தி.மு.க-வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. `வேட்புமனுத் தாக்கலும் சம்பிரதாயமாகவே நடந்தது. ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட பதவி என்பதால், சீனியர்களில் சிலர் வருத்தத்தில் உள்ளனர்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.
தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு புதிய பொதுச்செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. `சீனியாரிட்டி அடிப்படையில் பொருளாளராகப் பதவிவகிக்கும் துரைமுருகனே தேர்வு செய்யப்படுவார்' என அப்போது தகவல் வெளியானது. இதற்காக தனது பொருளாளர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, மார்ச் மாதம் நடக்க வேண்டிய பொதுக்குழு, கொரோனா பரவல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, ` பொருளாளராக துரைமுருகனே தொடர்வார்' எனவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதனால் கட்சி நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்தநிலையில், வரும் செப்டம்பர் 9-ம் தேதி தி.மு.க பொதுக்குழு கூட இருக்கிறது. இதையொட்டி, பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு வேட்புமனுக்கள் விநியோகிக்கப்பட்டன. இதில், துரைமுருகனுக்கு ஆதரவாக வேலூர், ஆம்பூர் பகுதி தி.மு.க நிர்வாகிகள் பணம் கட்டினர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி என்பதால், டி.ஆர்.பாலுவுக்காக தா.மோ.அன்பரசன், தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் பணம் கட்டினர். `இந்தப் பதவிகளுக்கு நாங்களும் போட்டியிட விரும்புகிறோம்' என வேறு எந்த சீனியர்களும் பணம் கட்டவில்லை. இதையடுத்து, துரைமுருகனும் டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வுசெய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
`` தி.மு.க-வைப் பொறுத்தவரையில் மூன்று நாற்காலிகள் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன. ஒன்று தலைவர் நாற்காலி, மற்றவை பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான நாற்காலிகள். தலைவர் பதவியைத் தவிர, மற்ற இரண்டு நாற்காலிகளையும் சீனியர்கள் பலரும் விரும்புவதுண்டு. பேராசிரியர் மறைவுக்குப் பிறகு இந்த இரண்டு நாற்காலிகளையும் குறிவைத்துப் பலரும் காய்நகர்த்தினர்" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர்,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
`` சீனியர் என்ற அடிப்படையில் துரைமுருகனுக்குப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டாலும், அடுத்துள்ள பொருளாளர் பதவிக்கு எ.வ.வேலு உட்பட பலரும் போட்டியிட்டனர். டி.ஆர்.பாலுவிடம் இருந்த தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவி, கே.என்.நேருவிடம் கொடுக்கப்பட்டது. இதனால், வேறு எந்தப் பதவிகளும் இல்லாமல் இருந்தார் டி.ஆர்.பாலு. அவரையே பொருளாளர் பதவிக்குக் கொண்டு வரவிருக்கின்றனர். இதனால் அதிருப்தியில் இருக்கும் பொன்முடி, ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்போகிறார்கள் என்றெல்லாம் தகவல் பரவியது. அதில் உண்மையில்லை. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய இரண்டு பேர் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். மற்ற பதவிகளுக்கு வேறு எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை" என விவரித்தவர்கள்,
`` அறிவாலயத்தில் வேட்புமனுத் தாக்கலும் சம்பிரதாயமாகவே நடந்ததில் சீனியர்கள் சிலருக்கு வருத்தம்தான். தலைவர் சொல்லிவிட்டார் என்பதால் அவர் சொன்ன நபர்களின் பெயர்களிலேயே பணத்தைக் கட்டினர். இதுவே, வெளிப்படையாகத் தேர்தல் நடந்திருந்தால், நான்கு பேர் கூடுதலாக தங்களின் பெயர்களில் பணம் கட்டியிருப்பார்கள். அப்படியே சீனியர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்தாலும், அவர்களின் வேட்புமனுக்களை வாங்குவதற்கு அறிவாலயத்தில் யாரும் இருக்கப்போவதில்லை என்பது வேறு விஷயம். காரணம், இது தீர்மானிக்கப்பட்ட பதவி என்பதுதான். அதனால் வேறு வழியில்லாமல் அவர்கள் பெயரில் பணம் கட்டிவிட்டு, வாழ்த்துச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர். இதை சர்வாதிகாரம் கலந்த ஜனநாயகமாகத்தான் பார்க்கிறோம். சர்வாதிகாரம் என்பது இருவரை ஏற்கெனவே தீர்மானித்துவிட்டது, ஜனநாயகம் என்பது வேட்புமனுத் தாக்கல் என்ற நாடகத்தை அரங்கேற்றியது" என ஆதங்கத்தோடு பேசி முடித்தனர்.
`` பேராசிரியர் அன்பழகன் வகித்த பதவி தனக்கு வந்து சேர்வதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் துரைமுருகன். இது தொடர்பாக, கட்சியின் சீனியர், ஜூனியர் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவரிடமும் பாசத்தைக் கொட்டிவருகிறார். கழகத்தின் சட்டவிதிகளின்படி பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட உள்ளவரை மூத்த நிர்வாகிகள் முன்மொழிய வேண்டும். அந்த வரிசையில், துரைமுருகனை கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட சீனியர்கள் முன்மொழிய இருக்கிறார்கள்.
தவிர, இதில் வேறு ஓர் அரசியலும் உள்ளது. சென்னை மேற்கு மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக சிற்றரசுவைக் கொண்டு வந்ததில் கட்சியின் சீனியர்கள் பலரும் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். இந்தக் கோபத்தை அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் வெளிப்படையாகவே காட்டினார்கள். `எந்தப் பின்புலத்தின் அடிப்படையில் சிற்றரசு நியமிக்கப்பட்டார்... அவர் பதவிக்கு கொண்டு வரப்படுவதே அறிவிப்பு வெளியான பிறகுதான் தெரியும். இதுவே கலைஞராக இருந்திருந்தால் எங்களிடம் ஒரு வார்த்தை கேட்டிருப்பார்' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்தத் தகவல் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. மேலும், சில மாவட்டங்களில் உதயநிதியின் ஆதரவாளர்கள் பதவிக்குக் கொண்டுவரப்பட்டனர். இதனால், மாவட்டங்களிலுள்ள சீனியர்கள் கலக்கத்தில் இருந்தனர்.

அந்த வரிசையில் பொருளாளர் பதவிக்கு எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் நிறுத்தப்பட்டிருந்தால் புகைச்சல் அதிகரித்திருக்கும். துரைமுருகனும் டி.ஆர்.பாலுவும் சீனியர்கள் என்பதால் எந்த அதிருப்தியும் ஏற்படவில்லை" என்கின்றனர் உடன்பிறப்புகள் வட்டாரத்தில். செப்டம்பர் 9 பொதுக்குழுவுக்கான ஆயத்த பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.