Published:Updated:

`மோடி வாயால் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!’ - தி.மு.க பலே திட்டம்

 ஸ்டாலின் - மோடி
News
ஸ்டாலின் - மோடி

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வரும் ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார் பிரதமர் மோடி. அந்தச் சமயத்தில், அவர் வாயாலேயே தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்லவைக்க தி.மு.க தலைமை திட்டமிட்டிருப்பதாகக் கசியும் தகவலால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சித்திரை 1-ம் தேதி கொண்டாடப்பட்டுவரும் தமிழ்ப் புத்தாண்டை, தை 1-ம் தேதிக்கு மாற்றி அறிவிக்கக் கோரி திராவிடர் கழகம், பா.ம.க உள்ளிட்ட இயக்கங்கள் நீண்டகாலமாகவே கருத்தை முன்வைத்துவருகின்றன. மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தை 1 தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது. பிறகு ஆட்சிக்கு வந்த, மறைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பழைய முறைப்படி சித்திரை 1-ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றினார். தற்போது தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், இந்தக் கருத்து யுத்தம் மீண்டும் வலுவடைந்திருக்கிறது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக தமிழக அரசு வழங்கவிருக்கும் பையில், 'தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்' என்கிற வாசகம் இடம்பெற்றிருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் படங்கள் உலா வந்தன.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

இது குறித்து உடனடியாக ரியாக்ட் செய்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "பல்வேறு மக்கள் பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்பவே தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சையை மீண்டும் தொடங்கியிருக்கிறது தி.மு.க அரசு. எப்போதும், சித்திரை 1-ம் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும்" என்றிருக்கிறார். இந்தச் சூழலில், வரும் ஜனவரி 12-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வரவிருக்கிறார் பிரதமர் மோடி. அவர் வாயாலேயே 'தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து' சொல்லவைத்து, அதன் மூலம் அரசியல் லாபமடைய தி.மு.க தலைமை திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், "ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வரும் மோடி, சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டடங்களைத் திறந்துவைக்கவிருக்கிறார். திருவள்ளுவர், தமிழ்த்தாய், தொல்காப்பியர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளையும் பிரதமர் திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் வாயாலேயே 'தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து' சொல்லவைக்க தி.மு.க அரசின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1932-ல் பச்சயப்பன் கல்லூரியில்கூடிய தமிழ் அறிஞர்கள், 'தை 1-ம் தேதியைத்தான் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும்' என்று முடிவெடுத்தனர். இது பற்றிய தரவுகளெல்லாம் மோடிக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழ் மொழி மீதும், திருவள்ளுவர் மீதும் மோடிக்கு அளப்பரிய அன்பு உண்டு. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்வார் என்பது தி.மு.க தலைமையின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பில் சில அரசியல் கணக்குகளும் இருக்கின்றன.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

உத்தரப்பிரதேசத் தேர்தல் பிரசாரத்தில், பா.ஜ.க-வுக்கு பின்னடைவான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி முன்னிலை பெற்றிருக்கிறது. இந்த மாநிலத் தேர்தல் முடிவு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால், இப்போதிருந்தே தி.மு.க போன்ற வலுவான மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல பாதை அமைக்கிறது பா.ஜ.க. அதன் முதல் படியாகத்தான், 'ஸ்டாலின் ஒரு சக்தி வாய்ந்த முதல்வராகத் திகழ்கிறார்' என்று சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார். ஒருவேளை உ.பி-யில் பா.ஜ.க தோல்வியுற்றால், தி.மு.க போன்ற இயக்கங்களின் மறைமுக ஆதரவு மாநிலங்களவையில் பா.ஜ.க-வுக்குக் கட்டாயம் தேவைப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேசமயம், மத்திய நிதி பங்களிப்பு இல்லாமல் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க அரசால் செயல்படுத்த முடியவில்லை. இனி, மத்திய பா.ஜ.க அரசுடன் பகையை வளர்க்காமல் இணக்கமாகச் செல்வதையே அறிவாலயமும் விரும்புகிறது. இந்த இரு அரசியல் கணக்குகள் ஒன்றிணையப் போகும் இடம்தான் 'தமிழ்ப் புத்தாண்டு' விவகாரம். மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்லிவிட்டால், அதைவைத்தே தமிழக அரசியலில் தங்களின் 'கிராப்'பை ஏற்றிக்கொள்ளப் பார்க்கிறது தி.மு.க. தத்துவார்த்த அரசியலைத் தவிர, பிரதமருக்கும் இதில் இழப்பு ஏதுமில்லை. தி.மு.க-வுடன் நெருங்குவதற்கு அவர்களுக்கு ஒரு புதிய பாதை பிறக்கும். தி.மு.க தலைமை எடுக்கும் இந்த முயற்சி பலனளிக்கிறதா என்பது வரைவில் தெரிந்துவிடும்" என்றனர்.

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

தி.மு.க எடுக்கும் இந்த முயற்சி பற்றிய தகவல் லீக் ஆனதால், அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது பா.ஜ.க வட்டாரம். 'தமிழ்ப் புத்தாண்டை மாற்றக் கூடாது' என்று தமிழக பா.ஜ.க போர்க்குரல் எழுப்பிவரும் நிலையில், அந்த நிலைப்பாட்டுக்கு மாற்றாக பிரதமர் எதுவும் பேசிவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறதாம் கமலாலயம். 'பிரதமர் உரையை நீங்களே தயாரித்து, அதை தமிழக பா.ஜ.க-வினரிடமும் ஒரு பார்வைக்கு அனுப்பிவையுங்கள். பிரதமரின் உரை தொடர்பாக தமிழக அரசிடமிருந்து எந்த இடைச்செருகல் வந்தாலும், எங்களைக் கலந்தாலோசிக்காமல் அதைப் பயன்படுத்த வேண்டாம்' என்று பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பியிருக்கிறதாம் தமிழக பா.ஜ.க வட்டாரம்.