Published:Updated:

ரிட்வீட் இல்லை... டிஃபென்ஸ் இல்லை... தி.மு.க ஐடி விங் குளறுபடிகள்!

செந்தில்குமார்
பிரீமியம் ஸ்டோரி
செந்தில்குமார்

தி.மு.க அணிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான நிர்வாகிகள் இருப்பது ஐடி விங்கில்தான்.

ரிட்வீட் இல்லை... டிஃபென்ஸ் இல்லை... தி.மு.க ஐடி விங் குளறுபடிகள்!

தி.மு.க அணிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான நிர்வாகிகள் இருப்பது ஐடி விங்கில்தான்.

Published:Updated:
செந்தில்குமார்
பிரீமியம் ஸ்டோரி
செந்தில்குமார்

கள அரசியலுக்கு இணையாக சமூக வலைதள செயல்பாடும் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இக்காலத்தில், தி.மு.க ஐடி விங்கின் செயல்பாடு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் அந்தக் கட்சியினர். ‘தி.மு.க ஐடி விங் பதவிகளை வைத்துக்கொண்டு நிர்வாகிகள் சரியாகச் செயல்படுவதில்லை’ என்ற கருத்தை சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் தருமபுரி எம்.பி டாக்டர் செந்தில்குமாரே சொல்லியிருப்பது, இந்தப் பிரச்னையைப் பேசுபொருளாகியிருக்கிறது.

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

இது பற்றி செந்தில்குமாரிடம் பேசினோம். “தி.மு.க அணிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான நிர்வாகிகள் இருப்பது ஐடி விங்கில்தான். இவ்வளவு பலம் இருந்தும் தி.மு.க ஐடி விங்கின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறது. ஒப்பீட்டளவில் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகளெல்லாம் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். முதல்வர் ஒரு கருத்தைப் பதிவிடுகிறார் என்றால் எத்தனை வியூஸ், லைக்ஸ் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதை இன்னும் அதிகமானவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதுதான் ஐடி விங்கின் வேலை. ஐடி விங்கின் ட்வீட்களுக்கு தோராயமாக, ஆறு மணி நேரத்தில் ஒரு லட்சம் லைக்ஸ் கிடைக்க வேண்டும். ஆனால், 240 லைக்ஸ்தான் வருகின்றன. நிர்வாகிகளை 24 மணி நேரமும் வேலை செய்யச் சொல்லவில்லை, ஒரு நாளைக்குக் குறைந்தது 10 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. ஆனால், ஐடி விங் நிர்வாகிகள் பெரும்பாலானோருக்கு சமூக வலைதளக் கணக்கே இல்லை. பதவியே இல்லாமல் பலர் இணையத்தில் களமாடும்போது, ஐடி விங் பொறுப்பில் அமர்ந்துகொண்டு செயலாற்றாமல் இருப்பது சரியில்லை!” என்றார் வருத்தத்துடன்.

ரிட்வீட் இல்லை... டிஃபென்ஸ் இல்லை... தி.மு.க ஐடி விங் குளறுபடிகள்!

“இத்தனை நாள்களாக உள்ளுக்குள் நாங்கள் குமுறிக்கொண்டிருந்ததைப் போட்டு உடைத்துவிட்டார் செந்தில்குமார். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மாநிலச் செயலாளராக இருந்தபோது இருந்ததைவிட இப்போது கூடுதல் நிர்வாகிகளும் கட்டமைப்பும் இருக்கிறார்கள்; வேலைதான் நடக்கவில்லை. டி.ஆர்.பி.ராஜாவோ, முதல்வரோ சாட்டையைச் சுழற்றவில்லை என்றால் ஐடி விங் தொடங்கிய நோக்கமே அடிபட்டுப்போகும்!” என்கிறார்கள் தி.மு.க-வினர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க ஐடி விங் ஆலோசகர் மனுஷ்யபுத்திரனிடம் கேட்டபோது, “டி.ஆர்.பி.ராஜா ஐடி விங்கைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்கிறார். ஆலோசகர் என்ற முறையில் அவருடன் இணைந்து நான் செயல்பட்டுவருகிறேன். சில ஐடி நிறுவனங்களின் துணையுடன் போலியான டிரெண்டிங்கை உருவாக்குவது போன்ற மால்பிராக்டீஸ்களை மற்ற கட்சியினர் செய்கிறார்கள். அவர்கள் போன்று நாங்கள் செயல்பட முடியாது, எங்களுக்கென்று பாலிசி இருக்கிறது. ஐடி விங் என்கிற மிகப்பெரிய கட்டமைப்பைப் பயன்படுத்தி எதிரிகளுக்கு பதில் சொல்வது மட்டுமின்றி, திராவிட இயக்கச் சாதனைகளை முன்னெடுப்பதற்கான மிகப்பெரிய திட்டத்தை உருவாக்கிவருகிறோம். இதன் விளைவுகள் இன்னும் ஒருசில மாதங்களில் தெரியவரும்” என்றார்.

பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism