Election bannerElection banner
Published:Updated:

`தியாகத்துக்கும் கொள்ளைக்கும் வித்தியாசம் இல்லையா?’- சசிகலாவை விமர்சித்த துரைமுருகன்

துரைமுருகன்
துரைமுருகன்

``தண்டனையை முழுமையாக அனுபவித்துவிட்டு, அபராதம் கட்டி வெளியில் வந்த சசிகலாவுக்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். தியாகத்துக்கும் கொள்ளைக் கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது’’ என்று விமர்சித்திருக்கிறார் துரைமுருகன்.

வேலூர், காட்பாடியில் இன்று நடந்த தி.மு.க நிகழ்ச்சியில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``இன்றைக்கு கிருபானந்த வாரியார் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அருள்மிகு கிருபானந்த வாரியார் மறைந்து பல ஆண்டுகளாகின்றன. இப்போதுதான் முதல்வரிடம் யாரோ சென்று,`வாரியார் என்று ஒருவர் இருந்தார்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்டு முதல்வரும் அரசு விழாவாக அறிவித்திருக்கிறார்.

துரைமுருகன்
துரைமுருகன்

முதலில், வாரியார் மீது இந்த ஆட்சிக்கு மரியாதை இருந்திருக்கிறதா? வாரியாரின் உயிர் விமானத்திலேயே பிரிந்தது. சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள அவரின் வீட்டுக்கு திரு உடலைக் கொண்டுவந்து வைத்தார்கள். கலைஞர் அங்கு சென்று மரியாதை செய்துவிட்டு, `ஞானப்பழம் ஒன்று முதிர்ந்து, உதிர்ந்துவிட்டது’ என்று பெரிய அறிக்கைவிட்டார். அன்றைக்கு நான் எம்.எல்.ஏ கிடையாது. இருந்தபோதும், கலைஞர் என்னை அழைத்து,`வாரியாரின் திருச்சடலம் காங்கேயநல்லூருக்குப் போகிறது. நீ உடனே போய் அருகிலிருந்து கவனி’ என்று சொன்னார்.

இறுதிச்சடங்கில், என்னுடன் குமரி அனந்தன், கமலா தியேட்டர் உரிமையாளர் சிதம்பரம் ஆகிய இரண்டு பெரிய மனிதர்களும் கலந்துகொண்டனர். அப்போது, அ.தி.மு.க ஆட்சி நடந்துகொண்டிருந்தது. வாரியார் உடலுக்கு அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு மந்திரிகூட மரியாதை செலுத்த வரவில்லை. அவ்வளவு ஏன், அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரமுகர்கூட நேரில் வந்து மலர் மாலை வைக்கவில்லை. பிள்ளையைப்போல் முன்னின்று வாரியார் உடலைத் தூக்கிச் சுமந்தவர்களில் நானும் ஒருவன். அதன் பின்னரும் எத்தனையோ தேர்தல்கள் வந்துவிட்டன. வாரியார் பெயரை அவர்கள் உச்சரிக்கவே இல்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நாட்டில் போராட்டம் நடத்தி சிறைத் தண்டனை பெற்றவர்கள் வெளியே வரும்போது, மகத்தான வரவேற்பு கொடுப்பதுண்டு. நான் படித்த வரலாற்றிலும் அரசியலிலும் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், தண்டனையை முழுமையாக அனுபவித்துவிட்டு அபராதம் கட்டி வெளியில் வந்த சசிகலாவுக்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். தியாகத்துக்கும், கொள்ளைக் கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது.

சசிகலா வருகிறார்... வருகிறார்... என்று சொன்னது முதல் அவர் வந்துவிட்டது வரையில் எந்தக் கருத்தும் சொல்லாமல் வீட்டுக்குள்ளேயே மௌனமாக அமர்ந்திருக்கிறார் ஓ.பி.எஸ். அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவு ஏற்படுத்த ஓ.பி.எஸ் ஏதாவது சதி செய்கிறாரா என்று இ.பி.எஸ்-ஸைப் பார்க்கச் சொல்லுங்கள். முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தால், அது கண்டிக்கத்தக்கது. அத்தகைய கலாசாரம் வளர யாரும் துணைப்போகக் கூடாது’’ என்றார் துரைமுருகன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு