Published:Updated:

தோளில் கை போட்டார்... சாதியை சொல்லி கேவலப்படுத்தினார்!

புனித ராணி, காடுவெட்டி தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
புனித ராணி, காடுவெட்டி தியாகராஜன்

- தி.மு.க எம்.எல்.ஏ-வை சாடும் தி.மு.க ‘முன்னாள்’ சேர்மன்

தோளில் கை போட்டார்... சாதியை சொல்லி கேவலப்படுத்தினார்!

- தி.மு.க எம்.எல்.ஏ-வை சாடும் தி.மு.க ‘முன்னாள்’ சேர்மன்

Published:Updated:
புனித ராணி, காடுவெட்டி தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
புனித ராணி, காடுவெட்டி தியாகராஜன்

தி.மு.க சேர்மன் மீது தி.மு.க-வினரே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி பதவி நீக்கம் செய்திருப்பதும், ‘‘தோளில் கைவைத்தார், சாதிப் பெயரைச் சொல்லிக் கேவலப்படுத்தினார்’’ என்று பதவியிழந்தவர் பதிலடி கொடுப்பதுமாக திருச்சி மாவட்ட தி.மு.க-வே திகுதிகுக்கிறது!

திருச்சி மாவட்டம், தொட்டியம் யூனியன் சேர்மனாக இருந்தவர் புனித ராணி. பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தொட்டியம் யூனியனிலுள்ள தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் புனித ராணிமீது ஊழல் புகாரை வாரியிறைத்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றி, சேர்மன் பதவியைவிட்டு இறக்கியிருக்கிறார்கள்.

தோளில் கை போட்டார்... சாதியை சொல்லி கேவலப்படுத்தினார்!

‘என்னதான் நடந்தது...’ என்ற கேள்வியோடு புனித ராணியிடம் பேசினோம். “அரசியலுக்கு நான் புதுசு. நேரு ஐயாவை நம்பித்தான் நான் அரசியலுக்குள் வந்தேன். ஆனால், நான் இங்கே ‘வெறும் கையெழுத்தை மட்டும்தான் போடணும். சுயமாகச் செயல்படக் கூடாது’னு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் நினைச்சாரு. அதுமட்டுமில்லாம, தொட்டியம் யூனியன் துணை சேர்மனான அவரோட தங்கை மகன் சத்தியமூர்த்திதான் எல்லா வேலைகளையும் செய்யணும்னு நினைச்சாரு.

கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமான பலகைகள்வெக்கிறதுல மா.செ சொன்ன நபருக்கு நான் டெண்டர் கொடுக்காததால, என் மேல அவருக்குக் கோபம். அதனால 1.19 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை, சாக்கடைத் திட்டப் பணிகளுக்கான டெண்டரை ஒரு வருஷமா நிறுத்திவெச்சுட்டாரு. நான் பதவியில இருந்த இரண்டரை வருஷத்துல ஒரே ஒரு டெண்டரை மட்டும்தான் என்னால விட முடிஞ்சுது. அதுலயும் 60 சதவிகிதத்துக்கு மேல கமிஷன் கொடுக்கச் சொல்லி மா.செ தொந்தரவு செஞ்சாரு. நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவ... பொது இடங்கள்ல என்னோட சாதிப்பெயரைச் சொல்லிக் கேவலமா நடத்துனாரு. தொட்டியத்தில் வ.உ.சி சிலைக்கு மாலை போடுறப்ப, 100 பேர் முன்னாடி என்னோட தோள்ல கை போட்டாரு. இதையெல்லாம் தாங்க முடியாம தற்கொலை செஞ்சுக்குற வரைக்கும் போயிட்டேன்.

தோளில் கை போட்டார்... சாதியை சொல்லி கேவலப்படுத்தினார்!

நான் பதவிக்கு வர்றதுக்கு முன்னாடி வாங்குன சேர், டேபிள்ல எல்லாம் நான் ஊழல் செஞ்சேன்னும், பி.டி.ஓ அலுவலகத்துலருந்து வந்த பிளீச்சிங் பவுடர்ல ஊழல் செஞ்சேன்னும் பொய்யான புகார்களைச் சொல்லி, 16 கவுன்சிலர்களை வெச்சு எனக்கு எதிரா நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து என்னை சேர்மன் பதவியிலிருந்து நீக்கியிருக்காங்க. காடுவெட்டி தியாகராஜன் என்ற ஒரு தனி மனிதருடைய விருப்பு வெறுப்புக்காக நான் பழி வாங்கப்பட்டிருக்கேன். இந்தப் பிரச்னைக்கு நியாயம் கேட்டு நேரு ஐயா ஆபீஸ் வாசல்ல பல தடவை நின்னும், என்மேல அவருக்கு இரக்கமே வரலை. தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு என இட ஒதுக்கீடு செஞ்சுட்டா மட்டும் போதாது. அவங்களைப் பாதுகாத்துச் செயல்பட விடணும். எந்த ஒரு தப்புமே பண்ணாத எனக்கு அநீதி நடந்துருக்கு. எனக்கு நீதி கிடைச்சாத்தான் உண்மையிலேயே தி.மு.க-வில் சமூகநீதி உயிரோட இருக்குன்னு அர்த்தம்” என்றவர், தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முசிறி தி.மு.க எம்.எல்.ஏ-வும், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளருமான காடுவெட்டி தியாகராஜனிடம் விளக்கம் கேட்டோம். “அந்த அம்மா தி.மு.க-விலேயே இல்லாதபோது, நான்தான் சீட் கொடுத்து ஜெயிக்கவெச்சு சேர்மன் ஆக்குனேன். ‘18 யூனியன் கவுன்சிலர்கள்தான் உனக்கு தெய்வம். அவங்களை அனுசரிச்சுப் போ’ன்னு சொன்னேன். அவங்க அதைக் கேக்கலை. ‘நீங்க சொல்லித்தானே நாங்க அவங்களுக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வெச்சோம். எதுக்குமே அவங்க கட்டுப்பட மாட்டேங்குறாங்க’ன்னு கவுன்சிலர்கள் என்கிட்ட புகார் சொன்னாங்க. ஒரு கட்டத்துல சாதி அது இதுன்னு அந்த அம்மா பேச ஆரம்பிச்சது கவுன்சிலர்களுக்குப் பிடிக்கலை. கிட்டத்தட்ட 10 தடவை அவங்களைக் கூப்பிட்டு ‘அனுசரிச்சுப் போ’ன்னு சமாதானம் பேசினேன். அதுக்குப் பின்னாடி நான் எந்த விஷயத்துலயும் தலையிடலைங்க. கமிஷன் சம்பந்தமாக எந்த நிர்பந்தமும் நான் செய்யலை. சாதிரீதியாகச் சொல்கிற புகாரெல்லாம் சுத்தப் பொய். அந்த அம்மாவை சேர்மன் ஆக்கியதைத் தவிர, நான் வேற எந்தத் தப்பும் செய்யலை” என்றார்.

தோளில் கை போட்டார்... சாதியை சொல்லி கேவலப்படுத்தினார்!

இதையடுத்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் பேசினோம். “உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததாலதான் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கே தவிர, இதுல வேற எந்தப் பிரச்னையுமில்லை. உறுப்பினர்களைச் சரியா வெச்சுருந்தா நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்போது, ஓட்டை ஏன் மாத்தி போடப்போறாங்க... தப்பு பண்ணுனா நடவடிக்கை எடுத்துத்தானேங்க ஆகணும்... ‘ஏன் உங்களை அந்தப் பதவியில இருந்து எடுத்தாங்க?’ன்னு அந்த அம்மாவையே கேளுங்க. காடுவெட்டி தியாகராஜன்தான் அந்தப் பொண்ணை சேர்மன் ஆக்கினாரு. காடுவெட்டி தியாகராஜன் மேல சொன்ன புகாரையெல்லாம் விசாரிச்சாச்சு. அதுல ஒண்ணும் தவறா இல்லை. வீட்ல இருந்தவங்களைக் கூட்டிட்டு வந்து சேர்மன் ஆக்கினதுக்கு இவ்வளவு பிரச்னையா?” என்றார்.

எம்.எல்.ஏ-வின், அமைச்சரின் விளக்கங்களை மீண்டும் ஒரு முறை படியுங்கள். சமூகநீதி?