைத்துக்கொண்டாராம்.

Mani
Mani

அது மட்டுமல்லாது, கருணாநிதிபோன்று தோற்றமளிப்பதற்காக அவரைப்போன்றே அலங்காரம் செய்துகொள்வாராம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க சார்பில் எங்கு கூட்டம் நடந்தாலும், அங்கு முதல் ஆளாகக் கலந்துகொள்வாராம். அப்படி கூட்டத்துக்குச் செல்லும் அவர், 'கலைஞர் வாழ்க, ஸ்டாலின் வாழ்க' என்று கோஷம் எழுப்புவாராம்.

இதுவரை 233 கூட்டங்களுக்கும் மேல் கலந்துகொண்டுள்ள அவர், மாதம் ஒருமுறை தவறாமல் சென்னையில் இருக்கும் தி.மு.க அலுவலகமான அறிவாலயத்திற்கு வந்துவிடுவாராம். ஆனால், அங்குள்ளவர்கள் இவரை உள்ளே விடுவதில்லையாம். ஆகையால், வருத்தத்துடன் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிவிடுவாராம். இப்படியாக நாள்களைக் கடத்தும் மணி கலைஞரிடம் பேசினோம்.

Mani with DMK workers
Mani with DMK workers

”கலைஞர் அய்யாவதான் என்னோட குலசாமியா நினைச்சி வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். எனக்கு பெரிசா எதுவும் ஆசையில்லங்க. ஐயாவோடு (கலைஞர்) ஒரு போட்டோ எடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். ஆனா, அது நிறைவேறாம போச்சு. ஆனாலும், மனச தேத்திக்கிட்டு ஒவ்வொரு கூட்டத்துக்கும் போறேன். அதுக்குக் காரணம், ஐயாவோட மகன் (ஸ்டாலின்). ஐயாவோட பேச்சைப் போலவே தளபதியின் பேச்சும் இருக்குது. ஐயாகிட்டதான் போட்டோ எடுக்க முடியலை. இந்த தளபதி ஐயாகிட்டயாவது ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கிட்டா போதும். இந்த ஆசைமட்டும் நிறைவேறினா, என் கட்ட வெந்திடும். கடைசிவரைக்கும் இந்தக் கட்சிக்காக கொடி பிடிச்சிக்கிட்டே என்னோட வாழ்க்கையை முடிச்சுக்குவேன்" என்றார்.

Update: விகடன்.காமில் செய்தி வெளியானதும் தி.மு.க. தரப்பிலிருந்து பலர் நம்மை தொடர்பு கொண்டனர். அரியலூர் மணி எப்போது அறிவாலயம் வந்தாலும், அவரை ஸ்டாலினுடன் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யப்படும். கடைக்கோடி தொண்டனை எந்த சங்கடத்துக்கும் ஆளாக்காத பாரம்பர்யம் தி.மு.க.வுக்குச் சொந்தம் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து அரியலூர் திமுக மாவட்டச் செயலாளர் சிவசங்கரிடம் பேசினோம். "மணி கலைஞரை எனக்கு நன்கு தெரியும். தலைவர் மற்றும் தளபதி ஏதோ ஒரு மாவட்ட கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்று கேள்விப்பட்டால் போதும் உடனே அவரும் கிளம்பிவிடுவார். அத்தோடு அவருக்குத் தெரிந்த முக்கிய நபர்களுக்கு போன் அடித்துப் பேசுவார். அதுபோல் எனக்கும் பலமுறை பேசியிருக்கிறார். இந்த நிலையில் அவர் தளபதியைப் பார்க்க ஆசைப்படுவதாக இச்செய்தியின் மூலம் தெரியவந்தது அவர் விருப்பப்பட்டால் கண்டிப்பாகத் தளபதியைச் சந்தித்துப் போட்டோ எடுக்கவும் ஏற்பாடு செய்கிறேன். அவருடைய நீண்ட நாள் கனவைத் தளபதி நிறைவேற்றுவார்." என்றார்.