Published:Updated:

``நெய் மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு கொரோனால சிக்கிட்டோமே!''- புலம்பும் தி.மு.க.வினர்

குணசேகர் பிறந்தநாள் விழா
குணசேகர் பிறந்தநாள் விழா

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பிறந்தநாள் கொண்டாடிய தி.மு.க பொதுக்குழு உறுப்பினரால், அப்பகுதியே கொரோனா பயத்தில் இருக்கிறது. கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.கவினர் மரணபீதியில் இருக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மாநெல்லூரைச் சேர்ந்தவர் பா.செ.குணசேகர். தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான இவர், கடந்த 19-ம் தேதி தனது 50-வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியுள்ளார். இவர் மனைவி மாலதி கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் என்பதால், ஊரில் குணசேகருக்கு செல்வாக்கு அதிகம். இவருக்குச் சொந்தமான மாந்தோப்பில் தடபுடல் பிரியாணி, மதுபான வகைகளோடு நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில் அரசு அதிகாரிகள், அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒன்றியக் குழு தலைவர், கவுன்சிலர்கள், கட்சிக்காரர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கூத்தடித்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும்போது, பொறுப்பற்ற முறையில் குணசேகர் விழா கொண்டாடியது, கொரோனா தொற்று பரவ காரணமாக அமைந்துவிட்டது. தற்போது குணசேகர் உட்பட ஆறு பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் இப்போது திருவள்ளூர் போலீஸ் விரட்டிப் பிடிக்க ஆரம்பித்துள்ளது.

குணசேகர்
குணசேகர்

யார் இந்த குணசேகர்?

குணசேகரின் ஆரம்ப காலம் செம்மரக் கடத்தல்காரர்களுக்கு ஒரு ‘இன்ஃபார்மராக’த்தான் தொடங்கியது. ஆந்திர எல்லையிலுள்ள சத்யவேடு வழியாகக் கொண்டுவரப்படும் செம்மரங்களை கண்ணன்கோட்டை வழியாக திருப்பிப் பத்திரமாக செங்குன்றம் வரை வழியனுப்பி வைக்கும் வேலையைத்தான் குணசேகர் செய்துவந்தார். இடையில் போலீஸ் செக்கிங் நடைபெற்றால் கடத்தல்காரர்களுக்குத் தகவல் கொடுக்கும் இன்ஃபார்மராக இருந்தவருக்கு ஆந்திரா, தமிழகத்தைச் சேர்ந்த பல செம்மரக் கடத்தல்காரர்கள் பழக்கமாகினர். அந்த வகையில் செங்குன்றத்தைச் சேர்ந்த அ.தி.மு.க உறுப்பினர் பார்த்தீபனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் செம்மரம் கடத்தும் பிசினஸில் குணசேகரும் ஈடுபடத் தொடங்கினார். பணம் மழையாகக் கொட்டத் தொடங்கியது.

2010-ம் ஆண்டுவாக்கில் தி.மு.க திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளரான கும்மிடிப்பூண்டி வேணுவிடம் குணசேகர் ஐக்கியமாகிவிட்டார். மாநாடு, கூட்டம் என எதுவென்றாலும் கேட்ட நேரத்தில் பணம் திரட்டிக் கொடுப்பதால் குணசேகரின் செல்வாக்கு, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் கோலோச்சியது. 2015-ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்குக் காய்நகர்த்திய குணசேகருக்கு அப்பதவி கிடைக்கவில்லை. தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பதவி அளித்து சமாதானப்படுத்தினர். அச்சமயத்தில் பார்ச்சூனர் கார் வாங்கிய குணசேகர் ஆந்திராவில் செம்மர பிசினஸுக்காகச் சென்றிருந்தபோது, அம்மாநிலக் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆறுமாதம் சிறையில் இருந்த குணசேகரை பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு வெளியே எடுத்தனர்.

ஆந்திர காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட குணசேகரின் கார்
ஆந்திர காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட குணசேகரின் கார்

இந்த நிலையில்தான், 2019 உள்ளாட்சித் தேர்தல் வந்தது. குணசேகரின் வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தன் மனைவி மாலதியை வேட்பாளராகக் களமிறக்கினார். மாலதியை வெற்றி பெறவைத்து கும்மிடிப்பூண்டி ஒன்றிய துணைத் தலைவராகவும் ஆக்கினார். பெயருக்குத்தான் மாலதி துணைத் தலைவரே தவிர, அதிகாரத்தைக் கையாள்வது எல்லாம் குணசேகர்தான். இதன்மூலமாக தி.மு.கவில் மட்டுமல்லாமல் மற்ற கட்சியினரிடமும் அதிகாரிகளிடமும் நல்ல இணக்கம் குணசேகருக்கு ஏற்பட்டது. பதவி கிடைத்த குஷியில் தனது 50-வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட நினைத்தவருக்குக் கொரோனா ரூபத்தில் ஆபத்து வந்து முடிந்துள்ளது.

`போலீஸுக்கு ஏன் இவ்வளவு கோபம்?' - வைரலான கோவைச் சிறுவன்-எஸ்.ஐ மோதல்

பிரியாணியும் கொரோனாவும்!

கடந்த ஜூன் 19-ம் தேதி மாநெல்லூர் அருகேயுள்ள தனது மாந்தோப்பில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை குணசேகர் செய்திருந்தார். இரண்டு சுயேச்சை, இரண்டு தி.மு.க., ஒரு கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களைத் தவிர கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மீதி 21 கவுன்சிலர்களும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துள்ளனர். இதுபோக அரசு உயர் அலுவலகர்கள், கட்சிப் பிரமுகர்கள் என நூற்றுக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டன் பிரியாணி, ஆந்திரா மதுபான வகைகளோடு பட்டையைக் கிளப்பிய இந்த விருந்தில்தான் கொரோனாவும் புகுந்துவிட்டது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர் ஒருவர் காய்ச்சலுடன் அனைவரையும் கட்டித் தழுவியதுதான் கொரோனா பரவலுக்குக் காரணமாக அமைந்துவிட்டதாம்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜூன் 20-ம் தேதி அந்த அரசு அலுவலருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் பதறிப் போன குணசேகர் உடனடியாக தானும் கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளார். அதில் அவருக்கு ‘பாசிட்டிவ்’ ரிசல்ட் கிடைத்ததும் விழாவில் கலந்து கொண்ட மற்றவர்கள் திகிலில் உறைந்துவிட்டனர். குணசேகரின் விழாவில் கலந்து கொண்ட தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் பேசினோம். “குணசேகர் எப்போதுமே விழா கொண்டாட்டங்களைப் பட்டையைக் கிளப்புவார். நெய்யில் வறுத்த மட்டன் பிரியாணி மணம் தூள் கிளப்பும். இதற்காகவே ஒருகூட்டம் அவர் எப்போது விழாவுக்கு அழைத்தாலும் சென்றுவிடும். இப்படித்தான் பிரியாணிக்கு ஆசைப்பட்டு பலரும் சென்றிருந்தோம். ஊரடங்கு உத்தரவையும் மீறிச் சென்றதால், கடைசியில் கொரோனாவை வாங்கிக் கொண்டதுதான் மிச்சம்” என்று வேதனைப்பட்டார்.

`அபராதம் எல்லாம் கட்ட முடியாது!' -பெண் ஆய்வாளரை அவதூறாகப் பேசிய தி.மு.க ஒ.செ?

குணசேகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு ஆரம்பாக்கம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி ஒன்றாகக் கூடியதால் குணசேகர் உட்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை ஐந்துபேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், விழாவில் பங்கேற்றவர்களின் கார் எண்களைக் கொண்டு மற்றவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது.

பிரியாணியுடன் கொண்டாட்டம்
பிரியாணியுடன் கொண்டாட்டம்

இது அரசியல் காழ்ப்புணர்ச்சி !

குணசேகரனும் அவர் குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக்கொண்டதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் தரப்பில் பேசியவர்கள், “மாநெல்லூரை பூர்வீகமாகக் கொண்ட குணசேகரின் குடும்பம் விவசாயம், சிறுதொழில்கள் செய்து நல்ல பெயரை சம்பாதித்துள்ளது. இவருக்குச் சொத்து மதிப்பே பத்துக் கோடியைத் தாண்டும். கடந்த ஆண்டு வருமானவரியாக இரண்டரை லட்ச ரூபாய் குணசேகர் செலுத்தியுள்ளார். பணத்துக்காக செம்மரக்கடத்தல் பிசினஸ் செய்யும் நிலை குணசேகருக்கு இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிலர் இப்படிப்பட்ட அவதூறுகளைப் பரப்புகிறார்கள். பிறந்தநாள் விழாவை தனது குடும்பத்துடன் கொண்டாட நினைத்திருந்தார். சில கட்சியினரும் அவர்களாகவே வந்து வாழ்த்தியதால், அவர்களை வெளியேறச் சொல்ல முடியவில்லை. வாழ்த்தவந்த ஒரு அரசு அலுவலர் மூலமாக கொரோனா தொற்று ஏற்பட்டதால், விழாவில் பங்கேற்றவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். மற்றபடி, இதில் எந்த சர்ச்சையும் இல்லை” என்றனர்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளரான கும்மிடிப்பூண்டி வேணுவிடம் பேசினோம். “தளபதி ஸ்டாலின் கூறியபடி பொது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, தொலைபேசி வாயிலாகவே கட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொள்கிறேன். பிறந்தநாள் விழா எதுவும் நடத்தப் போவதில்லை என்றுதான் குணசேகர் என்னிடம் கூறினார். உண்மை நிலவரம் எனக்கு முழுதாகத் தெரியவில்லை. ஆனால் விழாவில் 500 பேர், 200 பேர் பங்கேற்றதாக இட்டுக்கட்டிய செய்திகளைப் பரப்புவது எதிர்க்கட்சிகள்தான். இப்போது 20 பேர் வரை பங்கேற்றதாகக் கூறுகிறார்கள். எதிர்க்கட்சிகள்தான் இந்த விவகாரத்தைப் பெரிதுப்படுத்துகின்றன” என்றார்.

கும்மிடிப்பூண்டி வேணு
கும்மிடிப்பூண்டி வேணு

கொரோனா பாதித்து தி.மு.க. எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைந்துவிட்ட நிலையில், தொற்று பரவலை தி.மு.க தலைமை சீரியஸாகவே பார்க்கிறது. இந்தநிலையில், தி.மு.க பொதுக்குழு உறுப்பினரான குணசேகர் கொரோனா பரவல் சர்ச்சையில் சிக்கியிருப்பது அக்கட்சியில் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு