Published:Updated:

சிக்னல் காட்டிய தலைமை; எம்.எல்.ஏ-வுடன் மோதும் ஒன்றியப் பொறுப்பாளர்! - பரபரக்கும் தஞ்சாவூர் திமுக

முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க-வில் தஞ்சாவூர் தெற்கு மா.செ பதவிக்கு, அண்ணாத்துரையை மனுத்தாக்கல் செய்யுமாறு தலைமை சொல்லியிருந்ததாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் மற்றொரு நிர்வாகியும் மனுத்தாக்கல் செய்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிக்னல் காட்டிய தலைமை; எம்.எல்.ஏ-வுடன் மோதும் ஒன்றியப் பொறுப்பாளர்! - பரபரக்கும் தஞ்சாவூர் திமுக

தி.மு.க-வில் தஞ்சாவூர் தெற்கு மா.செ பதவிக்கு, அண்ணாத்துரையை மனுத்தாக்கல் செய்யுமாறு தலைமை சொல்லியிருந்ததாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் மற்றொரு நிர்வாகியும் மனுத்தாக்கல் செய்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான மனுத்தாக்கல் சென்னை அறிவாலயத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க பலர் கடுமையாகப் போட்டியிட்டனர். குறிப்பாக தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க நான்குமுனைப் போட்டி நிலவியது. ரேஸில் இருப்பவர்கள் தலைமையிடம் நெருக்கமாக இருக்கக்கூடிய தங்களுக்குத் தெரிந்த நிர்வாகிகள் மூலம் முயன்றுவருகின்றனர்.

பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாத்துரை
பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாத்துரை

இந்த நிலையில் தி.மு.க தலைமை ஒருவரை மட்டும் மனுத்தாக்கல் செய்ய வலியுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியானது. அதன்படி பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாத்துரை மட்டும் தெற்குச் செயலாளர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த நிலையில் மேலும் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார்
பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார்

இது குறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். ``பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இதன் மாவட்டப் பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்ரமணியன் இருந்துவருகிறார். இந்த நிலையில், மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க ஏனாதி பாலசுப்ரமணியன், எம்.எல்.ஏ அண்ணாத்துரை, மாநில கலை இலக்கியப் பிரிவின் துணைச் செயலாளரான தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம், பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றியப் பொறுப்பாளரான பார்த்திபன், மதுக்கூர் கிழக்கு ஒன்றியச் செயலாளரான இளங்கோவன் உள்ளிட்டவர்களிடையே கடுமையான போட்டி நிலவியது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமாருக்குக் கிடைக்கப்போவதாகப் பரவலான பேச்சுகள் எழுந்தன. மொய் விருந்து நடத்தி வசூல் செய்த விவகாரம் உள்ளிட்டவற்றால் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க முயற்சி செய்யாமல் தானாகவே அதிலிருந்து விலகினார் அசோக்குமார்.

பழஞ்சூர் செல்வம்
பழஞ்சூர் செல்வம்

தற்போதைய பொறுப்பாளரான ஏனாதி பாலசுப்ரமணியன்மீது, கட்சி அலுவலகத்திலேயே மது அருந்தியது, கட்சிப் பணிகளை முறையாக மேற்கொள்வதில்லை உள்ளிட்ட பல புகார்கள் கட்சித் தலைமைக்குச் சென்றன. இதனால் அவருக்கான வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கைநழுவ ஆரம்பித்தது.

தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம் துபாய், சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பல்வேறு தொழில்களைச் செய்துவருபவர்.

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு போன்ற முக்கியஸ்தர்கள் வரும்போது அவர்கள் காரில் ஏறிச் செல்லக்கூடிய அளவுக்கு செல்வாக்கு படைத்தவராக வலம்வருகிறார். தஞ்சாவூரில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றை திறந்துவைக்க வந்த துரைமுருகனுக்கு தங்கச்சங்கிலி பரிசாகக் கொடுத்து அசரவைத்தார். `அடடே அழகா இருக்குய்யா...'னு சிரிச்சுக்கிட்டே சொன்ன துரைமுருகனிடம். `வெளிநாட்டு தங்கம்ணே’ என்றாராம் செல்வம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட்டுக்காக செல்வம் பல வழிகளில் முயன்றும் பலனில்லாமல் போனது. தற்போது மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடித்தே தீர வேண்டும் என மெனக்கெட்டார்.

இதேபோல் ஸ்டாலினிடமே நேரடியாக அப்பாயின்ட்மென்ட் வாங்கிச் சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர் பார்த்திபன். தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும் சமயத்திலேயே தன் சொந்தப் பணத்தில் ஆக்டிவ்வாக கட்சிப் பணிகளைச் செய்தவர்.

பார்த்திபன்
பார்த்திபன்

கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வீடு தேடிவந்து கொடுத்ததற்காக தலைமை வரை பாராட்டப்பட்டவர். எம்.எல்.ஏ அண்ணாத்துரைக்கும், பார்த்திபனுக்கும் ஏழாம் பொருத்தம் நிலவிவருகிறது. இதனால் பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட பார்த்திபனுக்கு அந்தப் பதவி கிடைக்கக் கூடாது என அண்ணாத்துரை நேரடியாகவே காய்நகர்த்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பார்த்திபனின் ஆதரவாளர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

இதனால் வடக்கு ஒன்றியச் செயலாளர் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க மெனக்கெட்டுவருகிறார். இந்த நிலையில், தி.மு.க தலைமை, மாவட்டச் செயலாளர் ரேஸில் இருந்தவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. ஏனாதி பாலசுப்ரமணியனிடம், `உங்க மேல பல புகார்கள் வந்து கொண்டேயிருக்கு. ஆக்டிவா வேலை செய்ய முடியலை... பல வருடங்களுக்குப் பிறகு மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுத்தோம். எங்க நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை, அதனால இப்ப நீங்க போட்டி போட வேண்டாம்' எனக் கூறிவிட்டனராம்.

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காது என்பதை அறிந்த பழஞ்சூர் செல்வம், அமைச்சர் நேரு மூலமாகத் தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியைக் கேட்டுவருவதாகத் தகவல். பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரையிடம் நேரடியாகப் பேசிய தலைமை, `30 வருடங்களுக்குப் பிறகு சீட் கொடுத்து எம்.எல்.ஏ-வாக்கினோம். பதவிக்கு வந்தவுடனே உங்க மேல புகார்கள் அணிவகுக்கத் தொடங்கிவிட்டன. இனி அது மாதிரி புகார் எதுவும் வரக் கூடாது'என்று கண்டிப்பு காட்டியதுடன், `நீங்க மனுத்தாக்கல் செய்யுங்க' என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.

ரேஸில் இருந்த மற்றவர்களுக்குத் தலைமையிலிருந்து யாருக்கும் மனுத்தாக்கல் செய்யுங்கள் என உத்தரவு வரவில்லை. இதனால் அண்ணாத்துரைதான் அடுத்த மாவட்டச் செயலாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிருக்கிறது. பெரும்பாலான ஒன்றியச் செயலாளர்களிடம் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பவர் அண்ணாத்துரை. எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் லோக்கல் நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்துவதில்லை.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

பெரும்பான்மையான ஆதரவு இல்லாத அவரை எந்தவிதத்தில் தலைமை மனுதாக்கல் செய்யச் சொன்னது எனத் தெரியவில்லை என்ற எதிர்ப்பு குரல்களும் கேட்கத் தொடங்கியிருக்கின்றன" என்றார்கள்.

அண்ணாத்துரை மனுத்தாக்கல் செய்திருக்கும் நிலையில், பார்த்திபனும் மனுத்தாக்கல் செய்திருப்பது, தேர்தல் களத்தை மேலும் அனலாக்கியிருக்கிறது.