முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 99 -வது பிறந்தநாளை முன்னிட்டு தேனி அருகேயுள்ள கொடுவிலார்பட்டியில் கிளைக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கொடுவிலார்பட்டி திமுக கிளைச் செயலாளர் ராஜ்குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் கொடுவிலார்பட்டியிலுள்ள அருந்ததியர் காலனியில், இலவச சேலை, அன்னதானம்,வேலைவாய்ப்பு முகாம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் நிகழ்ச்சி நடைபெறும் அருந்ததியர் காலனிக்கு வந்த 20 நபர்கள் அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் கிழித்தெறிந்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிறகு சிறிது நேரத்தில் அங்கிருந்த டியூப் லைட்களை எடுத்து பொதுமக்கள் மீது தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் நாற்காலிகளை உடைத்ததோடு இரும்புக்கம்பியால் பெண்கள் உட்பட பலர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அந்தப் பகுதியை சேர்ந்த பாண்டியன் (39) என்பவரின் மண்டை உடைந்தது. திமுக கட்சிக்கொடி, தலைவர்கள் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் கிழிக்கப்பட்டன. அங்கு நிலவிய அசாதாரண சூழலால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறாமல் நிறுத்தப்பட்டது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த பாண்டியனை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் கொடுவிலார்பட்டி-கண்டமனூர் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே தாக்குதல் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் பழனிச்செட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இது குறித்து கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த திமுக-வினரிடம் பேசினோம். ``தேனி தெற்கு ஒன்றியச் செயலாளர் தேர்தலில் போட்டியிட ராஜ்குமார் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். விரைவில் அவருக்குச் சாதமாக அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. இதைப் பிடிக்காதவர்கள்தான் பிரச்னையை ஏற்பட்டுத்தியிருக்கிறார்கள். இதில் சம்பந்தபட்டவர்களைக் கைதுசெய்து எங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்தனர்.
உட்கட்சிப்பூசலால் மு.கருணாநிதியின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நிகழ்ந்திருக்கும் இந்த அடிதடித் தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.