Published:Updated:

`மூன்று தலைமுறைகளாகத் தொடரும் குடும்ப நட்பு!' -தாத்தாவுக்குப் பிறகு மா.செ-வான அன்பில் மகேஷ்

ஸ்டாலின், அன்பில் மகேஷ்
ஸ்டாலின், அன்பில் மகேஷ்

தி.மு.க திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். 30 வருடங்களுக்குப் பிறகு, தன் தாத்தா அன்பில் தர்மலிங்கம் வகித்த மாவட்டச் செயலாளர் பொறுப்பை தன்வசப்படுத்தியிருக்கிறார்.  

திருச்சி தி.மு.க மாவட்டச் செயலாளராகக் கடந்த 28 வருடங்களாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தி.மு.க-வின் முதன்மைச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். அதையடுத்து அவர் வகித்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க கடுமையான போட்டி நிலவியது.

திருச்சி மாநாட்டில் நேருவுடன் அன்பில் மகேஷ்
திருச்சி மாநாட்டில் நேருவுடன் அன்பில் மகேஷ்

முதன்மைச் செயலாளரான பின்னர், மாவட்ட அரசியலில் தனக்கு விசுவாசமானவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என கே.என்.நேரு திட்டமிட்டார். இதனால், தன்னுடைய ஆதரவாளர்களான மாநகரச் செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர்கள் பாஸ்கரன், வைரமணி ஆகியோரின் பெயர்களைத் தலைமைக்குப் பரிந்துரை செய்தார்.

அதேநேரம், தி.மு.க தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் தனக்குள்ள நெருக்கத்தின் மூலம் அன்பில் மகேஷும் மா.செ பதவிக்கு காய் நகர்த்தினார். `என் தாத்தா அன்பில் தர்மலிங்கத்துக்குப் பிறகு, தங்கள் குடும்பத்தில் யாரும் மாவட்டச் செயலாளராக இல்லை. எனவே, எனக்கு மாவட்டச் செயலாளர் வாய்ப்பு வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார்.

இந்தநிலையில், இருதரப்பையும் திருப்திப்படுத்தும் விதமாக ஏற்கெனவே வடக்கு, தெற்கு என்றிருந்த திருச்சி மாவட்டத் தி.மு.க-வை மூன்றாகப் பிரித்து புதிய மாவட்டப் பொறுப்பாளர்களை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன், முசிறி, துறையூர் மற்றும் மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது திருச்சி வடக்கு மாவட்டம் என்றும் அதன் மாவட்டச் செயலாளராக காடுவெட்டி தியாகராஜன் நியமிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார்.

உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்
உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்

திருச்சி மேற்கு, ஶ்ரீரங்கம் மற்றும் லால்குடி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது திருச்சி மத்திய மாவட்டம் என்று அறிவித்து, மாவட்டச் செயலாளராக திருச்சி லால்குடியைச் சேர்ந்த தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் வைரமணியை நியமித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோல், திருவெறும்பூர், மணப்பாறை மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது திருச்சி தெற்கு மாவட்டம் என்றும் அதன் பொறுப்பாளராக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் நியமிக்கப்படுவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அன்பில் மகேஷ் தெற்கு மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டதை அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அன்பில் தர்மலிங்கம்
அன்பில் தர்மலிங்கம்
`மா.செ ஆகும் அன்பில் மகேஷ்; முக்கிய பொறுப்பில் கே.என்.நேரு!'- திருச்சிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் ஸ்டாலின்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மகேஷின் ஆதரவாளர்கள், ``தி.மு.க வரலாற்றில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக வலம்வந்தவர் அன்பில் தர்மலிங்கம். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர். முன்னாள் அமைச்சராகவும் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர். அவர்களின் நட்பு, தலைமுறைகளைக் கடந்து, கருணாநிதி - அன்பில் தர்மலிங்கம், அவர்களின் மகன்களான ஸ்டாலின்- அன்பில் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் - அன்பில் மகேஷ் எனத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொய்யாமொழி இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக இருந்தார். அவரைத்தொடர்ந்து அவரின் தம்பி அன்பில் பெரியசாமி எம்.எல்.ஏ-வாக இருந்தார்.

அன்பில் பொய்யாமொழி, இளம்வயதிலேயே மரணமடைந்தார். தற்போது அவரின் மகன் அன்பில் மகேஷ், முதலில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைமை நிர்வாகியாக அறிமுகமானார். தொடர்ந்து, தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளராகவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பயணத்திலும் உதயநிதி ஸ்டாலின் பயணத்திலும் நிழலாக வலம்வந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ்
ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ்

தனது அரசியல் செல்வாக்கு மூலம் திருச்சி மாவட்டச் செயலாளராகும் முயற்சியில் அன்பில் மகேஷ் தொடக்கம் முதலே ஈடுபட்டு வந்தார். அது தற்போது நிறைவேறியுள்ளது. அவரது தாத்தா அன்பில் தர்மலிங்கத்தின் வசமிருந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பு, முன்னாள் அமைச்சர்கள் செல்வராஜ், கே.என்.நேரு எனப் பலரிடம் சென்று சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு, அந்த இடத்தை அன்பில் மகேஷ் பிடித்துள்ளார்” என்றார்கள்.

உதயநிதி கோரிக்கை... துரைமுருகன் அக்கறை... ஸ்டாலின் சூளுரை... திருச்சி மாநாட்டுத் துளிகள்!

இதுமட்டுமல்லாமல், அன்பில் மகேஷ், தன் தாத்தா, அப்பா, சித்தப்பா போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியைக் குறிவைத்தே மாவட்டச் செயலாளர் பொறுப்பை கேட்டுப் பெற்றுள்ளார் எனவும் சுட்டிக் காட்டுகின்றனர் திருச்சி உடன்பிறப்புகள்.

அடுத்த கட்டுரைக்கு