Election bannerElection banner
Published:Updated:

`நாங்க வேண்டாம்.. எங்க டேட்டா மட்டும் வேணுமா?'- பி.கே-வுக்கு எதிராக கொந்தளிக்கும் தி.மு.க ஐ.டி விங்

ஸ்டாலின் - பிரசாந்த் கிஷோர்
ஸ்டாலின் - பிரசாந்த் கிஷோர்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு துணை அமைப்பாளர்கள் மற்றும் தொகுதி, ஒன்றியம், ஊராட்சி, கிளை என 1,500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க ஐடி விங்க்கில் பூத் வேலை பார்த்து வருகிறோம்.

தி.மு.க ஐ.டி விங் டீம் க்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகத் தொடங்கியிருக்கிறது. ``இத்தனை வருடங்களாக இந்த தி.மு.க என்ற இயக்கத்திற்காக அரும்பாடு பட்டு பணியாற்றியிருக்கிறோம். ஆனால், எங்கிருந்தோ வந்தவருக்கு எங்களிடம் உள்ள தகவல்கள் வேண்டுமாம். ஆனால் எங்களைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டாறாம்" எனக் கொந்தளிக்கிறார்கள் தி.மு.க ஐ.டி விங்க் நிர்வாகிகள். அப்படி என்னதான் இருவருக்குள் பிரச்னை என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காகவும் தி.மு.க.வுக்குப் பணியாற்ற, 'ஐபேக்' நிறுவனரும், தேர்தல் வித்தகருமான பிரசாந்த் கிஷோருடன் தி.மு.க கைகோத்துள்ளது. இதை அதிகாரபூர்வமாக ஸ்டாலின் அறிவித்தியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீட்டில் வைத்து பிரசாந்த் கிஷோருடன் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் கையொப்பமான அன்று பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தின் பிரநிதிநி மட்டுமே உடன் இருந்தார். தி.மு.க பொருளாளர் துரைமுருகன், முதன்மை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு ஆகியோரும் வந்திருந்தனர். இந்த ஒப்பந்தத்தால் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது தமிழகத்தில் உள்ள, 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க, பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளார். அதற்காக, பிரபலமான முக்கியக் கல்லுாரிகளில், மாஸ்டர் டிகிரி முடித்த இளைஞர்களை, மே, அல்லது ஜூன் மாதத்தின் இறுதியில், நேர்முகத் தேர்வு நடத்தும் அறிவிப்பை, அவரது நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, சமூக வலைதளங்களில் வெளியானதைப் பார்த்து, தி.மு.க. ஐ.டி.விங்க் அதிர்ச்சியடைந்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் - பிரசாந்த் கிஷோர்
அரவிந்த் கெஜ்ரிவால் - பிரசாந்த் கிஷோர்

காரணம், 'ஐபேக்' நிறுவனத்துடன், ஐ.டி., அணி நிர்வாகிகளும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதன் பெயரில் தங்களுக்கும் பணி கிடைக்கும் என, அவர்கள் கருதினர். தங்களுக்குப் போட்டியாக, தங்களது மாவட்டத்தில் பணியாற்ற, வேறு நபருக்கு இடம் அளிப்பதை, ஐ.டி., அணி நிர்வாகிகள் விரும்பவில்லை.

இதனால், பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றும் நிலையை, ஐ.டி., அணிக்கு ஏற்படித்தி தரவேண்டும் என்று மத்திய மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், போர்க்கொடி தூக்கியுள்ளனர். அப்படி என்னதான் பிரச்னை என்று தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

``தி.மு.க.வில், அமைப்பு ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐ.டி. அணி அமைப்பாளர்கள் உள்ளனர். அதில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், இரண்டு துணை அமைப்பாளர்கள் மற்றும் தொகுதி, ஒன்றியம், ஊராட்சி, கிளை என 1,500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க ஐடி விங்க்கில் பூத் வேலை பார்த்து வருகிறோம்.

எங்களுடைய வேலை என்னவென்றால் தி.மு.க பற்றிய நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் கட்சியையும் தளபதியைத் தவறாகப் பேசுபவர்களுக்குப் பதிலடி கொடுப்பதற்காக பெரிய டீம்மாக இயங்கிக்கொண்டிருக்கிறது. என்றாவது ஒருநாள் எங்களுக்கு மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ., 'சீட்' கிடைக்கும் என்ற ஆசையில் நாங்கள் மறைமுக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் ஒவ்வொரு தாலுகா முதல் மாநகரம் வரையிலும் ஒரு தொகுதிக்குள் என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பதனை நாங்கள் டேட்டா பேஸாக பக்காவாக வைத்திருக்கிறோம்.

தி.மு.கவினர்
தி.மு.கவினர்

இந்த நிலையில் எங்களை மீறி பிரசாந்த் கிஷோர் கிஷோரின் டீம் தனியாக ஆட்களை நியமிக்கப் போகிறார்களாம். அத்தோடு நாங்கள் வைத்திருக்கும் டேட்டா பேஸ் அவர்களுக்கு வேண்டுமாம். இது எப்படி இருக்கிறது தெரியுமா, நாங்கள் வேண்டாமாம். ஆனால், எங்களுடைய டேட்டா பேஸ் மட்டும் வேண்டுமாம். இதை எப்படி நாங்கள் கொடுக்க முடியும். நீங்களே யோசித்துப் பாருங்கள். எங்களை மீறிச் செயல்பட்டால் கட்டிப்பாக அவருக்கு எதிராகப் பல வேலைகளில் ஈடுபடுவோம்" எனக் கொந்தளிக்கிறார்கள் தி.மு.க ஐ.டி விங்க் நிர்வாகிகள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு